Revathi kumar & veda pathasala-Periyavaa
ஸ்ரீ மஹா பெரியவா- "உன் ஆத்திலும் தான் நான் இருக்கேன்"


ஸ்ரீ பரமேஷ்வரனின் சொரூபமான ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா அற்புதங்களை, அவரின் அணுகுத் தொண்டர்கள் மூலமாக விபரமாக கேட்டறிந்து அதை 'தாயுமானமகான்' என்ற தலைப்பில் நான்கு புத்தகங்களாக உருவாக்கியவர் திருமதி.ரேவதிகுமார் அவர்கள் (9789082269).
'உன் ஆத்திலும் தானே நான் இருக்கேன்' என்ற ஸ்ரீ மகாபெரியவரின் அருளுக்கு முழு பாத்திரமான திருமதி.ரேவதிகுமார் தம்பதியினர் இந்த புத்தகங்களின் மூலம் வருகின்ற பணத்தை பற்பல நற்காரியங்களுக்கு வழங்கிவருவதை பலர் முகநூல் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் அறிந்திருக்கிறார்கள்.
இரண்டாவது புத்தகம் முற்றும் விற்றுவிட்ட நிலையில் அந்த பணத்தை எப்படி எந்த வேதபாடசாலைக்கு கொடுக்கலாம் என்ற குழப்பத்தில் தம்பதியர் இருக்க, அந்த சமயத்தில் அடியேன் அவர்களை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் மே மாத ஸ்ரீமகாபெரியவா அனுஷ ஜெயந்தியில் முதல் முறையாக சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.
அடியேன் 25 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீ மகாபெரியவரின் கொள்கைகளில் ஒன்றான "பிடி அரிசித் திட்டத்தை" செய்துக் கொண்டிருப்பதால், ரேவதிகுமார் அவர்கள் தன் நிலையை என்னிடம் தெரிவித்தார். ஸ்ரீ பெரியவாளின் பரம கடாஷத்திற்கு பாத்திரமானவரும் நித்ய அக்னிஹோத்ரியும், சிறந்த வேத பண்டிதருமான ஸ்ரீபத்மநாபாச்சாரியரின் வேதபாடசாலையை பற்றி அடியேன் குறிப்பிட்டு பேசினேன்.
ஸ்ரீ பத்மநாபாச்சாரியர் ஸ்ரீ மகாபெரியவாளை தரிசிக்கச் சென்ற சமயம், அந்த ஊர் அரசனும் அங்கு வர ஸ்ரீ மகாபெரியவா அரசனை, இந்த அக்னி ஹோத்ரியை வெண்குடை பிடித்து உள்ளே அழைத்து வரச் செய்து மரியாதைகள் செய்து அனுக்கிரஹித்தார் என்ற விஷயத்தை சொன்னேன்.
அடுத்த 4 நாட்களில் திருச்சிக்கு அருகேயுள்ள சிறுகமணி என்ற அழகான கிராமத்தில் உள்ள வேதபாடசாலைக்கு நாங்கள் சென்றோம். இரண்டு மாத்திற்கு வேண்டிய மொத்த மளிகை சாமான்களை தம்பதியினர் சமர்பித்தனர்.
அந்தசமயம் எங்களை வரவேற்ற ஸ்ரீ பரசுராமாச்சாரியார் (பத்மநாபாச்சாரியாரின் புதல்வர்). மறுநாள் நடக்க இருக்கும் பெரிய ஹோமத்திற்க்கு, வருகை தந்திருந்த 60 வேதகனப்பாடிகளும், 15 பாடசாலை குழந்தைகளுக்கும் சேர்த்து மளிகை சாமான்கள் வாங்க புறப்பட்டுக் கொண்டிருந்தார். சில நேரங்கள் அவர்களுடன் ஸ்ரீ பெரியவா மகிமையைப் பற்றி சில மணிநேரங்கள் பேசிவிட்டு, தாங்கள் உடனடியாக சென்னை செல்ல வேண்டும் என்று சொல்லி தம்பதியினர் கிளம்பினார்கள்
ஸ்ரீ பரசுராமாச்சாரியாரின் அன்பு உத்தரவால் அடியேன் மட்டும் ஹோமத்திற்கு இருந்துவிட்டு, உணவருந்தியப்பின் புறப்பட தயாரானேன். ஸ்ரீ பரசுராமாச்சாரியாரும் அவரது மனைவியும் என் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டு அழுதனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி இந்த ஹோமத்தை நடத்தி வேத வித்வான்களுக்கு அன்னம் அளிக்கப் போகிறோம், செலவுக்கு பணம் இல்லாமல் ஏன் ஹோமத்தை ஆரம்பித்தோம் என்ற கவலையில் இருக்கும் போதுதான் நீங்கள் ரேவதிகுமார் தம்பதியினரை இங்கு அழைத்து வந்தீர்கள், என்று சொல்லி என் கைகளை விடாமல் பிடித்துக்கொண்டு மீண்டும் சந்தேகமாக யார் சொல்லி நீங்கள் வந்தீர்கள் என்று திரும்ப, திரும்ப கேட்டார்கள். நாங்கள் ஒரு மளிகை சாமான்கள் கூட வாங்கவில்லை. நீங்கள் கொண்டு வந்த மளிகை சாமான்கள் மிக, மிக சரியாக இருந்தது. இன்றைக்கு தொன்னூறு பேர் சாப்பிட்டார்கள். எப்படி இந்த ஹோமம் நடந்தது என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை என்று சொல்லி உணர்ச்சி வசப்பட்டு ஸ்ரீ மகாபெரியவா படத்துக்கு நமஸ்காரம் செய்து கண்ணீர் விட்டார்கள். அடியேனைப் பொறுத்த வரை புத்தகம் விற்ற பணத்தை எந்த வேதபாடசாலைக்கு கொடுப்பது என்ற நிலையில் ரேவதிகுமார் அவர்கள் ஒருபக்கம், ஏற்பாடு செய்த வேதபாராயணம், ஹோமத்தை எப்படி நடத்தப் போகிறோம் என்ற பயத்தில் நித்ய அக்னிஹோத்ரி ஸ்ரீ பரசுராமாச்சாரியர் மறுபக்கம். இடையே ஸ்ரீ மகாபெரியவாளின் இந்த திருவிளையாடல் அருமையாக முடிந்தது. மறுநாள் தம்பதியிடம் இதை விவரித்த போது மிகவும் மகிழ்ந்து ஸ்ரீ மகாபெரியவாளுக்கு நமஸ்கரித்து, அடுத்த வேதபாடசாலையை காண்பித்து கொடுக்கும் படி வேண்டினார்கள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இப்போது இரண்டாவது வேதபாடசாலை.
ஸ்ரீமகாபெரியவா எப்படி ஏகாதசி விரதத்திற்க்கு அதி முக்கியத்துவம் கொடுத்து கடைப்பிடித்து வந்தாரோ அதே மாதிரி ஏகாதசி விரதத்தை சாஸ்த்திரப்படி அனுசரித்து வரும் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள ஒரு வேதபாடசாலைக்கு இரண்டு மாத மளிகை சாமான்கள், காய்கறிகள், குழந்தைகளுக்கு வஸ்திரம் இவைகளோடு காலை 8 மணிக்கு நாங்கள் சென்றோம். அனைத்து பொருள்களையும் பெற்றுக்கொண்ட பாடசாலை வாத்தியார் திரு.சதீஷ் அவர்கள் ரேவதிகுமார் தம்பதியினரைப் பார்த்து சொன்ன முதல் வார்த்தை இன்றோடு அரிசி தீர்ந்து விட்டது நாளைக்கு என்ன செய்வோம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன் உங்கள் புண்ணியத்தில் இந்த குழந்தைகள் (8 முதல் 12 வயது) சாப்பிடுவார்கள், என்றதும் எல்லோரும் அழுதுவிட்டோம். ஸ்ரீமகாபெரியவா கருணையை எண்ணி மகிழ்ந்தோம்.
மூன்றாவது பாடசாலையை ஸ்ரீ மகாபெரியவா ரேவதிகுமார்அவர்களுக்கு அருளிய நிகழ்ச்சி.
பணம் இன்னும் மிச்சமிருக்கிறது என்ன செய்யலாம் என்று ரேவதி அவர்கள் அடியேனிடம் கேட்டார். ஸ்ரீ மகாபெரியவாளிடம் திருவிடைமருதூர் கோயிலின் மகாலிங்க சுவாமி பிரசாதம் எப்போது கொடுக்கும் போதும் அதை தன் கண்களில் ஒற்றிக் கொண்டு " என் மகாலிங்க சுவாமி". என்று கூறுவார். ஸ்ரீ மகாபெரியவா ஆதிசங்கரரை பிரதிஷ்டை பண்ண வேதபாடசாலை என்று சொன்னேன் உடனேயே மீதம் இருந்த பணத்தை என்னிடம் கொடுத்து திருவிடைமருதூர் பாடசாலைக்கு அனுப்பினார்.
மறு நாள் காலையில் திருவிடைமருதூர் பாடசாலை சென்று டிரஸ்டியை சந்தித்தேன். அவரிடம் ரேவதிகுமார் அவர்களைப் பற்றியும், தாயுமானமகான் புத்தகம் பற்றியும், அதன் வருவாயில் பல நற்காரியங்கள் ஆற்றுவது பற்றியும் தெளிவாக குறிப்பிட்டேன். அதுவரை தலையை குனிந்து நான் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த அன்பர், தலை நிமிர்ந்து என்னைப் பார்த்த போது கண்களில் கண்ணீர் தளும்பியது. சார் இன்றைக்குத் தான் சமையல் மாமி இன்னும் இரண்டு நாளைக்குதான் மளிகை சாமான்கள், காய்கறிகள் இருப்பு உள்ளது என்றும், இட்லி அரிசி கூட இன்றோடு தீர்ந்தது என்றார். நான் மனதளவில் தவித்துக் கொண்டிருந்தேன். நித்யம் 15 குழந்தைகள் இரண்டு வேளை வயிறார சாப்பிடவேண்டும். இது ஸ்ரீ மகாபெரியவாளின் பரிபூரண கருணை. ரேவதிகுமார் தம்பதியர் மூலமாக உங்களை இங்கே அனுப்பியிருக்கிறார். என்று நா தழு தழுக்க சொல்லி என் கையை பிடித்துக் கொண்டார். உடனே நாங்கள் இருவரும், மளிகை சாமான்களையும், காய்கறிகளையும் வாங்கிக்கொண்டு அடுத்த இரண்டு மணி நேரத்தில் பாடசாலைக்கு திரும்ப வந்து விட்டோம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் நான் எவ்வளவு பணம் கொண்டு வந்திருக்கிறேன் என்று அவரும் கேட்கவில்லை, அடியேனும் சொல்லவில்லை. மனதில் மட்டும் பயம் இருந்தது. பணம் போதவில்லை என்றால் என்ன செய்யலாம்? ஏதாவது சாமான்களை குறைத்து கொள்ள சொல்லலாமா... என்ற குழப்பம். ஆனால் எல்லாம் வாங்கின பிறகும் என் கையில் பணம் மிச்சமிருந்தது. அதுதான் ஆச்சரியம் தாயுமான மகான் புத்தகங்களில் உள்ள அற்புதங்களைப் போலவே, அதன் மூலம் வந்த பணத்தில் நற்காரியங்களை செய்ய ஈடுபடும் போதும் அதை நிர்ணயிப்பதும், நடத்துவதும் அந்த நடமாடும் தெய்வம் ஸ்ரீ மகாபெரியவாதான் என்பதை நாங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தோம்.
திருமதி. ரேவதிகுமாருக்கு ஸ்ரீ மகா பெரியவா சொன்ன "உன் ஆத்திலும் தான் நான் இருக்கேன்" என்ற அருள்வாக்குக்கு ஏற்ப அவருடைய. தாயுமான மகான். நான்கு பாகங்களிலும் உள்ள நிகழ்வுகள் எல்லாம் அற்புதங்கள் நிறைந்தவை. இன்னும் பல விஷயங்கள் சொன்னார்.
ஸ்ரீமகாபெரியவா இன்றும் நம்மை காப்பாற்றுகிறார்.
அடியேன்
சங்கர் திருவேதி. 9445004908