விக்ரமாதித்தன் கதை J.K SIVAN
நவரத்ன வியாபாரி
போஜராஜனுக்கு தலை கால் புரியவில்லை. அடடா எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் எனக்கு. இணையற்ற விக்கிரமாதித்தனின் ஸிம்ஹாசனம் எனக்கு கிடைத்திருக்கிறதே. அதை வணங்கி அழகாக நிலை நிறுத்தி அதன் மேல் ஏறி அமரலாம் என்று முயற்சித்தால், முதல் படியில் காலை வைக்கும்போதே அந்த படியில் உள்ள பொம்மை பேசுகிறது. கேள்வி எல்லாம் கேட்கிறது. கதைகள் சொல்லுகிறது. ஆச்சர்யமாக இருக்கிறதே . அதை கேட்டுவிட்டு ரெண்டாம் படியில் காலைவைத்தபோது அதில் இருந்த பொம்மை வேறு ஒரு சுவாரஸ்யமான கதை சொல்லிற்று. இன்று மூன்றாம் படியில் காலை வைப்போம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்'' என்று ஆவலாக நெருங்கினான்.
மூன்றாம் படியில் போஜன் காலை வைத்த அடுத்த கணமே அங்கிருந்த பொம்மை பேசியது.
''நீ யார்?'' என்றான் போஜன்
''நான் கோமளவல்லி. என்ன ரொம்ப அவசரம் உனக்கு? நீ என்ன எங்கள் ராஜா விக்ரமாதித்தனா?. அவன் தகுதி, குணாதிசயங்கள் உனக்கு உண்டா இதில் ஏறி அமர?
'' அம்மா கோமளவல்லி. நான் தான் முதல் ரெண்டு படி பொம்மைகளிடமும் ஏற்கனவே ஒப்புக்கொண்டேனே . நான் எந்த விதத்திலும் விக்ரமாதித்தன் ஆக முடியாது. நீ அவன் பெருமையை தெரிந்தவரை சொல்லேன் கேட்கிறேன். கேட்கவே ஆவலாக இருக்கிறது'' என்றான் போஜன். கோமளவல்லி பேசியது:
''இப்போது நினைத்தாலும் எவ்வளவு பெருமையாக இருக்கிறது. எங்கள் ராஜா விக்ரமன் இதே உஜ்ஜயினிக்கு ராஜாவாக இருந்த போது நாடு எவ்வளவு பெருமை அடைந்திருந்தது தெரியுமா?''
ஒரு சமயம் ஒரு பிராமணன் தனது 7 வயது மகனோடு சமுத்திர ஸ்னானம் பண்ண சென்றான். எங்கிருந்தோ ஒரு பெரிய திமிங்கிலம் திடீரென்று தோன்றி அந்த பையனை விழுங்கிவிட்டது. பிராமணன் கதறினான் ஓடினான் ராஜாவிடம். விக்ரமாதித்தன் அரண்மனையில் கத்தினான் '' மஹாராஜா, உங்கள் ஆட்சியில் ஏதோ தவறு இருக்கிறது. இல்லாவிட்டால் ஒரு திமிங்கலத்துக்கு இத்தனை அசட்டு தைரியம் வருமா. என் பையனை விழுங்கி விட்டதே? அவனை காப்பாற்றி மீட்டுக் கொடுக்கவேண்டியது உங்கள் கடமை.'' என்றான் பிராமணன்.
''கொஞ்சம் அமைதியாக இரு. என்னால் முடிந்ததை செய்கிறேன்'' என்ற விக்ரமாதித்தன். அப்போது அவன் காடாறு மாசம் செல்லவேண்டிய தருணம். ஆகவே ராஜ்யத்தை மந்திரியும் தம்பியுமான பட்டியிடம் விட்டு விட்டு சென்றான். ''அம்மா காளி , நீ தான் எனக்கு அந்த பிராமணன் பிள்ளையை காப்பாற்றி கொடுக்கவேண்டும் '' என்று தனது இஷ்ட தேவதையை வேண்டினான். அவள் கோவில் கண்ணை மூடி தியானித்தவன் எதிரே அம்பாள் தோன்றி ''இந்தா இந்த விபூதி, மந்திர எலுமிச்சை, தீர்த்தம்'' என்று பிரசாதம் தந்து வாழ்த்தினாள். விக்ரமன் எப்போதும் காட்டுக்கு செல்லும்போது ஒரு நவரத்ன கம்பளம், ஜல பாத்திரம் , பிரம்பு, மந்திர செருப்புடன் தான் செல்வான். சமுத்திரத்தை அடைந்து சுற்றுமுற்றும் பார்த்தான். தோளிலிருந்து கம்பளத்தை விரித்து கடல் மேல் போட்டான். மிதந்தது. அந்த திமிங்கலத்தை தேடி அதன் மேல் அமர்ந்து பிரயாணம் செய்தான். நேரம் ஆக ஆக கடலில் வெகுதூரம் சென்றபோது அவன் தேடிய பெரிய திமிங்கிலம் தென்பட்டது. ''வந்தாயா, வகையாக மாட்டிக்கொண்டாய்'' என்று அந்த திமிங்கிலத்தை தாக்கினான். அது பலே திமிங்கிலம், அவனையும் ஒரு வாயில் விழுங்கிவிட்டது. அதன் வயிற்றில் ஒரு பெரிய பட்டணமே இருந்தது. அந்த பட்டணத்தின் தெருக்களில் பிராமணனின் பையன் மற்ற சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தான். விக்ரமாதித்தன் அந்த பையனின் கையைக் கெட்டியாக பிடித்துக்கொண்டு மெதுவாக வெளியே வர அந்த திமிங்கிலத்தின் வயிற்றை தனது வாளால் கிழித்தான். பையனோடு வெளியே வந்ததும் வாளால் கிழித்த இடத்தை காளி கொடுத்த மந்திர விபூதியால் தடவியதும், திமிங்கிலத்தின் கிழிந்த வயிறு மீண்டும் பழையபடி சேர்ந்து விட்டது. மந்திரக் கம்பளத்தின் மீது பையனோடு ஏறி உட்கார்ந்துகொண்டான். அது மிதந்து புஷ்கரம் எனும் தீவை அடைந்தது. வேதாளத்திடம் மந்திர கம்பளம், பிரம்பு வாள் தீர்த்தம் விபூதி எல்லாம் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளச்சொல்லிவிட்டு பையனோடு அந்த ஊருக்குள் நுழைந்தான் விக்ரமாதித்தன்.
அந்த ஊர் ராஜா சம்புநாதனுக்கு வெகுகாலம் குழந்தை இல்லாமல் ஒரு பெண் பிறந்தது. அவளுக்கு ஏலால ரம்பை என்று பெயர் வைத்து அவள் வளர்ந்து கல்யாணம் பண்ண அவள் விருப்பப்படி ஒரு ஸ்வயம் வரம் ஏற்பாடு செய்தான். 56 தேச ராஜாக்களும் வந்தார்கள். விக்ரமாதித்தன் அந்த பட்டணத்துக்குள் நுழைந்த அன்று தான் இளவரசிக்கு ஸ்வயம்வரம். அவன் அரண்மனைக்குள் நுழைந்தான். ஒரு பிராமண குடும்பத்தாரிடம் அந்த பிராமணப்பையனை ஒப்படைத்து விட்டு ஒரு இரத்தின வியாபாரி போல வேஷமிட்டு அரண்மனை பக்கத்தில் ஒரு நவரத்ன கல் கடை விரித்தான். ஏராளமானோர் அவனது அற்புத நவரத்ன கற்களை வாங்கினார்கள். செய்தி மண்டபத்தில் இருந்த 56 தேச ராஜாக்கள் காதிலும் விழ கடையை சூழ்ந்து கொண்டார்கள். அவனது சுவாரஸ்யமான பேச்சு அவர்களை கவர்ந்தது. இளவரசி ஸ்வயம்வர மண்டபத்துக்குள் மாலை ஏந்தி வந்தாள் . எங்கே ராஜாக்கள் ஒருவரையும் காணோம் என்று கேட்டபோது அவர்கள் வெளியே நவரத்ன வியாபாரி ஒருவனை சூழ்ந்து கொண்டிருந்தது தெரிந்தது. ராஜா அவர்களை ஸ்வயம்வர மண்டபத்திற்குள் அழைத்தான். நீயும் வா என்று விக்ரமாதித்தனையும் உள்ளே அழைத்தார்கள். இளவரசி எல்லோரையும் விட்டு விக்ராமத்தித்தனை தேர்ந்தெடுத்தாள். எல்லா ராஜாக்களுக்கும் ஏமாற்றம். அவளை ஏசினார்கள். கோபித்தார்கள். ராஜா சம்புநாதனும் ''என்னம்மா நீ இப்படி பண்ணிட்டே, ராஜாக்களை எல்லாம் விட்டுட்டு ஒரு பரதேசி வியாபாரியை மணந்தாயே?'' என்று மகள் செயலுக்கு வருந்தினார்.
'' அப்பா,இவர் ஒரு சாதாரண வியாபாரி எல்லை என்று எனக்கு தோன்றுகிறது. இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கிறது சூரியஉதயத்திற்கு. இவரை நமது அரண்மனைக்குள் வரவழையுங்கள். நான் ஒரு திரையின் பின் சத்தம் போடாமல் அமர்கிறேன். இவர் என்ன செயகிறார் என்று பார்ப்போம்'' என்றாள் இளவரசி. விக்கிரமாதித்தனை இளவரசி அந்தப்புரம் அழைத்து சென்று ஒரு பீடத்தில் அமர்ந்தான். நடுவே ஒரு திரை. ஒரே அமைதி.
விக்ரமன் ரகசியமாக வேதாளத்தை அந்த திரைக்குள் இருக்க சொன்னான். யாருக்கும் தெரியாதே அது இருப்பது? அதோடு பேசினான் விக்ரமன்.
''ஏ திரையே, நீ எனக்கும் என்னை மணந்த இளவரசிக்கும் நடுவே இருக்கிறாய். அவள் என்னோடு பேசினால் ரொம்ப அருமையாக எனக்கு பொழுது போகும். ஆனால் அவளோ பேசாமடந்தையாக இருக்கிறாள். திரையே, நீயாவது ஏதாவது பேசேன். உனக்கு தெரிந்த கதை ஏதாவது ஒன்றை சொல்லேன்?'' என்றான் விக்ரமன்.
திரை பேசியது. அதாவது வேதாளம் திரை மூலமாக பேசியது. ''ஐயா, என்னை எல்லாப்பக்கமும் கட்டிப்போட்டு திணறுகிறேன். இந்த நிலையில் நான் எப்படி பேசுவது ?''
இளவரசி திரை பேசுவதை கேட்கு ஆச்சர்யமடைந்து, வேலையாட்களை கூப்பிட்டு திரையை அவிழ்த்து ஒரு ஓரமாக வைக்க சொன்னாள். ''ஐயா உங்களால் என் துன்பம் விலகியது. இப்போது ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்'' என்றது
வேதாளம் என்ன கதை சொல்லியது? காத்திருப்போம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends