Announcement

Collapse
No announcement yet.

Seshadri swamigal

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Seshadri swamigal

    Seshadri swamigal
    ஒரு அற்புத ஞானி
    சேஷாத்திரி ஸ்வாமிகள் J.K. SIVAN


    பார்வதி ஸ்வரூப ஸ்வாமிகள்


    சேஷாத்திரி ஸ்வாமிகளின் வம்சம் காமகோடி வம்சம் என்ற பெயர் கொண்ட குடும்பம். காமாக்ஷியை வழிபட்டவர்கள். தேவி உபாசகர்கள். சேஷாத்திரி ஸ்வாமிகள் ஒரு சிறந்த அம்பாள் பக்தர். ஸ்ரீ வித்யா உபாசகர். எப்போதும் மனமோ வாயோ காமாட்சியை ஸ்தோத்ரம் செய்து கொண்டே இருக்கும். சக்தி ஸ்வரூபம் அவர். அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவமும் மயிர்கூச்செரிய செய்யக்கூடியது. ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன். அதிசயித்து போவீர்கள்.


    பிரம்மஸ்ரீ என். சுப்ரமணிய அய்யர் ஒரு சிறந்த ஸ்ரீ வித்யா உபாசகர். சம தமாதி குணங்களுக்கு உறைவிடம். பராசக்தி உபாசனை ரஹஸ்யங்கள் கைவரப் பெற்றவர். தென்னாடு முழுதுமே அவரை மந்த்ர தந்த்ர சாஸ்த்ர மார்க்க தரிசி என்று கொண்டாடும். நித்ய கர்மாநுஷ்டானம், சிஷ்டாசாரம் விடாதவர். ரொம்ப பேசமாட்டார். சாந்த ஸ்வரூபி. அவரைப் பார்த்தாலே கோப தாபங்கள் அடங்கிவிடும். முகத்தில் பராசக்தி தேஜஸ் ஜொலிக்கும். '' ஸ்ரீ நகர விமர்சம், குருதத்வ விமர்சம்'' எனும் நூல்கள் இயற்றியவர்.


    சுப்ரமணிய அய்யரைப் பற்றி நிறைய சொன்னதற்கு காரணம் அவரது அனைத்து சக்திகளுக்கும் காரணம் சேஷாத்திரி சுவாமிகளே. ஸ்வாமிகளின் தாசர் ஐயர். அடிக்கடி ஸ்வாமிகளை தரிசிக்க மெட்ராஸிலிருந்து வருவார். ஸ்வாமிகளிடமிருந்து சக்தி உபாசனை ஆசீர்வாதம் வாங்கவேண்டும் என்று அய்யருக்கு ஆசை. அதை வெளிப்படுத்த வில்லை. ஸ்வாமிகளை அருணாசலத்தில் கண்டு வணங்கினார். தரிசனம் உபதேசம் பெற வந்தேன் என இன்னும் கேட்கவில்லை. அதற்குள்,.


    ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே ' நாளைக்கு. விடி காலம்பர இளையனார் கோவிலுக்கு வா'' என்கிறார். ஐயர் மறுநாள் காலை அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, ப்ரம்ம முகூர்த்தத்தில் இளையனார் கோவில் மண்டபத்தில் ஸ்வாமிகளைக் காண காத்திருக்கிறார். தூரத்தில் ஸ்வாமிகள் நிற்பது போல் தெரிந்தது. சற்று அருகே சென்றார். ஸ்வாமிகளைக் காணோம். அவர் தோன்றிய இடத்தில் திவ்ய ஸ்வரூப சர்வ லக்ஷண அம்பாள் பராசக்தி தேவி அல்லவோ ''வா'' என்று கையாட்டி அழைக்கிறாள். சிலையாக ஒரு கணம் நின்றார் ஐயர். ஓடினார். க்ஷண நேரத்தில் மீண்டும் அங்கே ஸ்வாமிகள் நின்றார். அவர் காலடியில் சிரம் வைத்து நமஸ்கரித்தார். உபதேசம் பெற்றார். பார்வதி தேவி யாகவே ஸ்வாமிகள் இருந்தார். பராசக்தி அம்சமாக இருந்ததால் சர்வ சக்தி பெற்றிருந்தார் என்று எல்லோரும் சொல்வது இதனால் தான்.


    இதைவிட வெகு ஆச்சர்யமான ஒரு நிகழ்ச்சியும் நடந்திருக்கிறது.


    நடேச ஐயர் ஸ்வாமிகளின் உறவினர். அவர் பிள்ளைக்கு ஐந்து வயதில் அம்மை வார்த்து பெரிய விஷ ஜுரம் தாக்கி, பெரிய அம்மையில் இரு கண்களும் கருவிழிகள் இழந்து குருடாயின. அம்மை இறங்கி, தலைக்கு ஜலம் விட்டு கண் சிகிச்சை பார்த்ததில் ஒரு பிரயோஜனமும் இல்லை. வைத்தியர்கள் இனி கண் பார்வை கிடையாது என்று கை விரித்து விட்டார் கள். நடேசய்யர் துடித்தார். என்ன செய்வது என்று தெரியாத போது தானே பகவான் ஞாபகம், ஸ்வாமிகள் ஞாபகங்கள் எல்லாம் வரும். திருவண்ணாமலைக்கு ஓடினார்.


    எப்படியோ தேடிக்கண்டு பிடித்து சேஷாத்திரி ஸ்வாமிகள் காலில் விழுந்தார்.'' என்னைத் தெரியறதா அம்மாஞ்சி. என் குழந்தைக்கு ரெண்டு கண்ணும் போயிடுத்து. நீங்க தான் அனுக்கிரஹம் பண்ணி அவனுக்கு கண் பிச்சை போடணும்'' கதறினார் ஐயர்.


    ''போ இங்கேருந்து. ராத்திரி என்கிட்டே கொண்டு வந்து விடு அவனை. ''


    ஐயர் வயிற்றில் பாலை வார்த்தது போல் இருந்தது. சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிவிட்டு நகர்ந்தார். சற்று தூரம் போன அவரை கூப்பிட்டார் ஸ்வாமிகள்.


    ''டேய் நடேசா, இங்கே வா. என்கிட்டே என்று நான் சொன்னா இங்கே கொண்டு வா என்று அர்த்தமில்லை. நீ இருக்கிற இடத்திலேயே அம்பாள் சந்நிதி இருக்கே அங்கேயே கொண்டு விடு''


    நடேசய்யர் உடனே அடி அண்ணாமலை கோவிலுக்கு ஓடினார். அங்குள்ள சிவாச்சார்யரிடம் நடந்ததை சொல்லி சேஷாத்திரி ஸ்வாமிகளின் கட்டளையை தெரிவித்தார். அவர்களுக்கு தான் ஸ்வாமிகளை பற்றி நன்றாக தெரியுமே. அன்றிரவு அர்த்த ஜாம பூஜைக்கு பிறகு நடை சாத்துவதற்கு முன்பு அம்பாளின் கர்பக்ரஹத்தில் பையனை விட்டு விட்டு கதவைச் சாத்தி பூட்டினார்கள்.


    வழக்கம் போல் மறுநாள் காலை 6.30 மணிக்கு தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி பிரார்த்தனை பண்ணிவிட்டு அம்பாள் சந்நிதியின் கதவை திறந்தார்கள். எப்போது கதவை திறப்பார்கள் என்று காத்திருந்த பையன் இரு கண்களும் பழையபடி குணமாகி ஒரே ஓட்டமாக வெளியே ஓடிவந்து விட்டான். நடேசய்யர் ஆனந்த பரவசமாகி, தாரை தாரையாக நன்றிப் பெருக்கில் அவனை வாரி அணைத்துக் கொண்டார். ஊர் முழுதும் காட்டுத்தீயாக இந்த அதிசயச் செய்தி பரவியது. ஆனால் ஸ்வாமிகளோ இது பற்றி ஒன்றுமே அறியாதவராக வேறு யாருக்கோ எங்கோ உதவி செய்து கொண்டிருந்தார். இதில் என்ன விசேஷம் என்றால் ''என்னிடம் கொண்டு விடு என்றால் என்னிடம் இல்லை. அம்பாளிடம்'' என்று கூறியது தான் ரஹஸ்யம். ஸ்வாமிகள் தான் அம்பாள். எத்தனை பேருக்கு இது தெரியும். தாயன்புக்கு ஸ்வாமிகளை போல் ஒருவரை இணையாக காட்டவோ சொல்லவோ முடியாதே.


    நடேசய்யரின் சொந்தஊரில் இருந்த ஒரு நாட்டுக்கோட்டை செட்டியார் சந்தோஷத்தோடு இந்த அதிசயத்தில் மகிழ்ந்து தனது கைங்கர்யமாக நடேசய்யர் பெண் கல்யாணத்தை தனது செலவில் ஜாம் ஜாம் என்று நடத்தினார் என்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை.
Working...
X