சப்த கன்னியர்கள் ஏழு பேர் அவர்கள்,
1,பிராம்மி
2,மகேஸ்வரி
3,கௌமாரி
4,வைஷ்ணவி
5,வராஹி
6,இந்திராணி
7,சாமுண்டி. இவர்களை “சப்த மாதாக்கள்” எனவும் அழைப்பார்கள்.


அன்னை ஆதிபராசக்தியின் கன்னி வடிவமான “சப்த கன்னியர் வழிபாடு” என்பது பெரும்பாலான மக்களால் கடைப்பிடிக்கப் படுகிறது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பொதுவாக பல இடங்களில் 7 செங்கல்லை வைத்து அலங்கரித்து, பொங்கலிட்டு படையல் வைப்பதையும் பார்த்து இருப்பீர்கள். அவை யாவுமே `சப்த மாதாக்கள்’ எனப்படும் சப்த கன்னியர் வழிபாடுதான்.


சப்த மாதாக்கள் நம்முடைய வேண்டுதல்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றி வருகிறார்கள்.


சப்தகன்னியர் வரலாறு:


பெண்ணின் கருவில் தோன்றாத கன்னித்தன்மை வாய்ந்த ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் உண்டாக வேண்டும் என்ற வரத்தை பிரம்மாவிடம் வேண்டி வாங்கினார்கள் “சண்ட முண்டர்” எனும் இரு அரக்கர்கள்.


பெண் என்றால் அவர்களுக்கு அத்தனை இளக்காரம் போலும். ஒரு பெண்ணா நம்மை கொல்லப் போகிறாள் என்ற தைரியத்தில் அவர்கள் எல்லோரையும் கொடுமை செய்தார்கள்.


அன்னை ஆதிசக்தியின் அருளைப் பெற்ற காத்தியாயன முனிவரையே கொடுமை செய்யத் துணிந்த நிலையில், அன்னை ஆதிபராசக்தி கொதித்தெழுந்து அசுரர் படையை அழிக்கக் கிளம்பினாள்.


சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், வராக மூர்த்தி, யமன் என ஒவ்வொருவரின் அம்சமாக ஏழு கன்னியர்களை உருவாக்கி அசுரக் கூட்டத்தை அழித்தால் அழித்தனர். அன்று முதல் இந்த சப்த மாதாக்களும் மக்களை காக்குமாறு சிவபெருமானால் பணிக்கப்பட்டு, அவரின் அம்சமான வீரபத்திரரின் துணையோடு அருள்புரியத் தொடங்கினர்.


சிவாலயத்தில் பெரும்பாலும் இவர்கள் ஏழு பேரின் சிலைகளைக் காணலாம். ஆலயங்கள் மட்டுமல்ல, ஆற்றங்கரையோரம், ஏரி, குளம், ஊரின் எல்லைகள் என எங்கேயும் இவர்களின் சிலைகள் வழிபடும் விதமாக இருந்து வருகின்றன.


ரிக் வேதம், மார்க்கண்டேய புராணம், காளிதாசரின் குமார சம்பவம், விஷ்ணு தர்மோத்தர புராணம், தேவி பாகவதம் போன்றவற்றில் கன்னிமார்களின் விவரங்கள் கூறப்பட்டுள்ளன.


சப்தகன்னியரின் சிறப்புகள்:


1,பிராம்மி:


பிரம்மனின் அம்சமாகத் தோன்றிய இந்த கன்னி, சரஸ்வதியின் அம்சமானவள்.


கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வேண்டுவோர் இவளை வணங்கி அருள் பெறலாம்.


மூளையின் செயல்களைக் கட்டுப்படுத்தும் பிராம்மி, மேற்கு திசைக்கு அதிபதியாக இருந்து ஆட்சிபுரிகிறாள்.


தோலுக்கு தலைவி என்பதால் தோல் வியாதிகளைத் தீர்ப்பவள்.


2,மகேஸ்வரி:


ஈசனின் அம்சமான இந்த கன்னி கோபத்தை நீக்கி, சாந்த குணத்தை அருளக்கூடியவள்.


சகல பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும் இந்த தேவி வடகிழக்கு திசைக்கு உரியவள்.


சிவனைப்போலவே தோற்றமும் ஆயுதங்களும் கொண்டவள்.


மகேஸ்வரி பித்தத்தினை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவள்.


3,கௌமாரி:


முருகப்பெருமானின் அம்சமாகத் தோன்றிய கன்னி இவள்.


சஷ்டி, தேவசேனா என பெயர்கொண்ட இவள், குழந்தை வரம் அருளும் நாயகி.


செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், வீடு, மனை தொடர்பான சிக்கல் உள்ளவர்களும் இந்த கன்னியை வணங்கலாம்.


ரத்தத்துக்கு தலைவி என்பதால் உஷ்ண சம்பந்தமான எந்த வியாதிக்கும் கௌமாரியை வேண்டலாம்.


4,வைஷ்ணவி


திருமாலின் அம்சமாகத் தோன்றிய கன்னி இவள். `நாராயணி’ என்றும் அழைக்கப்படுகிறாள்.


செல்வ வளம் பெறவும், உற்சாகமாகப் பணியாற்றவும் இவளை வேண்டலாம்.


விஷக்கடி, கட்டிகள், வீக்கம் போன்ற வியாதிகளைத் தீர்ப்பவள் இந்த தேவி. திருமாலைப் போன்றே சங்கு சக்கரம் ஏந்தி பக்தர்களைக் காப்பவள்.


5,வராகி:


வராக மூர்த்தியின் அம்சமாக அவரைப்போலவே தோன்றியவள் இந்த கன்னி.


சிவன், விஷ்ணு, சக்தி ஆகியோரின் அம்சமாக இருப்பதால் எதிரிகளை வெல்லவும், தடைகளை அகற்றவும் உதவி செய்பவள்.


வராகியை வணங்குபவர்களுக்கு துன்பமே வாராது என்பது மக்களின் நம்பிக்கை.


6,இந்திராணி


இந்திரனின் அம்சமாக அழகே வடிவாகத் தோன்றிய கன்னி இவள்.


மிகப்பொருத்தமான துணையைத் தேடித்தரும் இந்திராணி மகாலட்சுமியின் அம்சம் என்றும் போற்றப்படுகிறாள்.


கடன் பிரச்னைகள் தீரவும்,தாம்பத்திய சிக்கல் நீங்கவும் இந்த கன்னியே துணைபுரிகிறாள்.


7,சாமுண்டி:


ருத்திரனின் அம்சமாக, பத்திரகாளியின் வடிவமாக முதலில் தோன்றிய கன்னி இவள்.


எந்தவித மாந்திரீக சக்திக்கும் கட்டுப்படாத இந்த கன்னி, நம்பியவரை காக்கும் பலம்கொண்டவள்.


எந்தவிதமான பயம் இருந்தாலும், இவளை வேண்டியதும் அது விலகிவிடும்.


வீரத்துக்குப் பொறுப்பான சாமுண்டி, உடல் பலத்துக்கும் நலத்துக்கும் பொறுப்பானவள்.


மக்களைக் காக்கும் இந்த சப்த கன்னியர், கிராம தெய்வங்களாகவும் பல்வேறு பெயர்களில் இருந்து இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாத்துவருகிறார்கள்.


சகல சம்பத்துகளையும் அளித்து, சர்வ வியாதிகளையும் போக்கும் சப்த மாதர்களை எந்நாளும் வணங்கி நலமும் வளமும் பெறுவோம்.