Announcement

Collapse
No announcement yet.

Foreign sraddham -Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Foreign sraddham -Periyavaa

    Foreign sraddham -Periyavaa
    பித்ரு சாபம்


    விளையாட்டு விபரீதத்தில் கொண்டு விட்டுவிடும்


    நிறைய பேர் வெளிநாடுகளில் இருப்பவர்கள் தங்கள் பித்ருக்களுக்கு எப்படி காரியங்கள் அங்கேயே செய்வது என்று அடிக்கடி கேட்கிறார்கள்.


    மஹா பெரியவா அவர்களுக்காகவே சில அறிவுரை வழங்கி இருக்கிறார்.


    பணக்காரர் ஒருவர் பெரியவாவிடம் காஞ்சிபுரத்தில் மடத்தில் இப்படி ஒரு சந்தேகம் கேட்டபோது அருகில் இருந்தவர்களுக்கும் அந்த அறிவுரை பாக்கியமாக கிடைத்தது. ஒரு சம்பவம் சொல்கிறேன்.


    வெகுநேரம் வரிசையில் காத்திருந்த அமெரிக்க பணக்கார பிராமணர் குடும்பம் மெதுவாக பெரியவா முன் நகர்ந்து வந்து பேசும் தெய்வத்தின் எதிரே தரையில் அமர்ந்தார்கள். ஒரு கயிரைக் கட்டி இதற்குமேல் அருகே வரக்கூடாது என்று மட சிப்பந்திகள் எல்லை அமைத்திருந்தார்கள். தெய்வத்தின் பார்வை அவர்கள் மேல் விழ அந்த தனவந்தர் பேசினார். அவர் மட்டுமே பேசினார்:


    ''மகா பெரியவா, இருபத்தைந்து வருஷமா வெளிநாட்டிலே இருக்கேன். இது என் மனைவி, இவர்கள் என் பிள்ளை, பெண்கள். வெளியூர்லே இருக்கேன் என்று பேரே ஒழிய பிராமண சம்பிரதாயத்தை விடலை. ரெண்டு வேளை சந்தி பண்றேன். தோப்பனார், தாயார் ஸ்ராத்த கர்மாவை விடறதில்லை. எல்லா ஸாமக்ரியைகளும் இங்கேருந்து வரவழைச்சுடறேன். பணத்தை லக்ஷியம் பண்ணலை. அப்பா அம்மாவுக்கு எந்த குறையும் இருக்க கூடாதே . இதுக்கு ரெண்டு காரணம். ஒண்ணு நான் இந்த உடம்போட இருக்க அவா தான் காரணம். அவா மேலே லோகத்தில் நன்னா இருக்க என்னவேணா செலவு பண்ண காத்திண்டிருக்கேன். கடமைப்பட்டிருக்கேன். ரெண்டாவது என் பிள்ளைகள் என்னைப் பார்த்து அவாளும் எனக்கப்புறமும் இதெல்லாம் பால்லோ பண்ணனும். பித்ருக்களை விட பெரிய தெய்வம் யாராவது இருக்காளா? சொல்லுங்கோ பெரியவா?


    நான் எதுக்கு சொல்றேன் இதை என்று கேட்டா என்னைப் பார்த்து மத்தவாளும் இதே மாதிரி பண்ணனும்னு தான். பெரியவா நீங்க சொல்லுங்கோ நான் செய்யறது சரி தானே.'' என்று நிறைய பேசினார் அவர்.


    இப்படி அவர் பேசினது அங்கிருந்த மற்ற பெரியவா பக்தர்களுக்கு பிடிக்கவில்லை. இப்படியா ஒருத்தன் தன்னைப் பத்தி அதுவும் பெரியவா எதிர்க்க தம்பட்டம் அடிச்சுப்பான். ஐயோ பெரியவா என்ன நினைப்பாளோ? பேசாம தரையைப் பார்த்துண்டு இருக்காளே!


    பெரியவா தலையை நிமிர்த்தி அந்த ப்ராமணரைப் பார்த்தார். சில கேள்விகளை கேட்டார்.


    '' நீ சொன்னாயே, இங்கிருந்து ஸ்ராத்த சாமான் எல்லாம் உன் அமெரிக்காவுக்கு வரவழைக்க என்ன செலவாகிறது?'


    ரொம்ப பெருமிதமாக மற்றவர்கள் காதில் விழும்படியாக உரக்க அந்த மனிதர் எவ்வளவு டாலர்கள், அது எவ்வளவு இந்திய ரூபாய்களுக்கு சமானம் என்று சொன்னார்.


    '' ஓ, அவ்வளவு ஆறதா? அது சரி, வைதிக பிராமணாவுக்கு எல்லாம் என்ன ஆகும்?


    ''அது ஒண்ணும் பெரிசு இல்லை பெரியவா. என்கிட்டே நல்ல பெரிய டேப் ரிகார்டர் இருக்கு. இங்கேயே எங்க குடும்ப வாத்யார் வச்சுண்டு அந்த மந்திரமெல்லாம் பூரா அதிலே பிடிச்சுண்டு போயிடறேன். அதை வச்சுண்டு நான் ஸ்ராத்த கார்யம் எல்லாம் பண்ணிடறேன் அங்கே. மனசிருந்தா மார்க்கம் உண்டு என்பார்கள் இல்லையா. பெரியவா''


    '' அடடா, நீ சொல்றப்பலே இப்படி ஒரு மார்க்கம் இருக்கோ? என்கிறார் பெரியவா.


    '' சயன்ஸ் விஞ்ஞானம் அந்த அளவுக்கு முன்னேறியிருக்கு பெரியவா''


    ''ஓஹோ. அப்படின்னா ஸ்ராத்தம் இப்படி கூட விஞ்ஞானத்தை வச்சுண்டு பண்ணமுடியுமோ?''


    '' சரியா சொன்னேள் பெரியவா''


    ''ஒருத்தருக்கு ஒருதடவை இங்கேயிருந்து அங்கே பிளேனிலே போக வர என்ன ஆறது?


    அந்த பிராமணருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. எத்தனை விமானம் மாறி ஏறி இறங்க வேண்டும். அதற்கெல்லாம் என்ன சார்ஜ் என்று விலாவரியாக சொன்னார்.


    ''ஆஹா. இவ்வளவு ஆறதா?


    ''நான் பணத்தை லக்ஷியம் பண்றதில்லே பெரியவா. முதல் கிளாஸ்லே, பிசினஸ் கிளாஸ்லே தான் போவேன். இந்த சாதாரண க்ளாஸ் ஜனங்களோட சேர வேண்டாம் பாருங்கோ. அவா சகவாசம், . அவர்களோட தொந்தரவு இருக்காது. நமக்கு வசதி இருக்கும்போது மட்ட ரகமானவர்களோடு எதுக்கு சரி சமானமாக பழகணும். இல்லையா பெரியவா?""


    '' ஓஹோ அப்படியா. வருஷா வருஷம் வருவியா, எப்பல்லாம் வருவே?


    " அது தான் கஷ்டம். சொல்லவே முடியாது பெரியவா. உத்யோகவேலையா வருவேன். சொந்த விஷயமா வருவேன். எப்ப வருவேன் போவேன் என்று சொல்ல முடியாது பெரியவா. உத்யோக ஜோலியா வந்தா தனியா வருவேன். சொந்த காசிலே வரும்போது கிருஸ்துமஸ் லீவ்லெ வருவோம். நவராத்திரிக்கு குடும்பத்தோடு எப்போதும் வருவேன். அதுக்கும் ரெண்டு காரணம் பெரியவா.


    முதல்லே, ''அவள் அகிலாண்ட கோடி நாயகி. லோக மாதா. அவ இல்லைன்னா இந்த உலகத்திலே நாமெல்லாம் ஏது? உலகமே ஏது ? அப்படித்தானே பெரியவா?


    ரெண்டாவது இந்த விழாக்கள், அதுக்கு அர்த்தம், பண்ணவேண்டிய அவசியம், எப்படி பண்றது என்றெல்லாம் பார்க்க குழந்தைகளோட வருவோம். அப்போது தானே அடுத்த தலைமுறை இதெல்லாம் செய்யவேண்டும் என்று ஆசைப்படும். செய்யவும் கற்றுக் கொள்ளும். நல்லபடியா தலை எடுக்கவேண்டாமா? பணமா முக்கியம் லைஃலே. இல்லையா பெரியவா?'''


    பெரியவா பதிலளித்தார்:


    ''வாஸ்த்வம். நீ அப்படின்னா நிறைய அங்கே சம்பாதிக்கிறே. உன் குழந்தைகளை நன்னா வளக்கணும். பித்ருக்களை திருப்தி படுத்தணும்,னு நிறைய செலவு பண்றே, உனக்கு அடிக்கடி உத்யோக பூர்வமா இங்கே வரமுடியறது, அதை தவிர செலவு பண்ணிண்டு நீங்கள் எல்லோரும் இங்கே வருகிறீர்கள். நீ சொல்றதை பார்த்தா நீ எல்லோரோடும் பழகமாட்டே. உன் லெவல்லே இருக்கறவாளோடு மட்டும் பழகுவே. உனக்கு கீழ் ரேங்க் லே இருக்கற வாளோடு பார்க்கவோ, பழகவோ, பேசவோ மாட்டே. இல்லையா'' என்கிறார் பெரியவா.


    அந்த முட்டாள் மனிதருக்கு புரியவில்லையே தவிர, அங்கிருந்த மற்ற பக்தர்களுக்கு விஷயம் புரிந்து விட்டது. பெரியவா எங்கே போகிறார்கள் என்று உணர்ந்து ஆர்வமாக கேட்டார்கள்.


    ''பணம் இருக்கிறதால, இங்கேருந்து எல்லாம் வாங்கிண்டு போறே. அங்கிருந்து நினைச்சபோது வர்றே. யார் உனக்கு இப்படியெல்லாம் பித்ரு காரியம் அங்கே பண்ணலாம்னு சொல்லிக் கொடுத்தது? உன் கிட்டே பிண்டம் பித்ரு தேவதைகள் அந்த பரதேச பூமிலே வந்து வாங்கிக்குவா என்று யார் சொன்னது? எனக்கு தெரிஞ்சு அவா அம்மாவாசை, மாச தர்ப்பணம், மஹாளய தர்ப்பணம் ஸ்ராத்த திதி இதுலே இந்த பாரத புண்ய பூமிலே, பரத கண்டத்தில் மட்டும் தான் வந்து வாங்கிக்கணும்னு கேள்விப்பட்டிருக்கேன். பாவம், நீ கவலைப்பட்ட, அக்கறையா இருக்கிற பித்ருக்கள் எல்லாம் வருஷா வருஷம் அந்தந்த திதிலே ஆர்வத்தோடு, ஆசையோடு, பசியா வந்து உன்கிட்டே பிண்டம் வாங்கிண்டு உன்னை ஆசீர்வாதம் பண்ண வந்தும் அது கிடைக்காம பாவம் வெறும் வயித்தோடு திரும்பி உன்னை சபிச்சுட்டு போயிண்டுருக்கா. இங்கேருந்து கடல் கடந்து பிராமணா வரமாட்டா. போகக்கூடாது என்கிறது சாஸ்திரம். பித்ருக்களுக்கு மேலான தெய்வங்கள் கிடையாதுன்னு சொல்றே. ஆனா அவா சாபத்தை நிறைய இருபத்தஞ்சு வருஷமாக வாங்கி நிறைய மூட்டை கட்டிக்கிறே .


    நீ சொல்றாப்பல நவராத்ரிக்கு மட்டும் விடாம இங்கே வந்து பெரிய தெய்வமான அம்பாளை வழிபட றே . ஆனா பித்ரு கார்யம் பண்ண அந்தந்த திதிலே இங்கே வந்து பண்ண மனசில்லே . உண்மையாக நீ சொல்றமாதிரி உன் தோப்பனார் தாயார் மேலே பக்தி இருந்தா இருபத்தஞ்சு வருஷமா அவர்களை பட்டினி போட்டதுக்கு பரிகாரமா உன் குடும்ப வாத்தியார்கள் கிட்டே கலந்து பேசி பித்ரு கர்மாக்களை இங்கேயே உனக்கும் அவர்களுக்கும் சௌகர்யமா ஒரு இடத்திலே பண்ணிடு. அப்பதான் உன் பித்ருக்கள்
    உண்மையாகவே திருப்தி அடைவா. ஆசிர்வதிப்பா. புரியறதா?''


    அந்த மனிதர் ஆடிப்போய் விட்டார். கண்களில் நீர் தாரை தாரையாக வெள்ளமாக ஓட பெரியவா எதிரே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினார்.


    ''மஹா பெரியவா, என் தெய்வமே, ஸாக்ஷாத் பரமேஸ்வரா, என் கண்ணைத் திறந்துட்டேள். முட்டாள் நான் தப்புப் பண்ணிட்டேன். இப்பவே போறேன். இத்தனை வருஷமா பண்ணின அபச்சாரத்துக்கு பரிகாரம் தேடி உடனே ஸ்ராத்தாதிகள் பண்றேன். எங்க எல்லாரையும் மன்னிச்சு பெரியவா பெரிய மனசு பண்ணி பிரசாதம் தரணும்னு வேண்டிக்கிறேன். இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல.


    பெரியவா தட்டுலே கல்கண்டு, பழம், வில்வம், விபூதி குங்கும பிரசாதம் கொடுத்தா. அந்த அம்மாளுக்கு ஒரு ரவிக்கை துண்டு. கொடுத்துட்டு '' எல்லோரும் மடத்துலே ஆகாரம் பண்ணிட்டு அம்பாளையும் தர்சனம் பண்ணிட்டு போங்கோ . ச்ராத்தம், பரிகாரம் எல்லாம் பண்ணிட்டு ஊருக்கு போறதுக்கு முன்னாலே வந்துட்டு போ. க்ஷேமமா இருப்பேள் ''


    தெய்வம் கை உயர்த்தி எல்லோரையும் ஆசீர்வாதம் பண்ணியது. இதழோரத்தில் ஒரு காந்தப் புன்னகை.
    அந்த குடும்பம் மீண்டும் ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம். ''இருபத்தஞ்சு வருஷ மஹா தப்பை பண்ணினவனுக்கும் அருள் புரிந்த தெய்வமே. உங்கள் கடாக்ஷத்தால் பரிகாரம் உடனே தேடுகிறேன். என் பித்ரு சாபத்திலிருந்து எனக்கு கதி மோக்ஷம் காட்டிட்டேள்''


    இது எல்லோருக்கும் ஒரு படிப்பினை.
Working...
X