Announcement

Collapse
No announcement yet.

Kanhaiya and Godha Andaal

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kanhaiya and Godha Andaal

    Kanhaiya and Godha Andaal


    "கன்னைய்யாவைக் கடாக்ஷித்தக் கோதை..!"
    (ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் - 04.01.2019)


    ஈடு இணையிலா ஆண்டாளின் அன்பு, ஆளுமை, மாண்பு, வைராக்கியம், கோதைத் தமிழ் என தனித்தனியே ஆராய்ச்சிகள் செய்து கொண்டே போகலாம்..!


    அவள் தம் அடியார்களிடத்து காட்டிய அன்பு அபரிமிதமானது..!


    "ஸ்ரீகிருஷ்ண விநோத சபா" -- அந்த காலத்தில் கொடிக்கட்டிப் பறந்த நாடக ஸபா..!


    இதன் உரிமையாளர் - திரு. கன்னைய்யா..!


    தோற்றம் 1877 என்று ஊகிக்க முடிகின்றது.
    ."சம்பூர்ண ராமாயணம்"."அரிச்சந்திரா". "தசாவதாரம்',"கிருஷ்ணலீலா "."ஆண்டாள் திருக்கல்யாணம்", "துருவன்","சக்கு பாய்". "பக்த குசேலா","சாகுந்தலா","பகவத் கீதை", முதலான நாடகங்களை நடத்தினார்.!


    இவரது மேடை அமைப்பு, காட்சிகள் அமைப்பு முதலானவை தத்ரூபமானது..!


    அரிச்சந்திரா நாடகத்தில், இடுகாடு, பிணம் எரிதல் போன்ற காட்சிகளை்த் தத்ரூபமாக வடிவமைப்பார்..!


    காட்சிகளில் குதிரை, யானை, தேர், காளைகள் என அனைத்தும் நிஜமாகவே நடித்தன.


    இவரது "தசாவதாரம்" நாடகம் மட்டும் சென்னையில் 1008 நாடகள் நடைபெற்றது...!


    சென்னையில் நடக்கும் நாடகத்திற்கு பல நுாறு மைல்கள் கடந்து, திருநெல்வேலியில், விளம்பரங்கள் வைக்கப்பட்டது..!


    பிரபலமான காட்சி அமைப்புகள், தத்ரூபமான காட்சிகள், அற்புதமான ஐம்பது நாடக கலைஞர்கள், உழைப்பாளிகள்..! அக்காலத்தில் பிரபலமான கே.ஜீ. கிட்டப்பா இவரது நாடகசபாவில் நடித்தவர்..!


    10 லாரிகளுக்கும் அதிகமான நாடக சம்பந்தப்பட்ட அரங்கப் பொருட்கள், உடைகள், ஆடை அணிகலன்கள்..!


    டிக்கட் கிடைக்காமல் அலைமோதிய மக்கள்..!


    அந்த காலத்திலேயே, தமது நாடகங்களுக்கு முன் பதிவு முறையைக் கொண்டு வந்தவர் இவர்..!


    அனைத்து பரிகரணங்கள், பரிவாரங்களோடு, ஸ்ரீவில்லிபுத்துார் (1929ம் ஆண்டு...?) வருகின்றார்..!
    வள்ளித்திருமணம் நாடகம் போடுகின்றனர்..!
    தெற்குரத வீதியில், பிரும்மாண்ட பந்தலுடன், மிகப்பெரிய செலவில், நாடகமேடை அமைக்கப்படுகின்றது..!


    நாடகம் நடைபெற மூன்று நாட்களே பாக்கி..! சில சில்லறை வேலைகள் மடடுமே பாக்கியிருந்தன..!
    மழை பொழிய ஆரம்பித்தது..! சிறிது சிறிதாக கனமழையாயிற்று..! விடாது மூன்று நாட்களும் பெய்து அடம் பிடித்தது....!


    பிரும்மாண்டமான பொருட்செலவில், பாதிக்கும் மேல் வீணானது..!


    மூன்றாம் நாள் இரவு, அரவணைப் பூஜையின் போது, தாங்கவொண்ணா வேதனையுடன், ஆண்டாளைத் தரிசிக்க வருகின்றார் கன்னைய்யா..!


    அர்ச்சகர், அரவணைப் பிரஸாதம் அளிக்கின்றார்..!


    ".....ஓய் ஸ்வாமி..! வருந்தாதீர்..! ஆண்டாளுக்கு என்ன செய்வீர்..?"

    ---அர்ச்சகர் முகனே ஆண்டாள் பேசினாளோ..?


    "ஆண்டாள் எதைக் கேட்டாலும் தருவேன்..! காப்பாற்றினால் போதும்.." - இது கன்னைய்யா..!


    ஆண்டாளை தரிசித்த கன்னைய்யாவிற்கு, அன்று என்னவோ, ஆழ்ந்த உறக்கம் வந்தது..!


    கன்னய்யாவின் கனவில் ஆண்டாள் வந்தாள்..!


    "நீ உன் கழுத்தில் போட்டிருக்கும் பதக்கத்தினை எனக்குக் கொடுத்து விடு..!"


    கன்னய்யா அதிர்ந்து எழுந்தார்..! ஆண்டாள் ஆணையினை மீற முடியுமா என்ன..? ஆயினும் தாம் கழுத்தில் அணிந்திருக்கும் பதக்கமாயிற்றே..! அதனைக் கோவிலார்கள் ஏற்றுக்கொள்வார்களா..? என ஐயம்..! தயங்கியபடியே, மறுநாள் காலை அந்த பதக்கத்துடன் கோவிலுக்குள் நுழைகின்றார்..!


    அர்ச்சகர்களும் கோவிலார்களும் கன்னய்யாவினை வரவேற்கின்றனர்..! முதல் நாள் கன்னய்யாவின் கனவில் வந்து உத்தரவிட்ட ஆண்டாள், அர்ச்சகரின் கனவிலும் வந்து,


    "கன்னைய்யா கொடுக்கும் பதக்கத்தினை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு, எனக்கு சாற்றிவிடு"


    என்று ஆணையிடுகின்றாள்..!


    கன்னைய்யா உணர்ச்சி பிழம்பானார்..!
    ஆசையோடு சமர்ப்பித்தார்..!
    கோவிலார்களும் அதற்குரிய கிரியைகளைச் செய்து ஆண்டாளுக்கு சமர்ப்பித்தனர்....!


    அது கன்னைய்யாவிற்கு என்று செய்யப்பட்ட பதக்கமன்று..!
    ஆண்டாளுக்கெனவே பிரத்யேக அளவு எடுத்து செய்யப்பட்ட பதக்கம் போன்று, பொலிவு கூடி, அனைவரையும் அதிர வைத்தது..!


    இந்த பதக்கம் 2 புறமும் பட்டை தீட்டப்படாத பளச்சை வைரம், நடுவே பச்சைக்கல், கீழே விலையுயர்ந்த ஒரு தொங்கல் உள்பட மிகுந்த வேலைப்பாட்டுடன் இருக்கும்..! இன்றும் ஆண்டாள் முக்கியமான திருவிழாக்களில் ஆசை ஆசையாய் சாற்றிக் கொள்ளும் பதக்கம்..!


    அங்கு கைங்கர்யம் செய்யும் பெரியாழ்வாரின் வம்சத்தில் வந்த ஸ்வாமி வேத பிரான் பட்டர்...,
    "இந்த பதக்கம் தாயாருக்குக் கன கச்சிதமாகப் பொருந்தும் பதக்கம்..! ஆண்டாள் ஆசை ஆசையாய் அணிந்து கொள்ளும் ஆபரணம்..!"
    என்று சிலாகிக்கின்றார்..!


    விடாது பெய்த அடைமழை நின்றது..!
    நாடகம் எதிர்பார்த்தபடி பேராதரவு பெற்றது..!
    மேலும் ஆண்டாளின் உத்தரவுப்படி, ஆண்டாள் திருக்கல்யாணம் எனும் நாடகம், மற்றும் பல வைணவ நாடகங்கள், மக்களின் மழை வெள்ளத்தில் திளைத்தது..!


    ஆண்டாளின் கருணையினால், தமக்கு ஏற்பட்ட நஷ்டம் தொலைந்து பன்மடங்கு இலாபம் பெருகியது..!
    கண்கள் பனிக்க, ஆண்டாளிடம் விடைபெறுகின்றார்..!


    "நீ உன்னுடைய யானையையும், உன்னுடன் வைத்துள்ளத் தங்கக்குடத்தையும் கொடுத்துவிட்டுப் போ..!" -- ஆண்டாள் உத்தரவிட்டாள்..!


    ஆனந்தமாகக் கொடுத்துவிட்டு அகன்றார், கன்னைய்யா..!


    யானை, ஆண்டாளுக்கு ஆனந்தமாக கைங்கர்யம் செய்து, அதன் பிறவிப்பயனை எய்தது..!


    1931ம் ஆண்டு - கன்னைய்யாவினை, ஆண்டாள் அழைத்தாள் - வைகுந்த விண்ணகரம் அடைந்தார்..!


    வேதபிரான் பட்டர் சொல்கிறார்,


    "தமக்கு வேண்டுமென்றால் பிடிவாதமாகக் கேட்டுப் பெறுவாள் - வேண்டாதவர்களுக்கு தரிசனம் கூட கொடுக்கமாட்டாள், இவள்..!"


    பிடிவாதம்.........!


    இந்த ஆளுமைதானே ஆண்டாளுக்கே அழகு..!


    இந்த பிடிவாதம்தானே, அரங்கனுடன் ஐக்யமாகிட காரணமாயிற்று..!


    கன்னையாவின் அந்திம காலத்தில், கேட்டுப் பெற்றாள் ஆண்டாள்..!


    இவைகளெல்லாம் அவருடனேயே இருந்திருந்தால் என்னவாயிருக்கும்..!


    சின்னாபின்னமாகி, அவர்கள் குடும்பத்தாரால் பிரிக்கப்பெற்று, கரைந்து போயிருந்தாலும் போயிருக்கும்..!


    ஆண்டாளிடம் இருப்பதனால், இன்னமும் "கன்னைய்யா பதக்கம்,..! கன்னைய்யா குடம்...! எனக் கோவிலார்களால் அன்போடு மதிக்கப்பெற்று, ஆசையாய் ஆண்டாள் அனுபவிக்கின்றார்..!


    ஏறத்தாழ ஒரு நுாற்றாண்டிற்குப் பிறகு நாம், ஆண்டாளின் அனுக்ரஹத்தினை, கன்னைய்யாவினை, இன்னமும் மனக்கண்ணில் தரிசிக்கின்றோம்..!


    இந்த வைபவங்களை விவரித்த, பெரியாழ்வார் வம்சாவழி, வேதபிரான் பட்டருக்கு ஒரு பல்லாண்டு பாடுவோம்..!


    தாஸானு தாஸன் - முரளீ பட்டர்
Working...
X