Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 8 adhyaya19, 20,21 in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 8-அத்தியாயம் 19


    இவ்வாறு மகாபலியால் வேண்டுவதை தானமாகப் பெற்றுக் கொள்ளும்படி கூறப்பட்ட பகவான் ஒருவரிடம் தானம் பெறுபவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை காட்டுபவராக பலியின் முன்னோரைப் புகழ்ந்தார். ஹிர்ணய கசிபு ஹிரண்யாக்ஷன் இவர்களின் பராக்ரமத்தையும் பலியின் பாட்டனாரான ப்ரஹ்லாதனின் பெருமையையும் புகழ்ந்தார்.


    இது ஹிரண்யாக்ஷன் ஹிரண்ய கசிபு இவர்களின் ஆணவத்தால் விளைந்த அழிவை பலிக்கு நினைவு படுத்துவார் போல் தோன்றியது. பிறகு ப்ரஹ்லாதனை' பிதாமஹ: குலவ்ருத்த: பிரசாந்த: ' என்று குறிப்பிட்டு பக்தி இருந்தாலும் அடக்கம் முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.


    பிறகு வாமனர் தனக்கு வேண்டுவது தன் பாதத்தால் அளந்த மூன்றடி அளவு பூமியே என்று உரைத்தார். அதைக்கண்டு வியந்த மகாபலி தன்னிடம் வந்தவர் பின்னர் வேறு ஒருவரிடம் செல்லக்கூடாது என்று கூறி எவ்வளவு பூமி வேண்டுமோ எடுத்துக்கொள்ள வேண்டினான்.


    அதற்கு வாமனர் எவ்வளவு அவசியமோ அதை மட்டும் ஏற்பவன் பாவத்திற்காளாக மாட்டான் என்றும், அதிகமாக ஆசைப்படுபவன் திருடன் ஆதலால் தண்டனைக்குரியவன், மூவுலகிலும் உள்ள அனைத்தும் கூட இந்திரிய அடக்கம் இல்லாதவனை திருப்தி செய்ய இயலாதது என்றும் கூறினார்.அதனால் மூவடி மண் மட்டுமே தான் விரும்புவதாகக் கூறிய வாமனரிடம் பலி சிரித்து வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்என்று பதிலளித்தான்.


    பிறகு தானம் கொடுக்க ஜலபாத்திரத்தைக் கையில் எடுத்த பலியை தன் யோகபலத்தால் வந்தவர் யாரென அறிந்த சுக்ராச்சாரியார் தடுத்து,


    ஏஷ வைரோசனே சாக்ஷாத் பகவான் விஷ்ணுரவ்யய:
    கச்யபாதிதே: ஜாதோ தேவானாம் கார்யஸாதக: (SB-8.19.30)


    "விரோசன புத்திரரே, இவர் ஸாக்ஷாத் பகவான் விஷ்ணு. கச்யபருக்கும் அதிதிக்கும் புத்திரனாக தேவர்களின் காரியத்தை முடித்துக் கொடுக்க அவதரித்தவர். " என்று கூறி
    மேலும்,
    "அனர்த்தம் விளையப்போகிறது. அசுரர்களுக்கு பெரிய நாசம் விளையப் போகிறது. மாய பிரம்மசாரியான இவர் உனது பதவி, ஆட்சி , செல்வம் வன்மை , கீர்த்தி இவ்வனைத்தையும் அபகரித்து இந்திரனுக்கு அளிக்கப் போகிறார். கொடுத்த வாக்கை மீறுவது என்பது உயிருக்கு ஆபத்து விளையும்போது தவறில்லை" என்று கூறினார்

    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 8- அத்தியாயம் 2௦


    மகாபலி கூறினான்.
    பிரஹ்லாதன் வம்சத்தில் தோன்றிய நான் கொடுப்பதாக வாக்களித்ததை எவ்வாறு இல்லை என்று சொல்லுவேன்? நல்ல காலமும் பாத்திரமும் கிடைக்கும்போது ஸ்ரத்தையுடன் பொருளை த்யாகம் செய்பவர்களே மேலானவர் ஆவார்.


    வேதங்களும் முனிவர்களும் பூஜிக்கும் அந்த விஷ்ணுவே இவராகும்போது இவர் வரமளிப்பாரோ இல்லையோ இவருக்கு இவர் விரும்பும் பூமியை கொடுக்கப்போகிறேன்.


    அதைக் கேட்ட சுக்ராச்சாரியார் சினந்து "கெட்டிக்காரன் என்று நினைக்கும் நீ ஒன்றும் அறியாதவன். என்னை மதியாமல் என் கட்டளையை மீறி நடக்கும் நீ விரைவில் செல்வததை இழப்பாய்." என்று கூறினார்.


    இவ்வாறு குருவால் சபிக்கப்பட்டும் உண்மையிலிருந்து வழுவாத பெருமை உடைய பலி வாமனரை அர்ச்சித்து நீர் வார்த்து அவர் கேட்ட பூமியை கொடுக்கலானான்.


    அவன் மனைவி விந்த்யாவளியினால் கொண்டுவரப்பட்ட பொற்பாத்திரத்தில் உள்ள நீரால் வாமனரின் பாதத்தை அலம்பி அந்த நீரைத் தன் தலையில் சேர்த்துக் கொண்டான்.அவனுடைய செய்கையைக் கண்டு தேவர்கள் பூமாரி பெய்தனர்.


    அப்போது அந்தவாமன உருவம் வளர ஆரம்பித்தது. மகத்தான பெருமை வாய்ந்த அந்த சரீரத்தில் பஞ்சபூதங்கள் இந்திரியங்கள், இந்திரிய விஷயங்கள், அந்தக்கரணம் , ஜீவன் இவற்றுடன் கூடிய இந்தப் பிரபஞ்சத்தை பலிச்சக்கரவர்த்தி கண்டான். அர்ஜுனன் ஞானக்கண் கொண்டு பார்த்த அதே விச்வரூபத்தை பலி ஊனக்கண்ணால் கண்டான்.


    பகவான் ஒரு அடியால் பூமியையும் ஆகாயத்தை உடலாலும் திசைகளைக் கைகளாலும் வியாபித்து நின்றார். இரண்டாவது அடி எடுக்கும்போது சுவர்க்கலோகம் முழுவதும் வியாபித்து நிற்க மூன்றாவதற்கு கொடுக்க பலியினுடையதாக எதுவும் இல்லை.


    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 8-அத்தியாயம் 21


    பகவானுடைய பாதம் பிரம்மலோகத்தை அடைந்தபோது அவருடைய நகங்களின் ஒளியானது பிரம்மலோகத்தின் ஒளியை மங்கச்செய்தது.


    பிரம்மா அவருடைய பாதங்களை பூஜிக்கத் தன் கமண்டலுவில் இருந்து வார்த்த நீர் பெருகி அதுவே ஆகாச கங்கை ஆயிற்று.அதுவே பகவானின் நிர்மலமான கீர்த்தியைப்போல் மூவுலகையும் பாவனம் ஆக்குகின்றது.


    ஜாம்பவான் பேரிகை முழக்கத்துடன் பகவானின் வெற்றியைக் கொண்டாடி மூவுலகும் பாவனை வந்தாராம்.
    வாமன பிரும்மசாரி இவ்வாறு பலியை வஞ்சித்தார் என்ற கோபத்தில் அசுரர்கள் கோபமடைந்து மறுபடி வாமனராகி நின்ற பகவானை எதிர்த்தனர்.


    அப்போது மஹாபலிஅவர்களிடம் எந்த காலரூபியான பகவான் முன்னம் அசுரர்களின் வெற்றிக்கும் தேவர்களின் அழிவிற்கும் காரணம் ஆக இருந்தாரோ அவரே இப்போது அதற்கு மாறாக இருக்கிறார். ஆகவே அநுகூலமான காலத்தை எதிரபார்த்து காத்திருக்க வேண்டும் என்று கூறினான்.


    பிறகு அவர்கள் விஷ்ணுபாரிஷதர்களால் அடிக்கப்பட்டு தங்கள் யஜமானர் சொல்படி அவர்களை எதிர்க்காமல். பூலோகம் முழுவதும் வாமனருக்குக் கொடுக்கப்பட்டபடியால் பாதாள லோகம் புகுந்தார்கள்.


    அதன்பின் கருடன் மகாபலியை வருண பாசத்தால் கட்டினார்.
    உயர்ந்த கீர்த்தி உள்ளவனும் பொருளை இழந்தாலும் புத்தியை இழக்காதவனுமஅருணா பாசத்தால் கட்டப்பட்டவனும் ஆன அவனிடம் வாமனர் தனக்குத்தரவேண்டிய மூன்றாம் அடி எங்கே என்று வினவினார்.
Working...
X