Announcement

Collapse
No announcement yet.

Sri Vishvaksenar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sri Vishvaksenar

    விக்னங்களை விலக்கியருளும் விஷ்வக்ஸேநர்.

    பொய்கையடியான்.

    யஸ்ய த்ரவித வக்த்ராத்யா : பாரிஷத்யா: பரஸ்ததம் l

    விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாச்ரயே ll

    கஜானன், ஜயத்ஸேநன், போன்ற ஆயிரக்கணக்கான பரிஜனங்கள் எவருடைய ஆணைக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ, அப்படிப்பட்ட ஸ்ரீவிஷ்வக்ஸேநரை சகலவிதமான விக்னங்களும் ( தடைகளும் ) விலகு-வதன் பொருட்டு வணங்குகின்றேன் என்று பொருள்படும், இந்த ஸ்லோகம் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமத்தில் உள்ளது..

    விஷ்ணுஸஹஸ்ரநாமத்தின் தொடக்க ஸ்லோகமான “ சுக்லாம்பரதரம் “ என்ற ஸ்லோகம் ஸ்ரீஹயக்ரீவரைப் பற்றியது என்று கூறும் ஸ்ரீவைஷ்ண-வர்கள், அதற்கு அடுத்த ஸ்லோகமான மஹாவிஷ்ணுவின் சேனைத்-தலைவரான விஷ்வக்ஸேநரைப்பற்றிக்கூறும் மேற்படி ஸ்லோகத்தைக் கூறிவிட்டே ஸஹஸ்ரநாமத்தைத் தொடங்குவர்.


    சேனைத்தலைவர், படைத்தலைவர் என்பதினால் இவருக்கு, சேனைமுதலி என்ற பெயரும் உண்டு. மரியாதை நிமித்தம் காரணமாக சேனை முதலி-யார் என்றும் அழைப்பர்.

    ஒரு செயலைத் தொடங்குமுன்னர், சைவர்கள் எப்படி விநாயகக்கடவுளை வணங்கிவிட்டு ஆரம்பிப்பார்களோ அது போன்றே ஸ்ரீவைஷ்ணவர்கள், இந்த விஷ்வக்ஸேநரை வணங்கிவிட்டே எந்த செயலையும் தொடங்குவர். இவரைப்பற்றி ஸ்ரீஆளவந்தார் தம்முடைய “ ஸ்தோத்ர ரத்னம் “ என்ற ஸ்தோத்ரத்தில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

    த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிதா

    த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யா l

    ப்ரியேண ஸேநாபதி நா ந்யவேதிதத்

    ததா நுஜானம் தமுதார வீக்ஷணை : ll

    இதன் பொருள் யாதனில், “ நீர் ( எம்பெரு-மான் ) கண்டருளிய ப்ரசாதத்தின் மிகுதியைப் புசிப்பவரும், நித்ய, லீலா விபூதிகளைக் காப்பவரும், தமக்கு விதிக்கப்பட்ட பொறுப்புகளை விருப்-பத்துடன் செய்து முடிக்க வல்லவரும், எம்பெருமானின் நண்பருமான சேநைமுதலியார், நாம் நம் இஷ்டப்படி விண்ணப்பிக்கும் அனைத்துக்-காரியங்களையும், உதாரணகுணமும், நன்மையும், கருணையும் நிறைந்த பார்வையால் மெச்சி, அதற்கு அனுமதியை வழங்கும் அறிஞனே !“ என்பதாகும். ஆக இந்த விஷ்வக்ஸேநரே எம்பெருமானின் ப்ரதான மந்திரி போன்று செயல்படுகிறார் என்பது தெளிவாகின்றது.

    இவரின் வேலைகளை விளக்கவந்த ஸ்ரீவேதாந்த தேசிகர், தம் தயாஸத-கத்தில் கீழ்கண்ட ஸ்லோகத்தில் விளக்குகின்றார்.

    “ அசேஷ விக்நசமநம் அநீகேஸ்வரமாச்ரயே l

    ஸ்ரீமத் கருணாம் போதௌ சிக்ஷாஸ்ரோத இவோத்திதம் ll “

    இந்த ஸ்லோகத்தின் பொருளென்ன ? மேலே படியுங்கள்

    இதன் பொருள், “ இவரது சேனைகள் பகவானையே நம்பி அவரிடத்தில் பக்தி செலுத்துபவர்களுக்கு, ஏற்படும் விக்னங்களை எல்லாம் போக்குவதற்கே ஏற்பட்டவர்கள். எல்லா வைதீகக் காரி-யங்களையும் தொடங்குமுன்னர், வைஷ்ணவர்கள் விஷ்வக்ஸேநரை வணங்கிவிட்டேத் தொடங்குவர்.

    .ஸ்ரீநிவாஸனுடைய தயையென்ற தடாகத்திலிருந்து அநேக கிளைகள் வெளியில் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அதில் தயை என்ற கிளையும் பக்தர்களின் சங்கடங்களைப் போத்குவதற்-காக ஓடுகின்றது. இருப்பினும் இப்படி அநேகக் கிளைகளில், ஞானோப-தேஸம் என்பதான சிக்ஷையை ( செயலை )சேனைமுதலி என்ற கிளையே செய்கின்றது. “. இங்கு, சிக்ஷை என்ற சொல் உபதேஸத்தை சொல்வது மட்டுமின்றி, பக்தன் செய்யும் தவறுதல்களை உரிமையுடன் தண்டிப்-பதையும் செய்வது என்று பொருள். ( ஒரு குழந்தை தவறு செய்தால் அதன் தாய் உரிமை யுடன் கண்டிப்பதைப்போல ). இல்லையென்றால் தவறு செய்வதே அவர்கள் சுபாவமாகிவிடும் என்ற அவர்கள்மீதுள்ள அளவுகடந்த கருணையே காரணம் என்று கூறுகிறார் ஸ்வாமி தேசிகன்.

    இந்த விஷ்வக்ஸைநர் மஹாவிஷ்ணுவின் சைனைத் தலைவராக இருந்து அசுர- சம்ஹாரத்திற்கு உதவுவது மட்டுமின்றி, முன்பே கூறியதுபோல், ப்ரதான மந்திரி போன்று தன் கைப்பிரம்பான “ வேத்ரவதி “ உதவியால் இந்த உலக நிர்வாகத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றார்.

    இதையே ஸ்வாமிதேசிகன் தம்முடைய “ “யதிராஜ ஸப்ததியில் “

    வந்தே வைகுண்ட ஸேநாஞ்யாம் தேவம் ஸூத்ரவதிஸகம் l

    யத்வேத்ர ஸிகரஸ்பந்தே விஸ்வமேத த்வய வஸ்தீதம் ll

    என்று கூறுகிறார்



    மேலேக் கூறப்பட்ட ஸ்லோகத்தின் பொருள் யாதெனில், “ மஹா-விஷ்ணுவின் சேனைத்தலைவரும், ஸூத்ரவதீ என்ற பெயரையுடைய மனைவியுடன் இருப்பவரும், எவருடைய வேத்ரவதி என்ற கைப்பிரம்பின் அசைவால் இந்த உலகம் நிலைப்பெற்று நிற்கின்றதோ, அப்படிப்பட்ட விஷ்வக்ஸேநரை நான் வணங்குகின்றேன் “ என்பதாகும். அநேகமாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இந்த விஷ்வக்ஸேநரை, ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் சந்நிகளில்தான் காணமுடியும். அடியேன் அறிந்த வகையில், மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி திருக்கோயிலில் இவர் ஸூத்ரவதியுடன் எழுந்தருளியிருப்பதாகவும், சென்னையை அடுத்த பொன்விளைந்த களத்தூர் என்ற கிராமத்தில் ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் மஹாவிஷ்ணுவைப் போன்று அருள்பாலிக் கின்றார்.

    ஆனால் சிலர் விஷ்ணு ஆலயங்களில், பிராஹாரத்தில் தும்பிக்கையுடன் காணப்படுபவரையே விஷ்வக்ஸேநர் என்று நம்பிக்கொண்டு இருக்-கின்றனர். மற்றும் சிலர், அவரை பார்வதி புத்திரன் விநாயகர் என்று கருதி அவருக்கு தோப்புகரணம் போடுவர். அவையெல்லாமே தவறு.

    அப்படியென்றால் துதிக்கையுடன் காணப்படும் அவர்தான் யார் ?. அவர்தான் “ கஜாநநன் “ என்று அழைக்கப்படும், விஷ்வக்ஸேநருக்குக் கீழ் பணிபுரியும் அநேகப் படைத் தலைவர்களுள் ஒருவர். ஜயத்ஸேநன், ஹரி-வக்த்ரர், காலப்ரக்ருதி போன்ற படைத் தலைவர்களுள் முதன்மையானவர். இவருடைய முக்யவேலை திருக்கோயில்களை பராமரிப்பது, கோயிலுக்கு வந்து போவோர்களைக் கண்காணிப்பது, கோயிலைத் தூய்மையாக வைத்-துக் கொள்வது போன்றவையாகும். ஆகவே நாம் இவரையும் வணங்க வேண்டும்.

    இதனையே பராசர பட்டரும், தம்முடைய ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் “ விஷ்வக் ஸேநரின் சேனைத்தலைவர்களான. கரிமுகன் ( கஜாநநன் ), ஜயத்ஸேனன், கலாஹலன், சிம்ஹமுகன் முதலிய எந்த வீரர்கள் ஸ்ரீரங்க க்ஷேத்ரத்தை நான்கு திசைகளிலும் காத்துக் கொண்டு வருகின்றனரோ அவர்கள் நமக்குச் சுகத்தையளிக்கட்டும்” என்கிறார்.

    விஷ்ணு ஆலயங்களில், சென்று எம்பெருமானை தரிசிக்கும் முன்னர், துவாரபாலகர்களை வணங்கிவிட்டு, பிறகு விஷ்வக்ஸேநரை மனதிற்குள் தியானித்துவிட்டு பிறகே பெருமாள் சந்நிக்குள் நுழைய வேண்டும். அதாவது அவர்கள் அனுமதியின்றி உள்ளேச் சென்று வேண்டிக்கொண்டால், அதற்கு எம்பெருமான் பலனளிக்கமாட்டார். அதுபோன்றே ஸ்ரீவைஷ்ண-வர்கள் தங்கள் இல்லங்களில் பெருமாள் ஆராதனத்தைத் தொடங்கு முன்-னர் விஷ்வக்ஸேநரை துளஸியில் ஆவாகனம் செய்து, வடகிழக்கு திசையையில் திரும்பி நின்று கொண்டு “ ஓம் நமோ பகவதே விஷ்வக்-ஸேநாய நம : “ என்று அவர் மூலமந்திரத்தை உச்சரித்துவிட்டு, சூத்ரவதி-ஸமேத விஷ்வக்ஸேநரை மானசீகமாக வணங்கிவிட்டு பின்னரே பெருமாள் ஆராதனத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    இவ்வளவு ஏன் ? பெருமாள்கோயில்களில் ப்ரஹ்மோத்ஸவம் ஆரம்பிக்கும் முதல் தினம், “ சேனைமுதலியார் உற்சவம் “ என்று இவரை ஆராதித்தப் பின்னரே உற்சவத்தையே நடத்துவர். அன்று இரவு விஷ்வக்ஸேநர் விக்ரகத்தை வீதி புறப்பாடாக, பெருமாள் வலமிருக்க இருக்கும் வீதிகளி-லெல்லாம் ஊர்வலமாக எழுந்தருளச்செய்வர். இதன் காரணம் பெருமாள் உலாவர இருக்கும் வீதிகளெல்லாம் நன்றாக இருக்கின்றனவா ? வீதிகள் பழுது ஏதுமின்றி இருக்கிறதா ? உற்சவம் விக்னங்கள் ஏதுமின்றி எந்த தடையுமில்லாமல் நடைபெற இருக்க வாய்ப்பு இருக்கின்றதா ? என்று நேரில் சென்று கண்காணிப்பதாக ஐதீகம்.

    அது சரி ! இவரை ஆச்சார்யர்கள், ஆழ்வார்கள் சந்நிதியில் ஏன் எழுந்த-ருளப் பண்ணுகிறார்கள் என்பதுதானே உங்கள் கேள்வி ? காரணம்,



    ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தப்படி, நமக்கு முதல் ஆச்சார்யன் ( குரு ) ஸ்ரீமந் நாராயணன், அவர் தாயாருக்கு ( ஸ்ரீதேவிக்கு ) வேதங்களை உபதேஸிக்க, அவர் விஷ்வக்ஸேநருக்கு உபதேஸித்தாராம். ஆக விஷ்வக்ஸேநர் ஆச்சார்ய பரம் பரையில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றார்.

    பிறகு அவரே நம்ஆழ்வாராக இவ்வுலகில் அவதரித்து நான்கு வேதங்களையும் சுந்தரத்தமிழில், (திருவாய்மொழியாக ), அளித்து இருக்கிறார். இவர்மூலமாகவே வைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரை வளர்ந்தது.

    இதனையே ஆச்சார்ய தனியனில் “ பெரும்பூதூர் வந்தவள்ளல், பெரியநம்பி, ஆளவந்தார், மணக்கால் நம்பி, உய்யக்கொண்டார்,நாதமுனிகள், சடகோபன், சேநைநாதன், இன்னமுதத் திருமகளென்று , எம்பெருமான் திருவடி அடைகின்றேனே “ என்று கூறுகிறது.



    இந்த விஷ்வக்ஸேநர், நித்ய சூரிகள் கோஷ்டியிலும் இடம் வகித்துக்-கொண்டு எம்பெருமானுக்கு பரமபதத்தில் சேவைபுரிந்து கொண்டு இருக்-கின்றார். நித்யசூரிகள் வரிசையைக்கூறும் போதும்

    அநந்த, கருட, விஷ்வக்ஸேநாதிகள் என்று இங்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் இவரை மூன்றாவது இடத்திலேயே வைத்துக் கொண்டாடுவர்.

    வைணவக்கோயில்களில், த்வாரபாலகர்கள், கருடன் போன்ற நித்யசூரி-களுக்கு பெருமாள் சடாரி சாதிப்பது வழக்கமில்லை. இருப்பினும் நித்ய-சூரிகள் வரிசையில் இடம் வகிக்கும் இவருக்கு ஸ்ரீசடாரி சாதிப்பதுண்டு. காரணம் இவர் ஆச்சார்யர்கள் கோஷ்டியில் இடம் பிடித்திருப்பதே.



    ஈஸ்வர ஸம்ஹிதையில், பெருமாளுக்கு நிவேதனம் செய்த ப்ரசாதத்தை இரண்டு பாகங்களாகச் செய்து, விஷ்வக்ஸேநருக்கு ஆராதனம் முடிந்த- தும் அவருக்கும், அவர் பரிஜனங்களுக்கும் ஒருபாகத்தைக் கண்டருளப் பண்ணுவர். பிரகு அந்த ப்ரசாதத்தை ஒரு ஆழமான கிணற்று நீரில், அல்லது பூமிக்குள் சேர்த்துவிட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

    இவை மேலும், பாத்ம ஸம்ஹிதை, லக்ஷ்மிதந்த்ரம் ஆகியவற்றிலும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் விஷ்வக்ஸேநர் ஆச்சார்ய பரம்பரையை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு நிவேதனம் செய்த ப்ரஸாதத்தை நாம் உண்ணலாம் என்பது பெரியவர்கள் கருத்து.



    பாதுகையின் பெருமைகளைச் சொல்லப்புகுந்த ஸ்வாமி தேசிகன், தம் பாதுகாஸஹஸ்ரத்தில் மற்றுமொரு ஸ்லோகத்தில்,

    யா தே பாஹ்யாங்கணம் அபியத : பாதுகே! ரங்கபர்த்து: l

    ஸஞ்சாரேஷு ஸ்புரதி விததி : ஸக்ரநீலப்ரபாயா : ll

    விஷ்வக்ஸேந ப்ரப்ருதிபிரஸௌ க்ருஹ்யதே வேத்ரஹஸ்தை : l

    ப்ருவிக்ஷேபஸ் தவ திவிஷதாம் நூநம் ஹ்வாநஹேது : ll



    “ பாதுகையே! சஞ்சாரத்திற்காகப் பெருமாள், தன் சயன அறையைவிட்டு வெளியே வரும்போது உன்மீது பதிக்கப்பட்ட இந்திர நீலக் கற்களிலிருந்து வெளிவரும் ஒரு நீலஒளி, கைப்பிரம்புடன் காணப்படும் விஷ்வக்-ஸேநரை,தேவர்களை அழைக்க அணையிடும்படி உன் புருவநெளிப்பால் கூறுவது போன்று தோன்றுகிறது “ என்று கூறுகிறார். ஆக தேவர்கள் அனைவரும் அவர் ஆணைக்குக் கட்டுபட்டவர்கள் என்பது விளங்குகின்றது அல்லவா !

    இந்த சேநைநாதன் அவதரித்தது ஒரு ஐப்பசி மாதம், பூராட நக்ஷத்திர-மாகும். இவர், ஜென்மதினத்தில் இவரை இந்த எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் சேனைத்தலைவரை, நித்ய சூரியை, ஆச்சார்யனை, நீலமேகவண்ணத்துடன், நான்கு கரங்களில் முறையே சக்ரம், சங்கு, கதை, வேத்ரவதியென்ற கைப்பிரம்பினைத் தாங்கிக்கொண்டு, சூத்ரவதி என்ற தம் மனைவியுடன் கூடிய ( இவருக்கு யஞ்ஜோபவீதமும், ஸ்ரீவத்ஸமும் கிடையாது. மற்றபடி மஹாவிஷ்ணு போன்றே தோற்றமளிப்பார் ).

    இந்த விஷ்வக்ஸேநரை தினமும் அவர் மூல மந்திரம், காயத்ரி மந்திரம், த்யான ஸ்லோகம் மற்றும் அவருடைய அஷ்டோத்திரத்தைச்சொல்லிவர நம் இடர்கள் அனைத்தும், பகலவனைக்கண்ட பனிபோல விலகியோடிடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.



    poigaiadia.blogspot
    anudinam.
    other sites

    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X