Announcement

Collapse
No announcement yet.

The desire of Dhrtashtra

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • The desire of Dhrtashtra

    ஐந்தாம் வேதம் பாகம் 2 - J.K. SIVAN
    அஸ்வமேதிக பர்வா
    70 திருதராஷ்டிரன் விருப்பம்
    ''வைசம்பாயனரிஷி, யார் அந்த கீரிப்பிள்ளை, மனித குரலில் பேசியது? என்று தெரியுமா. தெரிந்தால் சொல்லுங்கள்'' என்றான் ஜனமேஜயன்.
    ''ஜனமேஜயா நீ கேட்பாய் என்று தெரியும். சொல்கிறேன். ஒரு காலத்தில் ரிஷி ஜமதக்னி ஒரு ஸ்ராத்தம் ஏற்பாடு செய்தார். அவரது ஹோம பசு அங்குவந்து அவர் அதன் பாலை கறந்தார். அதை ஒரு புது பாத்திரத்தில் சேமித்து சுத்தமாக மூடி வைத்தார். தர்ம தேவன் இதை கவனித்து அந்த பாலை கெட்டுப்போகச் செய்து விட்டான். ரிஷி அவன் மீது கோபம் கொள்ளவில்லை. அவன் அடுத்து ஒரு பிராமண ஸ்திரீயாக அவர் முன் நின்றான்.
    மகரிஷி, நான் தான் ''கோபம்'' என்பவன். உங்களை கோபமடைய செய்வதற்காக பாலை கெடுத்தேன். நீங்கள் கோபக்கார பிருகு வம்ச ரிஷி என்று இருந்தும் ஏனோ துளியும் கோபம் என்மேல் கொள்ளவில்லை. என்னை நீங்கள் வென்றுவிட்டீர்கள். ஆசீர்வதியுங்கள்.
    ''கோபமே, எனக்கு உன்மீது எந்த உணர்வும் இல்லை. இந்த பாலை நீ கெடுத்தாய் என்பதும் தெரியும், நீ ஒரு பெண்ணாக இப்போது வந்து நிற்பதும் தெரியும். இந்த பால் பித்ருக்களுக்காக வைக்கப் பட்டது. அதைக் கெடுத்து விட்டாய். எனவே நீ அவர்களை சந்தித்து நீ செய்ததற்கு அவர்களிடம் பரிகாரம் கேள். ''
    கோபம் அவரை வணங்கிவிட்டு மறைந்தான். பித்ருக்கள் லோகத்தில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு அவர்களால் சபிக்கப் பட்டு ஒரு கீரிப்பிள்ளையாக உருவெடுத்தான் . எங்கெல்லாமோ அலைந்து திரிந்து அவதிப் பட்டு கடைசியில் ஒரு உஞ்சவிருத்தி பிராமணன் வீட்டில் உடம்பில் பாதி தங்க நிறம் பெற்றான்.
    யுதிஷ்டிரனின் அஸ்வமேத யாக நிறைவு பற்றி குறைவாக சொன்னபோதும் யுதிஷ்டிரன் அவன் மீது வருத்தம் கொள்ளாமல் அன்புடன் சிரித்தது கீரிப்பிள்ளையின் முன்ஜன்ம பாபத்தை நிவர்த்தி செய்தது. யுதிஷ்டிரன் தர்மத்தின் புத்ரன் அல்லவா. சாப நிவர்த்தி அடைந்தான் கோபன்.
    இத்துடன் அஸ்வமேத பர்வம் முடிந்து பாரதத்தின் அடுத்த பர்வமான ஆஸ்ரமவாசிக பர்வம் துவங்குகிறது.
    வைசம்பாயனர், யுதிஷ்டிரன் எப்படி திருதராஷ்டிரனை சக்ரவர்த்தியாக கொண்டு அரசாட்சி நடத்தினான் என்று விளக்குகிறார். திருதராஷ்டிரனுக்கு புத்திரர்களை இழந்த துக்கம் வராதபடி, பாண்டவர்களும் அரண்மனையில் எல்லா பெண்களும் அவனருகில் இருந்து கொண்டு உபசாரங்கள் செயது மகிழ்வித்தனர். திருத ராஷ்டிரனின் மக்கள் கூட இது போல் அவனை கண்ணிமை போல் காத்து அருகே இருந்து உபசரிக்கவில்லை.
    ஆனால் பீமன் தனது பிள்ளைகளை கொன்றதை கடைசி வரை திருதராஷ்டிரன் மறக்க வில்லை. பீமனும் யுதிஷ்டிரன் போல் அவனிடம் அவ்வளவு நெருங்கி பழகவில்லை. அவனும் இரும்பு பீமன் பொம்மையை திருதராஷ்டிரன் நொறுக்கியதை எளிதில் மறக்க முடியாதே. காந்தாரியும் எளிதில் பீமனால் தனது பிள்ளைகள் அனைவருமே கொல்லப்பட்டதை மறக்க வில்லை.
    ஒரு நாள் பீமன் யாரிடமோ தனது கரங்களின் வலிமையை பற்றி சொல்லிக்கொண்டிருந்ததை திருதராஷ்ட்ரனும் காந்தாரியும் கேட்க நேர்ந்தது.
    ''இந்த வலிமையான கரங்களால் தான் அந்த துரோகி துரியோதனனையும் அவன் சகோதரர்கள் அத்தனை போரையும் கொன்றேன். என் கைகளில் சிக்கிய எந்த எதிரியும் பிழைப்பது அரிது''.இது நடந்து பதினைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டது. இன்னும் அது காதில் அவர்களுக்கு ஒலித்து கொண்டு தான் இருந்தது. பீமன் இவ்வாறு பேசியது மற்ற பாண்டவர்கள் எவருக்கும் தெரியாது.
    ஒரு நாள் திருதராஷ்டிரன் கண்களில் நீர் வழிய தன் அருகில் இருந்தவர்களிடம் மனதை திறந்து என்ன சொன்னான் தெரியுமா ஜனமேஜயா?
    ''சொல்லுங்கள் மகரிஷி''
    ''இந்த குரு வம்சத்தின் நாசத்திற்கெல்லாம் நானே காரணம். நான் சொன்னதை அமைச்சர்களும் மற்றவரும் தடை சொல்லாது நிறைவேற்றினார்கள். துரியோதனனை அரசனாக்கியது நான் தான். அவன் அரசனாக பதவி ஏற்க தக்கவன் அல்ல என்று எனக்கு உணர்த்தியும் நான் செவி மறுக்கவில்லை. அவன் மீது கொண்ட பாசத்தால் அவன் தவறுகளை தடுக்கவில்லை.
    வாசுதேவன் என்னிடம் படித்து படித்து சொன்னான் ''இந்த கெடுமதி கொண்ட துரியோதனனையும் அவனுக்கு தவறான வழிகளை காட்டிக்கொண்டிருந்த நண்பர்கள், மந்திரிகளை உடனே கொன்று விடு. இல்லாவிட்டால் அவனால் இந்த குலமே நாசம் அடையும்'' என்று சொன்னபோது அதை நான் மதிக்கவில்லை. அவன் மீது கோபம் தான் அடைந்தேன். பீஷ்மர் விதுரன் ஆகியோர்களும் திரும்ப திரும்ப இதையே தான் சொன்னார்கள். அதுவும் என் காதில் ஏறவில்லை. எந்த அறிவுரையும் நான் ஏற்கவில்லை.
    இந்த வளமான நாடு சீரழிய அவப்பெயர் எடுக்க நான் காரணமாகிவிட்டேன். முன்னோர்கள் ஆண்ட நாட்டின் சிறப்பை எல்லாம் தொலைத்து விட்டேன்.
    இதோ யுதிஷ்டிரன் எவ்வளவு நீதி நேர்மையோடு எல்லோரும் புகழ நாடாளுகிறான். இதற்கு வழி இல்லாமல் இத்தனை காலம் செய்தவன் நான் தானே.
    என் செயலால் உயிரிழந்த ஆயிரம் லக்ஷம் மக்கள், அவர்கள் குடும்பங்களின் சோகம், எண்ணற்ற உயிர்களின் அழிவு.... ஒவ்வொருநாளும் இப்போது அதெல்லாம் நினைத்து நினைத்து ஆயிரமாயிரம் எண்ண அம்புகளால் துளைக்கப்பட்டு வாடுகிறேன்.
    என் செயலுக்கு பரிகாரம் தேடுகிறேன். அன்ன ஆகாரங்களை குறைத்து எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொள்கிறேன். பசியும் தாகமும் என்னை துன்புறுத்தட்டும். இந்த விரதத்தை யுதிஷ்டிரனுக்கு தெரியாமல் செயகிறேன். பாவம் தெரிந்தால் வருத்தப் படுவான். என் மீது சொந்த தந்தையை விட அதிக பாசம் வைத்து என்னை போஷிக்கிறான். பூமியின் பாரத்தை, பூமா தேவியின் கஷடத்தை நிவர்த்திக்க அந்த மஹா விஷ்ணு கிருஷ்ணனாக அவதரித்து தீயவர்களை எல்லாம் அழிவுறச் செயது பூமியின் பாரத்தை குறைத்தான் என்று பூரணமாக உணர்கிறேன்.
    என் மனைவி காந்தாரியும் என் போல் விரதமிருக்கிறாள், ஒற்றை துணியோடு தர்ப்பை பாயில் படுத்து தவமிருக்கிறாள். நூறு பிள்ளைகள் இருந்தும் ஒருவனும் திரும்பவில்லை. வீர க்ஷத்ரியனாகவே யுத்த களத்தில் மறைந்தார்கள் என்ற ஒரு எண்ணத்தில் தான் சமாதானம் அடைய முடியும்.''
    ஒருநாள் திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனை அழைத்தான். ''மகனே, இந்த நாள் வரை உன்னால் நானும் காந்தாரியும் சகல சந்தோஷத்தோடும், நிம்மதியோடும், வசதியோடும், மகிழ்வோடும் வாழ்ந்துவிட்டோம்.
    உனக்கும், உன் சகோதரர்களுக்கும், திரௌபதிக்கும் தீங்கு செய்த அனைவரும் கூண்டோடு செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று விட்டார்கள்.
    நமது பண்பாட்டின் படி, வழக்கப்படி, சாஸ்திரப்படி, இனி நானும் காந்தாரியும் உன் உதவியோடு எங்களுக்கு முறைப்படி நேரவேண்டிய வானப்ரஸ்த வாழ்க்கையை அனுஷ்டிக்க முடிவு செயது விட்டேன். நாங்கள் காட்டுக்கு சென்று எளிய மரவுரி தரித்து, காய் கனி கிழங்குகளில் வாழ்ந்து இறைவனை துதிக்கவேண்டும். உனக்கு எங்கள் பூரண ஆசியும் எப்போதும் உண்டு . நீ தர்மவான். நீதிமான். எனக்கும் இந்த வம்சத்துக்கும் புகழ் சேர்த்தவன். எங்கள் பெயரால் எண்ணற்ற தான தர்மங்கள் செயது வருகிறாய். நாங்கள் சந்தோஷமாக வனவாசம் புரிய நீ ஏற்பாடு செய் மகனே'' என திருதராஷ்டிரன் சொன்னவிடும் யுதிஷ்டிரன் துடித்துப் போனான்.
    ''என் தாய் தந்தை நீங்கள் இருவரும். உங்களை இழந்து நான் இந்த அரண்மனையில் என்ன சுகம் பெறுவேன். நானும் உங்களோடு வந்து விடுகிறேன். எஞ்சிய ஒரு உறவினன் யுயுத்சு இருக்கிறான். அவனை அரசனாக்கி விடுகிறேன். உங்களோடு ஆரண்யத்தில் ஆஸ்ரம வாசம் நானும் மேற்கொள்கிறேன்'' என்றான் யுதிஷ்டிரன், என கதையை நிறுத்தினார் பரமேஸ்வரன்.
Working...
X