Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 5 adhyaya 11,12,13,14,15 in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam


    ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 5- அத்தியாயம் 11
    ஜடபரதர் உபாக்யானம் -3


    பரதர் கூறினார்.
    நீ எல்லாம் அறிந்தவன் போல் பேசுவதால் மட்டும் நன்குணர்ந்தவன் ஆகி விடமாட்டாய். அரசன் என்றும் தேகாபிமானம் தேக தர்மம் என்று பலவாறாகப் பேசும் நீ ஒன்றும் அறியாதவன்,தெளிந்த ஞானிகள் உலக வ்யவஹாரத்தையும் தத்துவ விசாரத்தையும் ஒன்றுபடுத்திப் பேசமாட்டார்கள்.


    ( இதேபோல அர்ஜுனன் போர்க்களத்தில் பேசினான். அதனால் பகவத்கீதை பிறந்தது.பகவான் அர்ஜுனனிடம் 'அஸோச்யான் நன்வஸோசஸ்த்வம் ப்ரக்ஞாவாதாம்ஸ்ச பாஷசே. (2.11) துக்கப்பட வேண்டாத விஷயத்தில் துக்கப்பட்டு பெரிய அறிஞனைப்போல் பேசுகிறாய்,' என்றார்.)


    கனவுக்கு நிகரான கிருஹஸ்தாஸ்ரமத்தில் செய்யப்படும் யாகம் முதலிய கிரியைகளை விளக்கிப் புகழ்ந்து பேசும் வேத வாதங்களை மட்டும் அறிந்தால் தத்துவ விசாரம் விளங்காது. வேதாந்த வாக்கியங்களைப் படித்தால் மட்டும் பயனில்லை. அப்படிப்பட்டவர் தான் கற்ற சாஸ்திரங்களை வாதம் செய்ய மட்டுமே பயன்படுத்துவர்( வேத வாத ரதா: பார்த்த நான்யதஸ்தி இதி வாதின:- கீதை)


    முக்குணத்தின் வசப்பட்ட மனமே சம்சார பந்தத்திற்குக் காரணம். அதுவே இந்த்ரிய நிக்ரஹம் மூலம் ஞானம் அடைந்தால் மோக்ஷ்த்திற்கும் காரணம் ஆகிறது. எவ்வாறு தீபம் நெய்திரி இட்டால் புகையுடன் கூடிய ஜ்வாலையுடன் எரிகிறதோ, மற்ற சமயங்களில் தன் சொந்த ஒளியுடன் விளங்குகிறதோ அதே போல மனமானது குணங்களின் தொடர்பால் பந்தத்திற்கும், அதை விட்டு விட்டால் மோக்ஷத்திற்கும் காரணம் ஆகிறது. ( மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:-Upa.)


    மனத்தின் இந்த மாறுபாடுகளின் காரணம் மாயையே. க்ஷேத்ரஞன் எனப்படும் ஆத்மா சாக்ஷிபூதமாக மனதின் காரியங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. உண்மையில் ஜீவனைக்காட்டிலும் வேறுபடாதவனும் எங்கும் வ்யாபித்தவனும் அனாதியானவனும் பிறப்பற்றவனும் பரமாத்மாவும் ஆன வாசுதேவன் எல்லா ஜீவராசிகளின் உள்ளத்திலும் வசிக்கிறார்.


    தான் உடலல்ல ஆத்மா என்ற ஞானம் ஏற்படாத வரையில் ஜீவன் சம்சாரத்தில் உழல்கிறான்.
    இந்த ஞானம் பற்றற்று கடமைகளை பகவதர்ப்பணமாக செய்வதாலும் காம்க்ரோதங்களை வெல்வதாலும் , மட்டுமே சாத்தியம் ஆகிறது. ஆகவே இந்த மனம் என்னும் எதிரி அலட்சியம் செய்ததால் வீரியம் மிகுந்து மாயாவி போல உண்மையான ஆத்மாவை மறைக்கிறது. இதை ஸ்ரீ ஹரியின் பாதசேவை என்ற பிரம்மாஸ்திரத்தைக் கொண்டு நாசம் செய்ய வேண்டும்.


    ( பரதரின் உபதேசம் தொடரும்)


    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 5- அத்தியாயம் 12


    இதைக்கேட்ட ரஹுகணன் அவரை நமஸ்கரித்து அவருடைய வார்த்தைகள் ஜ்வரத்தினால் பீடிக்கப்பட்டவனுக்கு நல்ல மருந்து போலும், வெய்யிலினால் பொசுக்கப்பட்டவனுக்கு கங்கை நீர் போலும், உடல் பற்றாகிய விஷப்பாம்பால் கடியுண்டு விவேகத்தை இழந்த தனக்கு அமுதம் போன்ற ஔஷதம் ஆகிறது என்று கூறினான். பிறகு அவர் அத்யாத்ம யோகத்தைப் பற்றிய உபதேசத்தை மீண்டும் விளங்குமாறு கூறும்படி கேட்டுக்கொண்டான்.


    ஜடபரதர் கூறியது.
    "இந்த தேகம் மண்ணாலானது. பல்லக்கினுள் உள்ள இதை நீ 'நான்' என்றும் அரசன் என்றும் எண்ணம் கொண்டு கர்வத்துடன் பேசுகிறாய். இந்த ஏழை பல்லக்குத் தூக்கிகளை அடிமைப் படுத்திய நீ கருணை சிறிதும் இல்லாதவன். "நான் ஜனங்களின் ரக்ஷகன் ," என்னும் உன்னுடைய கூற்று அறிஞர்களிடை செல்லாது.


    பிரம்மம் ஒன்றே சத்தியம். அது விசுத்த ஞானமாய் என்றும் உள்ளதாய், சர்வசாக்ஷியாய் விளங்குவது. அதுவே பகவத் சப்தத்தின் முடிவான பொருள். அதையே ஞானிகள் வாசுதேவன் என்று கூறுகின்றனர்.


    இந்த ஞானத்தை தவத்தாலோ, யக்ஞங்களாலோ, க்ருஹஸ்த தர்மத்தை அனுஷ்டிப்பதாலோ , வேதம் ஓதுவதாலோ , அடைய முடியாது. எந்த இடத்தில் உலகப் பேச்சு ஒழிந்து பகவானின் பெருமை பேசப்படுகிறதோ அந்த மகான்களின் சங்கத்தை நாடினால் அது மோக்ஷத்தை விரும்பியவனுக்கு பகவான் வாசுதேவரிடத்தில் நிலைத்த மதியை அளிக்கிறது. "


    பிறகு பரதர் தன் முன் ஜன்மத்தைப் பற்றிக் கூறினார். அரசனாக இருந்து பற்றற்று பகவதாராதனையில் ஈடுபாடு இருந்த போது ஒரு மானின் மீது கொண்ட பற்றினால் மான் ஜன்மம் எடுத்தபோதிலும் முன் ஜன்ம நினைவு இருந்ததனால் இந்தப் பிறவி ஏற்பட்டது என்றும், அதன் விளைவாக ஜனசங்கத்தைத் துறந்து எதிலும் பற்றின்றி தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சஞ்சரிப்பதாகவும் கூறினார்.
    அடுத்த மூன்று அத்தியாயங்களில் சம்சாரத்தின் நிலை ஒரு சிறந்த உருவகம் மூலம் விளக்கப்படுகிறது
    ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 5- அத்தியாயம் 13


    பரதர் மேலும் கூறினார்
    ஜீவர்கள் முக்குணங்களினால் தூண்டப்பட்டு நற்பயன்களை விரும்பி பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் பொருள் மேல் பேராசை கொண்ட வணிகர்கள் காட்டினுள் புகுந்தது போல சம்சாரம் என்னும் காட்டில் சிக்கிக் கொள்கிறார்கள்.


    இங்கு ஆறுவகை கொள்ளையர்கள் ( ஐந்து இந்த்ரியங்கள் , அவற்றின் வழி செல்லும் புத்தி) ஜீவர்களின் சொத்தை எல்லாம் ( பகவத் புத்தி) பறித்துக் கொள்கிறார்கள். நரிகளாலும் ஓநாய்களாலும் ( பந்துக்கள் ) கவரப்படுகின்றனர்.


    செல்லும் பாதையும் கொடிகளாலும் புதர்களாலும் சூழப்பட்டு, ( பிராரப்த கர்மா) கொசு மற்றும் பல பூச்சிகளால் (துஷ்டர்கள்) நிறைந்து கடினமாக உள்ளது. சில சமயங்களில் கனவு போன்ற சுகம் கிடைக்கிறது. சில சமயம் காற்றினாலும் தூசியினாலும் கண்கள் மறைக்கப்பட்டு வழி தவறுகிறது. ( இந்த்ரிய சுகங்கள்) . பசி தாகம் இவற்றால் பீடிக்கப்பட்டு கானல் நீரை நாடுகிறான். (பொன்னாசை)


    இதற்கிடையில் தூக்கம் என்ற மலைப்பாம்பினால் பிடிக்கப் பட்டு இறந்தவன் போல் ஆகிறான். மற்ற சமயங்களில் கெட்ட சகவாசம் என்ற விஷப் பாம்புகளால் கடிக்கப்பட்டு தன்னிலை இழந்து எல்லாவற்றையும் இழக்கிறான். இதனால் மரணத்தை விடக் கொடிய அவஸ்தையை அனுபவிக்க நேருகிறது
    .
    இந்தக் காட்டில் சஞ்சரிக்கிறவர்களில் இறந்தவரை விட்டுப் பிறந்தவரை எடுத்துக்கொண்டு இந்தப் பயணிகளின் கூட்டம் நகர்ந்துகொண்டே இருக்கிறது. இதில் ஒருவரும் புறப்பட்ட இடத்திற்கு (ஞானம் , பக்தி)வருவதில்லை., சேரவேண்டிய இடத்தையும் அடைவதில்லை. சுற்றிச் சுற்றி அலைந்துகொண்டே இருக்கிறார்கள். இதுதான் வாழ்க்கை. இதற்குப் பேரரசர்களும் விலக்கில்லை.


    ரஹுகணனே நீயும் இதில் சேர்ந்தவனே. அதனால் மற்றவரை துன்புருத்தாமல்,, எல்லோரிடமும் அன்பு கொண்டு உலகப் பற்றை விடுத்து, ஸ்ரீஹரியினுடைய ஆராதனையால் நன்கு தீட்டப்பட்ட ஞானமாகிய கத்தியுடன் இந்தப் பாதையில் இருந்து விலகிச் செல்வாயாக."


    ரஹுகணன் கூறினான்.
    தங்களுடைய பாததூளியால் பாபம் அகலப் பெற்றவர்கள் நிர்மலமான பக்தியை அடைவதில் ஆச்சரியம் இல்லை. ஒரு முஹூர்த்தம் உங்களுடன் இருந்ததாலேயே என் அவிவேகம் அடியோடு அழிந்து விட்டதே. உங்களைப் போன்ற மஹான்களின் சேர்க்கை சுவர்க்கத்திலும் கிடைக்காது அதனால் இந்த மனிதப் பிறவி உயர்ந்தது என்றே கருதுகிறேன்.


    அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் எந்த பிரம்மஞானிகள் பூமியில் சஞ்சரிக்கிரார்களோ அவர்களை அறியும் அறிவு என் போன்ற அரசர்களுக்கு ஏற்படவேண்டும்.


    பிறகு சுகர் பரீக்ஷித்திடம் கூறினார். மகானுபாவரும் பிரம்மஞாநியும் ஆன பரதர் தன்னை அறியாமல் அவமதித்த ரஹுகணனிடமும் கருணை கொண்டு ஆத்மதத்துவத்தை உபதேசித்து அவனால் பூஜிக்கப்பட்டு அமைதியுற்ற கடலைப் போல இந்த பூமியில் சஞ்சரித்தார்.


    பிறகு பரீக்ஷித் இந்த உருவகம் எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாததனால் அதை விளக்கும்படி சுகரைக் கேட்க அவர் அடுத்து அதை விளக்குகிறார்
    ஸ்ரீமத் பாகவதம்- ஸ்கந்தம் 5 அத்தியாயம் 14


    அத்தியாயம் 14
    சுகர் கூறுகிறார்.
    முக்குணத்தின் வசப்பட்டு ஜீவர்கள் தேகத்தில் பற்றுக் கொள்கிறார்கள். அதனால் செய்யும் கர்மாக்களைப் பொறுத்து மறு பிறவிகள் ஏற்படுகின்றன.


    கர்மபலனை அனுபவிக்க பகவானுடைய மாயையால் சம்சாரத்தில் தள்ளப்படுகிறார்கள். சம்சாரம் தான் காடு. இதில் ஆறு கொள்ளையர் என்பது இந்த்ரியங்கள் மற்றும் மனம். அவர்கள் அபகரிக்கும் செல்வம் என்பது பகவத் பக்தி மற்றும் தர்மத்தில் நாட்டம். மனைவி மக்கள் அவர்கள் மேல் உள்ள பற்றினால் உலக இச்சையில் ஈடுபடுத்துவதால் அவர்கள் ஓநாய்களாக சித்திரிக்கப் படுகிறார்கள். ஏனென்றால் புத்தியை இழுத்துச்செல்வதால்.


    ஆசைகளே காட்டில் போகும் வழியில் இடைஞ்சலாக உள்ள கொடிகளும் மரங்களும். காரணமின்றி இடர்களைச் செய்யும் துஷ்டர்கள் கொசு, பூச்சி , எலி இவைகளுக்கு ஒப்பானவர்கள்.


    சில சமயங்களில் கானல்நீரை ஒத்த சுகங்களில் ஈடுபடுகின்றனர். ரஜோகுணம் காரணமாக பொன்னாசை ஏற்படுகிறது,. இதன் பயனாக அவதிப்படுகிறார்கள். பெண்ணாசை என்பது கண்ணை மறைக்கும் தூசியும் சூறாவளிக் காற்றும் ஆகும்.புண்ய கர்மம் தீர்ந்து போகும் தருணம் வாழ்க்கை நடத்தும் வழியறியாது மனிதன் மற்றவர் உதவியை நாடுகிறான். சுயநலம் மிக்க உற்றார் உறவினர் மற்றோர் எல்லாம் விஷக் கொடிகளுக்கும் கிணறுகளுக்கும் ஒப்பாவார். அவர்கள் செய்கையும் சொற்களும் அப்படிப்பட்டவை.


    அதனால் மிகுந்த துயரை அடைகிறான். கெட்ட சகவாசம் நீரில்லா நதிகள் போன்றது. இதில் விழுந்தால் உடலும் மனமும் காயமடையுமே தவிர தாகத்தைத் தீர்க்காது. மிகவும் கஷ்டம் அனுபவித்தவன் காட்டுத்தீயில் அகப்பட்டது போல உணர்கிறான்.


    ஒருவேளை ஏழ்மையில் இருந்து மீண்டாலும் பேராசையாலும் இந்த்ரிய சுகத்தை நாடுவதாலும் அவனுடைய பொருளை இழக்கிறான். ஒரு காலத்தில் உலகின் நிலையில்லாமையை உணர்ந்து நல்லவர் நட்பையும் மகான்களின் சங்கத்தையும் நாடுகிறான். ஆனால் பூர்வ ஜன்ம புண்ணியம் இல்லாவிடில் கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல மனம் மறுபடியும் இந்த்ரிய சுகத்தை நாடச்செய்து விடுகிறது.


    கடைசியில் நோய்வாய்ப்பட்டு மரணம் நெருங்கும்போதுதான் தன் தவறை உணர்கிறான். சாது சங்கத்தினாலுண்டாகும் ஞானம் பக்தி இவை இல்லாததால் பெருந்துன்பத்திற்காளாகி பிறவிச் சுழலில் அகப்பட்டு மீண்டும் மீண்டும் சம்சாரத்தில் உழல நேரிடுகிறது.


    இதற்கு யாகயக்ஞங்கள் செய்வோரும், வேதம் கற்றோரும், தேவர்களும் மண்டலாதிபதிகளும் கூட விலக்கல்ல. எவ்வாறு ஒரு ஈயால் கருடனைப் போல் பறக்க இயலாதோ அது போல எந்த அரசனாலும் பரதர் அடைந்த நிலையை மனதால் கூட எண்ணிப்பார்க்க இயலாது.


    பாகவதர்கள் போற்றிக் கொண்டாடும் குணங்களும் செயல்களும் உடைய ராஜரிஷி பரதரின் சரித்திரம் மங்களம், ஆயுள், செல்வம், புகழ், சுவர்க்க வாசம் இவற்றோடு மோக்ஷத்தையும் அளிக்கக் கூடியது . இதைக் கேட்பவரும் சொல்பவரும் ஆசையை வெல்கிறார்கள்.
    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 5 அத்தியாயம் 16


    அத்தியாயம் 15
    பரதரின் வம்சத்தில் தோன்றியவர்களுள் முக்கியமானவர் கயன். இவர் மகாவிஷ்ணுவின் அம்சம் எனக் கருதப்படுகிறார். நற்குணங்களால் கௌரவிக்கத்தக்கவராக இருந்தார். பகவத் பக்தியினால் பண்படுத்தப்பட்டு தேஹாத்மா புத்தியை விட்டு பற்றற்றவராக ஸ்வதர்மத்தை கடைப் பிடித்து பூமியை ஆண்டுவந்தார். மிகுந்த யாகம் செய்வதினாலும் மகான்களின் சேவையினாலும் தூயமனம் அடைந்த இவரை பெரியோர்கள் புகழ்ந்தனர். இவர் வழித்தோன்றலாகிய விரஜனால் பரத வம்சம் பெரும் புகழ் பெற்றது.


    இத்துடன் பாகவத் சப்தாஹத்தின் இரண்டாம் நாள் முடிவுறும். ஸ்கந்தம் ஐந்தில் உலக வர்ணனை தொடர்கிறது.
Working...
X