Srimad Bhagavatam skanda 7 adhyaya 3,4,5 in tamil


Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 7 அத்தியாயம் 3/4


அத்தியாயம் 3


ஹிரண்ய கசிபு பிறரால் ஜெயிக்க முடியாதவனாகவும் மூப்பும் மரணமும் அற்றவனாகவும், எதிரியற்ற ஒரே அரசனாகவும் தன்னை ஆக்கிக் கொள்ள விரும்பினான் . அதற்காகக் கடும்தவம் இயற்றினான். நீண்டகாலத்திற்குப் பின் பிரம்மதேவர் அவன் முன் தோன்ற அவரிடம் பின் வருமாறு வரம் கேட்டான்.


"உம்மால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிராணிகளிடம் இருந்து எனக்கு மரணம் உணடாகக் கூடாது. மற்றவைகளாலும் ஆயுதங்களாலோ, உள்ளோ, வெளியோ, பகலிலோ இரவிலோ , பூமியிலோ ஆகாயத்திலோ, மனிதர்களாலோ மிருகங்களாலோ மரணம் சம்பவிக்கக் கூடாது. அனைவரையும் அடக்கி ஆளும் வல்லமையைத் தரவேண்டும். அணிமாதி சித்திகளையும் அளிக்க வேண்டும்.


அத்தியாயம் 4

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பிரம்ம தேவர் கூறினார் .
" மகனே நீ வேண்டும் வரங்கள் எவராலும் அடைதற்கரியவை. ஆயினும் அவற்றை உனக்கு அளிக்கிறேன்."


ஹிரண்யகசிபு மூவுலகங்களையும் ஜெயித்து தேவர்களையும் திக்பாலகர்களையும் தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தான்.


பின் ஹிரண்ய கசிபு விஷ்ணுவுடன் போர் புரிய எண்ணம் கொண்டு அவரைத் தேடி வைகுண்டம் சென்றான். அங்கு அவரைக் காணாமல் தனக்கு பயந்து அவர் ஒளிந்ததாக எண்ணினான். இவ்வாறு வெகு காலம் சென்றது. அவனுடைய ஆதிக்கத்தால் வருந்திய தேவர்கள் திக்பாலகர்களுடன் அச்சுதனை சரண் அடைந்தனர்.


அப்போது அவர்களிடை உருவம் தோன்றாமல் மேகத்தின் ஒலி போன்ற ஒரு வாக்கு கேட்டது. அது திசை எங்கும் ஒலிப்பதாய் சாதுக்களுக்கு அபயம் அளிப்பதாய் விளங்கிற்று.


பகவான் கூறியது.
" பயம் வேண்டாம். இந்த அசுரனின் செய்கைகள் எனக்குத் தெரிந்ததே. அதற்கு முடிவு கட்டுவேன். காலத்தை எதிர்பார்த்துக் காத்திருங்கள். எப்போது, தேவர்களிடமும் , வேதங்களிடமும், , பசுக்களிடமும், ,,பிராம்மணர்களிடமும், சாதுக்களிடத்தும், தர்மத்தினிடத்தும், என்னிடமும் த்வேஷம் பாராட்டுவானோ அப்போது அவன் விரைவில் விநாசம் அடைவான்.


வைரம் அற்றவனும், சாந்தனும், மகாத்மாவும் ஆன தன் குமாரன் ப்ரஹ்லாதனுக்கு இவன் தீங்கிழைப்பான். வரத்தில் நிலை பெற்றவனாயினும் அவனை அப்போது கொல்லுவேன்."


ஹிரண்யகசிபுவிற்கு நான்கு புதல்வர்கள் இருந்தனர் . அவர்களுள் பிரஹ்லாதன் பரம பக்தனாகவும் குணவானாகவும் விளங்கினான். பெரியோர்களிடத்து மரியாதையும், ஏழைகளிடம் வாத்சல்யமும், சமமானவர்களிடம் சகோதரனைப்போலவும், குருமார்களுடம் பக்தியும், நிறைந்து, கல்வி, செல்வம், அழகு, உயர் குடிப்பிறப்பு இவை அனைத்தும் சேர்ந்திருந்தபோதும் தற்பெருமையும் செருக்கும் இல்லாதவனாக அசுரனாயினும் அசுர ஸ்வபாவம் இல்லாதவனாக இருந்தான். (இதற்குக் காரணம் பின்னர் சொல்லப்படுகிறது. )


குழந்தைப் பருவத்திலேயே பகவானிடம் பக்தியுடன் உட்கார்ந்தபோதும் நடந்தபோதும் சாப்பிடும்போதும் வேறு என்ன செய்தாலும் வைகுண்டநாதனைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து ஜடம் போலவும் பித்தனைப்போலவும் ஆனந்தத்தில ஆழ்ந்திருந்தான்.
அந்த மகாத்மாவும் மஹா பாகவதனும் ஆன அந்தப் புத்திரனுக்கு ஹிரண்ய கசிபு தீங்கிழைத்தான்.


ஸ்ரீமத் பாகவதம் -ஸ்கந்தம் 7 அத்தியாயம் 5


அசுரகுருவான சுக்ராசார்யரின் புதல்வர்களான சண்டன் , அமர்க்கன் இருவரும் பிரஹ்லாதனுக்கு அசுரநீதியை போதிக்க ஹிரண்யகசிபுவினால் நியமிக்கப்பட்டனர். குருவுக்குக் கீழ்ப்படிந்து கல்வி கற்ற போதும் பிரஹ்லாதன் தான் என்றும் பிறர் என்றும் பொய்யான அபிமானத்திற்கு இடமாயிருந்த அந்தக் கல்வியை மனதில் கொள்ளவில்லை.


ஒரு சமயம் ஹிரண்ய கசிபு அவனை மடியிலிருத்தி எதை நல்லதென்று கருதுகிறான் என்று கேட்க, அவன் பொய்யை மெய்யெனக் கொண்டதால் துன்பமடையும் வாழ்க்கையை விட்டு வனம் சென்று ஹரியை நாடுதலே சிறந்தது எனக்கூற அதைக்கேட்டு விஷ்ணுவிடம் பக்ஷம் வைக்கும் பிராம்மணர்களால் இவன் புத்தி பேதலித்துவிட்டது என்று எண்ணினான்.


பிறகு குருவின் வீட்டில் அவன் பிறர் அணுகாவண்ணம் காக்கப்படவேண்டும் என்று கூறினான். குருபுத்திரனும் அவனை அழைத்துப்போய் சாமதான பேத தண்டம் என்னும் உபாயங்களால் அவன் மனதை மாற்ற முயன்று அவன் திருந்தியதாக எண்ணி அவனை அவனுடைய தந்தையிடம் அழைத்துச்சென்றான்.


ஹிரண்ய கசிபு ப்ரஹ்லாதனிடம் இவ்வளவு நாட்களாக அவன் கற்றுக்கொண்டதில் சிறந்ததைக் கூறுமாறு பணித்தான். பிரஹ்தன் கூறிய மறுமொழி பக்திக்கு ஒரு வரையறையாக இன்றளவும் விளங்குகிறது.


அவன் கூறியதாவது,
ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதசேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்மநிவேதனம்
என்ற ஒன்பது வகை பக்தி விஷ்ணுவிடம் செய்யப்பட்டால் அதுவே தலை சிறந்த அத்யயனமாகக் கருதுகிறேன் என்றான்.


அதைக்கேட்ட ஹிரண்ய கசிபு கோபம் கொண்டு குருபுத்திரனை நிந்தித்தான். அதற்கு அந்த குருபுத்திரன் நடு நடுங்கி, இந்த மனப்பான்மை ப்ரஹ்லாதனின் பிறவிக்குணம் என்றும் இது தன் ஏவுதலாலோ பிறர் ஏவுதலாலோ ஏற்பட்டதன்று என்று கூறினான். அதை கேட்ட ஹிரண்யகசிபு மகனைப்பார்த்து இந்தக் கெட்ட மதியானது எங்கிருந்து வந்தது எனக் கேட்டான்.


அதற்கு பிரஹ்லாதன் அறியாமை என்னும் இருளில் புகுந்தவர்கள், இந்திரிய அடக்கம் அற்றவர்கள் , வேதத்திற்கு எதிரானவர்கள் இவர்களுக்கு பகவானிடத்தில் பக்தி பிறரிடம் இருந்தோ தானாகவோ வராது. பகவத்கிருபையால் மட்டுமே இது கைகூடும். முற்றும் துறந்த மகான்களின் பாத தூளியை சிரசில் தரித்தவர்கள் மட்டுமே பகவானின் திருவடியில் பக்தி ஏற்படும் . அதனால் தான் பிறவிப்பிணி நீங்கும் என்று உரைத்தான்.


இவ்விதம் கூறிய தன் மைந்தனை ஹிரண்ய கசிபு கோபத்தால் கண் இருண்டு அவனைத் தன் மடியிலிருந்து கீழே தள்ளி அவனைக் கொல்லும்படி அரக்கர்களுக்குக் கட்டளையிட்டான். அதற்கு அவன் கூறிய சமாதானம், மகனாயினும் நலமற்றவனாயின் நோய் போன்றவன். கெட்ட அங்கத்தை நீக்குவதால் மற்ற அங்கங்கள் சுகமாக இருப்பது போல மகன் உருவில் இருக்கும் எதிரியை அழிக்க வேண்டும்.


அவன் கட்டளைப்படியே அந்த அரக்கர்கள் பிரஹ்லாதனைப் பலவகையிலும் இம்சித்தனர். சூலத்தினால் குத்தியும் , விஷப்பாம்புகளை விட்டு கடிக்கக் செய்தும், திக்கஜங்களால் இடறியும் ,மலையிலிருந்து வீழ்த்தியும், விஷம் கொடுத்தும் இன்னும் பல வகைகளிலும் இம்சித்தனர். ஆனால் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரம்பொருளிடம் நிலைத்த மனதினனாகிய அவனை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.


ஹிரண்ய கசிபு பிரஹ்லாதனுடைய அளவற்ற மகிமையைக் கண்டு அவனுடைய விரோதத்தால் தனக்கு மரணம் ஏற்படுமோ என்றெண்ணி கவலையும் பயமும் கொண்டான்.


அப்போது அந்த குரு புத்திரர்கள் அரசனிடம் ப்ரஹ்லாதனை வருணபாசத்தால் கட்டி குரு சுக்ராசாரியார் வரும் வரை கட்டி வைக்க வேண்டும். அவர் அறிவுரையால் புத்தி வரக்கூடும் என்றனர்.


ஹிரண்ய கசிபு அவ்வாறே ஆகட்டும் என்று கூற பிரஹ்லாதனை குருவின் வீட்டில் வருண பாசத்தால் பிணைத்து அவனுக்கு இல்லற தர்மங்களையும் அரச தர்மங்களையும் கற்பிக்க முயன்றனர்.அவர்கள் அறிவுரையை ஏற்காதது மட்டும் அன்றி அவன் அங்கு ஆசிரியர் இல்லாத பொழுது மற்ற சிறுவர்களுக்கும் பகவத் பக்தியை போதிக்க முற்பட்டான்.