ஸரஸ்வதி பூஜையானது சரத்காலத்தில் வருகிறது. ‘சரத்’ காலத்தில் நிகழ்வதால்தான் இந்த நவராத்திரிக்கே ‘சாரத’ நவராத்திரி என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. சாரதா என்ற பெயர் ஸரஸ்வதி தேவிக்கும் ஏற்பட்டிருக்கிறது. (சாரதா என்ற பேருக்கு மந்திர சாஸ்திரத்தில் தத்வார்த்தமாக வேறு பொருள்களும் சொல்லியிருக்கிறது.)
‘மூக பஞ்சதீ’யின் ஆர்யா சதக சுலோகமொன்று காமாக்ஷியை சரஸ்வதியாகவே பாவிக்கிறது. ‘விமலபடீ’ என்று அது ஆரம்பமாகிறது. அதாவது, மாசு மறுவே இல்லாத தூய வெள்ளைக்கலை உடுத்தியிருக்கிறாள் என்கிறார். காச்மீரம் முழுதுமே இப்படித்தான் வெண்பனி மலைகளால் மூடப்பட்டு ஸரஸ்வதி மயமாக இருக்கிறது. சரத் காலத்தின் விசேஷமும் இது தான். ‘சரத் சந்திரன்’ என்று கவிகள் விசேஷித்துச் சொல்கிற நிலவு இந்தக் காலத்தில்தான், மிகவும் தாவள்யமாக லோகம் முழுவதற்கும் தூய சந்திரிகையை ஆடை மாதிரிப் போர்த்துகிறது. இந்த சரத் காலத்தில்தான் ஆகாசத்துக்கு வெள்ளாடை போர்த்தினது போல் எங்கே பார்த்தாலும் வெண்முகில்கள் சஞ்சரிக்கின்றன. ஸரஸ்வதி அநுக்ரஹிக்கிர உண்மையான ‘வித்யை’ சரத்கால சந்திரனைப் போலவும், சரத்கால மேகத்தைப் போலவும், தாப சாந்தியாக, தூய்மையாக இருக்கும். வெறும் படிப்பு பலவிதமான தாபங்களையே உண்டாக்குகிறது. மெய்யறிவே தாபசாந்தியைத் தரும்.
ஸரஸ்வதிக்கும் தக்ஷிணாமூர்த்தியைப் போலவே நெற்றிக் கண் உண்டு. ஆசை பஸ்மமானாலொழிய ஞானமில்லை. அதற்காகத்தான் காமனை எரித்த நெற்றிக்கண் இவளிடமும் இருக்கிறது. இவ்விரண்டு தெய்வங்களுக்கும் ஜடா மகுடம் இருக்கிறது. அதுவும் ஞானிகளின் அடையாளம்.
இருவருமே வெள்ளை வெளேரென்று இருக்கிறார்கள். ஏழு வர்ணங்களில் சேராத வெள்ளை, பரம நிர்மலமான சுத்த ஸத்வ நிலையைக் குறிப்பது. இந்த வெள்ளையும்கூட இன்னும் நிர்மலமாக, தன் வழியாக ஒளி ஊடுருவிச் செல்கிற அளவுக்கு (transparent) தெளிந்துவிடுகிறபோது ஸ்படிகமாகிறது. தக்ஷிணா மூர்த்தி, ஸரஸ்வதி இருவருமே இப்படிப்பட்ட ஸ்படிகத்தினாலான அக்ஷமாலையைத்தான் வைத்திருக்கிறார்கள். வெள்ளை நிறம், சந்திர கலை, ஸ்படிகமாலை ஆகிய இவற்றை நினைத்தாலே நமக்கு ஒரு தூய்மை, தாப சாந்தி, அமைதி எல்லாம் உண்டாகின்றன.
Bookmarks