Announcement

Collapse
No announcement yet.

Saranagati

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Saranagati

    Saranagati
    ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம: அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
    சரணாகதன் இங்குள்ள காலம் முடிந்து உடலை துறந்து விலகும் நிலை
    நிர்யாணாதிகாரம் (குறிப்புகள்) - ஸ்வாமி தேசிகன் அருளிய ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயசாரம்


    1. பொதுவாக, சரணாகதி அனுஷ்டான காலத்தில், 'ஸ்ரீமன் ! அபீஷ்ட வரத ! த்வாம் அஸ்மி சரணம் கத: ஏதத் தேஹாவஸானே மாம் த்வத் பாதம் ப்ராபய ஸ்வயம்'


    அதாவது, 'திருமகள் நாதனே ! வேண்டிய வரங்களை அளிப்பவனே ! உன்னை சரண் அடைந்தவனாய் இருக்கிறேன். என் உயிர் இந்த உடலைப் பிரிந்தவுடன் நீயாகவே என்னை உன் திருவடிகளில் அடைவிப்பாயாக !' என்று சரணாகதி செய்து போகும் சரணாகதனுக்கு அறிந்து செய்யும் பாபம் நேர்ந்தால், மன்னிப்பு கோரும் ப்ராயச்சித்த சரணாகதியாலோ அல்லது தண்டனையாலோ அப்பாபங்கள் நீக்கப் பெற்று, அவனுடைய தேக காலம் முடிவில் தாமதமின்றி மோக்ஷத்தை அடைகிறான்.


    2. ஸர்வேஸ்வரனின் மேன்மையையும், ஆத்ம ஸ்வரூபத்தின் இயற்கை நிலையையும் அறிந்த ஒரு சரணாகதன், இங்குள்ள காலம், உபய பாவனர்களாக, (அதாவது மோக்ஷ ருசியோடு உலக வாழ்க்கையில் ருசியும் கூடியே), இருக்கக் கூடும்.


    அந்த சரணாகதனிடம் நல் எண்ணம் கொண்ட ஸர்வேஸ்வரனான ஸ்ரீமந் நாராயணன், உலக ஸுகத்திற்காக, சரணாகதன், பகவானை ப்ராத்தித்தாலும், 'யாசிதோபி ஸதா பக்தை: ந ஹிதம் காரயேத்தரி: பாலமக்னௌ பதந்தம் து மாதா கிம் ந நிவாரயேத்' என்கிற ப்ரமாணத்தின் படி,


    ஒரு தாயானவள், அவளுடைய சிறு குழந்தை நெருப்பை தொட ஆசை கொண்டாலும் எப்படி தடுத்து விடுவாளோ, அதைப் போல் சரணாகதன் நலம் கருதி, உலக பலன்களை ஸர்வேஸ்வரன் அளிப்பதில்லை.


    மேலும், 'யஸ்ய அனுக்ரஹமிச்சாமி தனம் தஸ்ய ஹராம்யஹம். பாந்தவைஸ்ச வியோகேன ப்ருஷம் பவதி துக்கித: தேன துக்கேன ஸாந்தப்தோ யதி மாம் ந பரித்யஜேத். தம் ப்ரஸாதம் கரிஷ்யாமி யஸ்ஸுரைரபி துர்லப:' என்ற ஸ்ரீமத் பாகவத ஸ்லோகத்தில்,


    ஸர்வேஸ்வரனான ஸ்ரீமந் நாராயணன், எவனுக்கு அனுக்ரஹம் பண்ண எண்ணம் கொண்டுள்ளானோ, அவர்களின் செல்வத்தை முதலில் அழித்து விடுகிறான். பிறகு, அவர்களுடைய உறவினர்களை மரணம் அடையச் செய்கிறான். அந்த நிலையிலும், அவர்கள் ஸர்வேஸ்வரனை துதித்துக் கொண்டு இருந்தார்களேயானல், தேவர்களும் பெற முடியாத அனுக்ரஹத்தை செய்கிறான் ஸர்வேஸ்வரன்.


    3. சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் கண்ணனும் குசேலரும் குருகுலக் கல்வி பயின்றவர்கள்.


    குசேலர் உலக இன்பங்களில் பற்று அற்றவர். புலனடக்கம் மிகுந்தவர். குருகுலக் கல்வி முடிந்தவுடன் இருவரும் பிரிந்து தத்தமது இருப்பிடங்களுக்கு சென்றனர்.


    குசேலர் பரம ஏழை. தனது மனைவி மக்களுடன் பல நாட்கள் அன்னமின்றி பட்டினியாக வாழ்க்கை நடத்தினர். வீட்டின் பரிதாபமான நிலையை கணவருக்கு எடுத்துச் சொல்லி, துவாரகை நகரில் இருக்கும் கண்ணனைப் பார்த்து வாருங்கள் என்று வேண்டிக் கொண்டாள் அந்த பத்தினி.


    குசேலர் துவாரகை நகருக்கு நடைபயணமாக சென்றார். ஆனால், அவர் கண்ணனிடம் எதையும் ப்ரார்த்திக்கவில்லை.


    அப்போது எல்லோருடைய உள்ளங்களில் உள்ள விஷயங்களை அறியும் கண்ணன், குசேலர் தம்மிடம் வந்த காரணத்தைத் அறிந்து கொண்டார். 'குசேலர் பலனை எதிர்பாராமல் பக்தி செய்பவர். செல்வம் வேண்டி ஒரு நாளும் வழிபட்டவர் அல்ல. தன்னுடைய மனைவியின் தூண்டுதலின் பேரில் என்னிடம் வந்திருக்கிறார். ஆகவே, இவருக்கு அனைத்து செல்வங்களையும் தருவேன். முக்தியும் அளிப்பேன்' என்று எண்ணினான் கண்ணன்.


    குசேலரது குடிசை வீடு தங்க மாளிகையாக மாறியது.


    செல்வம், ஒரு மனிதனுக்கு கர்வத்தை கொடுத்து வீழ்ச்சி அடையச் செய்யும் என்று உணர்ந்த குசேலர் பற்று அற்ற மனப்பாங்குடன் கண்ணனை வழிபடுவதிலே தம் காலம் முழுவதும் கழித்தார். ஆக, ஒரு சரணாகதன் பரமேகாந்தியாக, உலக அனுபவத்தில் ஈடுபாடு அற்று, தனக்கு சாஸ்த்திரத்தில் விதித்தவற்றை சரிவர செய்து கொண்டு, இங்குள்ள காலத்தை, கழித்துக் கொண்டிருந்தால் கருணை உள்ளம் கொண்ட எம்பெருமான் சரணாகதனுக்கு ஏற்றதை இங்கும் அங்கும் செய்து போவான்.


    4. ஒரு சரணாகதன் உலக பலனை விரும்பும் விஷயத்தில், ஸர்வேஸ்வரனான ஸ்ரீமந் நாராயணன், ஒரு சிலருக்கு உலக பலன்களை கொடுக்காமல் இருந்தும், ஒரு சிலருக்கு இவ்விஷயத்தில் வெறுப்பை விளைவித்தும், ஒரு சிலருக்கு உலக பலன்களைக் கொடுத்து பிறகு அதில் வெறுப்பை உண்டாக்கியும், எம்பெருமான் மரணத்திற்கு முன்பு, அந்த சரணாகதனின் உலக விருப்பத்தை போக்கி விடுகிறான்.


    ஆக, சரணாகதன் கேட்டபடி அவனுடைய தேக கால முடிவில் தாமதமின்றி நிச்சயமாக மோக்ஷத்தை அளித்து விடுகிறான்.


    ஆனால், மோக்ஷத்திற்கு காலம் குறிக்காதே (அதாவது, தேக காலம் முடிவில் மோக்ஷத்தை கோராமல் செய்யும் சரணாகதி) அனுஷ்டித்தவர்களுக்கு, உலக விஷயங்களில் விரக்தி வரும் வரை, மோக்ஷ பலன் பெற கால தாமதம் ஏற்படும் என்பது உணர தக்கது.


    'அதோபாய ப்ரஸக்தோபி புக்த்வா போகனநாமயான் அந்தே விரக்திமாஸாத்ய விஷதே வைஷ்ணவம் பதம்' என்கிற ப்ரமாணப்படி 'உலக அனுபவத்தில் ருசி கொண்டு அதற்கான செயல்களில் ஈடுபட்டிருக்கிற ஒரு சரணாகதன், அதிலுள்ள ஆசைகள் நீங்கி விரக்தி உண்டாகும் வரை, மோக்ஷ பலனுக்கு கால தாமதம் ஏற்படும்'.
Working...
X