அமுதன் ஈந்த ஆழ்வார்கள் J.K. SIVAN
கண்ணினுட் சிறு தாம்பு - 1


'கட்டிப் போட்டால் தான் நீ வழிக்கு வருவாய் ''


எனக்கு கண்ணினுட் சிறு தாம்பு படித்து புரிந்து கொள்ள சற்று கால அவகாசம் தேவைப்பட்டது. ரெண்டு மூன்று நாளாக அன்னக்கூடை நிகழ்ச்சி (25.11.18) ஏற்பாட்டுக்காக ரொம்ப ஓடியாட வேண்டியிருந்ததால் மதுர கவி ஆழ்வாரை கவனிக்க முடியாமல் கணினியில் ஓய்வெடுக்க வைத்து நேற்றிரவு ஆழ்வாரை படித்து ரசித்ததில் பரம சந்தோஷம்.


பொதுவாகவே ஆழ்வார்களின் பாசுரங்கள்அழகு தமிழில் சமைக்கப் பட்டு மணம் வீசுபவை. எளிமையானவை. இனிய தமிழ்ச் சுவை கொண்டவை. அதிலும் நம்மாழ்வார் பாசுரங்கள் நெஞ்சை அள்ளுபவை. நம்மாழ்வாருக்கே தன்னை அர்பணித்துக் கொண்டவர் மதுர கவி ஆழ்வார். இந்த ஆழ்வாரின் கண்ணினுட் சிறு தாம்பு பத்தே பாசுரங்கள் ஆனாலும் கண்ணனை எப்படி சிறு தாம்புக் கயிறு கட்டுண்ணப் பண்ணியதோ, அதே போல் நம் நெஞ்சை கட்டிப் போடும் அழகிய தெய்வீக பாசுரங்கள்.


எல்லாம் குரு பக்தி ஒன்றிலேயே கட்டுப்பட்டவை. ஆசார்யன் தான் முழு முதல் தெய்வம் என்ற கோட்பாட்டை அழகிய தமிழில் காட்டுபவை. ஆச்சார்ய பக்தி பிரதானமானது என்பதை தெளிவிக்க, பிரபன்ன ஜன கூடஸ்தர் நம்மாழ்வாரின் மேல் பாடிய பாசுரங்கள்.


நாலாயிர திவ்ய பிரபந்தம் அனுஷ்டிக்கிறவர்களுக்கு சிஷ்ட ஆச்சாரம் எது என்பதை விளக்கும் பத்தே பாசுரங்கள் கண்ணினுட் சிறு தாம்பு. கண்ணனை மனதில் ஒரு கணம் நினைத்து கட்டுண்ணப் பண்ணிய கண்ணா என்று மனதால் பிரார்த்தித்து ஆசார்யனையே , நம்பியையே நம் ஆழ்வானாக, பரம்பொருளாக ஆராதித்து எழுதியவை. ஆங்கிலத்திலும் தமிழில் என் வழியிலும் என்னாலியன்றவரை அர்த்தம் புரிந்து கொண்டு நம்பியைப் பிரார்த்தித்து தந்துள்ளேன்.


கண்ணினுட் சிறு தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன், என்னப்பனில்
நண்னித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே


''நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்கும் தான் தெரியுமே, அந்த கண்ணன் சிறு பயல் எவ்வளவு விஷமம் செய்பவன். வெண்ணைய் திருடி, வகையாக மாட்டிக்கொண்டு அம்மா யசோதை அவனை ஒரு சிறு மணிக்கயிற்றால் அவன் வயிற்றை சுற்றி கட்டி மறு முனையை ஒரு பெரிய கல் உரலில் கட்டி அவனை நகர விடாமல் பண்ணினாளே. சகடாசுரனையே சிறு காலால் உதைத்து கொன்றவன், மூவுலகையும் ஈரடியால் அளந்தவன்; அவனால் அந்த மணிக்கயிற்றை அறுத்தெறிய முடியாதா?. தாய்ப் பாசத்தால் தன்னை கட்ட வைத்துக் கொண்டவன்.


அவன் ஒரு புறம் உரலோடு இருக்கட்டும். கண்ணா கண்ணா என்று அவன் பெயரை விட அங்கிருந்து தெற்கே குருகூரில் நம்மாழ்வார் என்று என் தெய்வம் இருக்கிறதே அதன் பெயரை குருகூர் நம்பி என்று ஒரு முறை சொல்லிப் பார்த்தால் சொன்ன நாக்கு பூரா அமிர்தத்தில் இனிக்கிறதே. இது என்ன ஆச்சர்யம். எங்கே சொல்லிப் பாருங்கள் நீங்களும் !


''நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே,
தேவு மற்றறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே''


''என் வாழ்க்கை ரகசியம் சொல்லட்டுமா? மேலே சொன்னேனே குருகூர் நம்பியின் பேரைச்சொன்னதும் நாக்கு அமிர்தத்தில் இனித்தது என்று, விடுவேனா? அவர் பெயர் சொல்லிச் சொல்லி அமிர்தத்தில் இனிய ருசியில் திளைக்கிறேன், வாய்க்கு மட்டும் அமிர்தம் இருந்தால் போதுமா? அவரை அருகே சென்று கண்ணாரக் களித்தேன், தகதக என்று மின்னும் தங்கத் திருவடிகளில் சிரம் வைத்து தலை முதல் கால் வரை அமிர்த ருசியை அடைந்தேன், எனக்கு இனி வேறு தெய்வம் எதற்கு? போதும் இவர் ஒருவரே! அவரிடமிருந்து அமிர்தம் இப்படி அபரிமிதமாக பெற்றேனே எப்படி? அறிந்து கொண்டேன் .. ஆம் அவர் பாசுரங்கள் தான் அந்த ரகசியம். அவர் பாசுரங்களை பாடியே என் சொச்ச வாழ்வை இனிதாக அமிர்தமாக அனுபவித்து திரிவேன்.


ஆழ்வார் தொடர்வார்....

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends