Announcement

Collapse
No announcement yet.

Rama accepts defeat from Sita - Velukkudi krishnan swamy

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Rama accepts defeat from Sita - Velukkudi krishnan swamy

    ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 22


    அயோத்தியில் வாழ்ந்த காலத்தில் ராமனிடம் சீதை பேசியதே இல்லை. இதழோரம் சிறுபுன்னகை மட்டுமே செய்வாள். தசரதரின் 360 மனைவியரும் அரண்மனையில் இருந்ததால், சீதைக்கு மாமியார்கள் பயம். அதனால், ராமனிடம் கூட பேச மாட்டாள்.


    ஆனால், காட்டிற்குச் சென்றதும், ராமனிடம் கலகலப்பாகப் பேசி சிரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. விளையாட்டே போட்டியாக மாறியது. யார் முதலில் கோதாவரி நதியில் நீந்தி கரையை தொடுகிறார்கள் என்பது தான் போட்டி. நடுவராக லட்சுமணன், நதிக்கரையில் இருந்த பாறையில் அமர்ந்து கொண்டார். ராமன் கணப்பொழுதில் கரையை தொட்டுவிட வந்து விட்டார்.


    இருந்தாலும், தொடுவதற்குள் சீதையைத் திரும்பிப் பார்த்தார். சீதை ஆரம்பித்த இடத்திலேயே நீந்திக் கொண்டிருந்தாள். ராமன் மனைவி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மூச்சடக்கி தண்ணீருக்குள் தலையை மறைத்துக் கொண்டார். சீதையும் அக்கரையைத் தொட்டு விட்டு மீண்டும் கரைசேர்ந்தாள்.


    லட்சுமணனிடம், ""பார்த்தாயா? உன் அண்ணனை! இது தான் வசிஷ்டரிடம் கற்ற லட்சணமா?'' என்று கேலி செய்தாள். ஆனால், ராமனுக்கோ மனைவியிடம் தோற்றுப் போனதில் அவ்வளவு சந்தோஷம். இந்த விஷயத்தை சீதையைப் பிரிந்த நேரத்தில் ராமன் எண்ணிப் பார்க்கிறான். அதாவது, பிராட்டி சம்பந்தம் இல்லாமல் அவன் இல்லை. ராமபட்டாபிஷேக நேரத்திலும், வசிஷ்டர் அதை சாதாரண ராஜ பட்டாபிஷேகமாகக் காணவில்லை.


    "கல்யாண குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம்' என்று சொன்னார். அதனால் தான், சீதையை ராமனின் அருகில் இருக்கச் செய்தார். ராமனுக்கும் அப்படித்தான்..அயோத்தி என்பது அவனுக்கு சிறிய வஸ்து. பக்கத்தில் சீதை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவன் குணத்தையே காட்டுகிறான்.


    வாலி வதம் விஷயத்திலும் இதை நாம் கண்கூடாகக் காணலாம். ராமபாணம் பட்டு வாலி அடிபட்டு விழுந்ததும், ""ராமா...இம்மைக்கு மட்டுமல்ல, ஏழ்பிறப்புக்கும் ராம என்ற மந்திரமே உயர்ந்தது என்கிறார்கள். இத்தனை பெருமை பெற்ற நீ, என்னை மறைந்திருந்து கொன்றாய். இதன்மூலம், நீ என்னைக் கொன்றதாக நினைக்காதே. இக்ஷ்வாகு குலத்தின் பெருமையைக் கொன்றிருக்கிறாய். சக்கரவர்த்தி தசரதரின் பெருமையைக் கொன்றிருக்கிறாய்,'' என்று கடுமையாகச் சொன்னான்.
    ராமன் அவனுக்கு பல சமாதானங்களைச் சொன்னார். ஆனால், வாலி அவற்றை ஏற்க மறுத்துவிட்டான்.


    ""நீ என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்கமாட்டேன். ஆனால், நீ இவ்வாறு செய்ததற்கான காரணம் எனக்குத் தெரியும். சீதையைப் பிரிந்த பிறகு, நீ என்ன செய்கிறாய் என்பது உனக்கே தெரியவில்லை. ஆவியாய் வந்த சீதையை (உன் உயிர் போன்ற சீதையை) அமிழ்தம் போன்ற சீதையை, ஜனகன் பெற்ற அன்னமாகிய சீதையை நீ பிரிந்த பிறகு, நீ திகைத்துப் போய் இருக்கிறாய்! என்ன செய்கிறாய் என்பது உனக்கே தெரியவில்லை. அதனால் தான் இப்படி செய்தாயோ?'' என்று பதில் சொல்கிறான்.
    உண்மையும் அதுதான்.


    பிராட்டியைப் பிரிந்தது முதல், தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே ராமன் தப்பு செய்தார். அப்படி தப்பு தப்பாக செய்ததில் ஒரு தப்பு தான் மறைந்து நின்று வாலியைக் கொன்றது.


    சரி...வாலி சொல்லித்தான் நமக்கெல்லாம் இந்த உண்மை தெரிய வேண்டுமா! ராமனே இதை ஒத்துக்கொண்டிருக்கலாமே! சீதையைப் பிரிந்து குழம்பியிருக்கும் நேரத்தில் இந்தக்குழப்பம் நேர்ந்து விட்டதாகச் சொல்லியிருக்கலாமே என்றால் அதற்கும் காரணம் இருக்கிறது.


    பத்தினி பிறந்த வீடு போயிருக்கிறாய் பர்த்தா என்ன செய்கிறான்? பால்காரன் யார் என்று கூட அவனுக்கு தெரியாது என்றாலும், அதை அவன் ஒத்துக்கொள்வானா? அதுபோலத்தான் இதுவும்! நாம் சின்ன விஷயத்தில் மயங்குகிறோம். பகவான் சரணாகதம் செய்யும் விஷயத்தில் மயங்கிப் போகிறான். இதிலிருந்தே புரியவில்லையா!


    பிராட்டி தான், அவனது மயக்கத்தைத் தீர்த்து வைக்கிறாள் என்று! ஆகவே, அவள் அருகாமையில் இருந்தால் தான், ராமன் எதையும் செய்வான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


    மாமல்லபுரத்தில் திருவிடந்தை வராகப்பெருமான் கோயில் இருக்கிறது. இவர் மீது திருமங்கையாழ்வார் நாயகி பாவத்தில் (தன்னை இறைவனின் காதலியாக நினைத்தல்) பாசுரம் பாடுகிறார். இந்தப் பெருமான் மீது அவருக்கு காதல். என்னை ஏற்றுக்கொள் என்கிறார். இதை ஆழ்வாரின் தாயார் கேட்கிறாள்.


    ""மகனே! அந்தப் பெருமானுக்கு திருமணம் ஆகிவிட்டதென்ற விஷயம் உனக்குத் தெரியாதா? எற்கனவே, திருமணமான ஒருவன், உன்னை எப்படி ஏற்பான்? நீ வேண்டுமானால் திருவிடந்தை போய் பார். அவன் தாயாருடன் சேவை சாதிப்பான். இடதுமடியிலே தாயார் வீற்றிருப்பாள், நன்றாகப் போய்பார்த்து வா,'' என்றாள்.


    திருமங்கையாழ்வாரும் திருவிடவிந்தை வந்தார். பெருமாளை சேவித்தார். அர்ச்சகரிடம் "தாயார் இங்கே இருக்கிறாளா?' என்றார்.


    ""ஆம்...பெருமாள் தாயாருடன் தான் சேவை சாதிக்கிறார். அவரது இடதுமடியிலே வீற்றிருப்பதை தாங்கள் சேவிக்கலாமே!'' என்று பதில் சொன்னார் அர்ச்சகர்.


    அவசரமாக வீடு திரும்பினார் திருமங்கையாழ்வார்.


    அம்மாவிடம் போனார்.


    ""நான் அந்தப் பெருமானை இப்போது முன்பை விடத் தீவிரமாக இரண்டு மடங்கு காதலிக்கிறேன்,'' என்றார்.


    ""என்னடா இது! இவன் அனர்த்தமாகப் பேசுகிறானே! தாயாருடன் பெருமாளைப் பார்த்து வா! அவன் ஏற்கனவே திருமணமானவன் என்று சொல்லி அனுப்பினால், தாயாருடன் சேவித்த பிறகும், இப்படி பேசுகிறானே!'' என்று தவித்த வேளையில், ""பிராட்டியின் கடாட்சம் இருந்தால் தானே அவனையே அடைய முடியும் என்ற அர்த்தத்தில் அவர் சொன்னது அந்த தாய்க்கு தெரியவந்தது.


    அலைகடலைக் கடைந்த போது வெளிவந்த சாதாரண அமுதத்தை பெருமான் தேவர்களுக்கு கொடுத்து விட்டார். ஆனால், நிஜமான அமுதமான பிராட்டியை ஏற்றார். அவள் அன்று அவர் மார்பில் ஏறி அமர்ந்தது தான்! இன்றுவரை அவரோடு இருக்கிறாள். எனவே பிராட்டியால் மட்டுமல்ல!


    நாம் எல்லாருமே பெருமானை ஆலிங்கனம் (தழுவுதல்) செய்து ஆனந்தமாக இருக்க முடியும். அதாவது, அவனை அடைய முடியும். அதற்கு அவனை சரணாகதி அடைய வேண்டும்
Working...
X