அத்தியாயம் 18/19
புரூரவஸின் மகனான ஆயுஸ்ஸின் புத்திரன் நஹுஷன். நஹுஷனின் புத்திரன் யயாதி. நஹுஷன் நூறு அஸ்வமேத யாகம் செய்து இந்திரபதவியை அடைந்தான். அங்கு இந்திராணியை ஆசைப்பட்டு மலைப்பாம்பாகும்படி சபிக்கப்பட்டான். பிறகு யயாதி அரசனானான்.
யயாதிக்கு சுக்ராச்சாரியரின் புதல்வியான தேவயானி, அசுர ராஜாவான வ்ருஷ்பர்வாவின் குமாரி சர்மிஷ்டா என்று இரு மனைவிகள். இதைக்கேட்ட பரீக்ஷித் க்ஷ்த்ரியனான யயாதி எவ்வாறு அந்தண குலத்துதித்த தேவயானியை பிரதிலோம விவாகம் செய்தான் என்று கேட்க , சுகர் கூறலானார்.
ஒரு சமயம் சர்மிஷ்டை தேவயானியுடனும் மற்ற தோழிகளுடனும் நாந்த்வனத்திற்குச் சென்றபோது ஒரு குளத்திற்குச்சென்று கரையில் ஆடைகளை களைந்து வைத்து விளையாடினார்கள். அப்போது கரையேறுகையில் சர்மிஷ்ட தேவயானியின் வஸ்திரத்தை தவறாக அணிய தேவயானி அவளை இகழ்ந்து பேச கோபம் கொண்ட சர்மிஷ்டை கடுமையாகப் பேசி அவளை அவமதித்து அவளை ஒரு பாழும் கிணற்றில் தள்ளினாள்.
அப்போது தற்செயலாக அங்கு வந்த யயாதி வஸ்திரமில்லாமல் கிணற்றில் இருந்த அவளைத் தன் மேல்வஸ்திரத்தைக் கொடுத்து அவளைக் கையால் தூக்கிவிட்டான் . அப்போது தேவயானி யயாதியிடம் அவன் தன் கையைப் பிடித்து விட்டதால் வேறோருவர் கைபிடிக்கலாகாது என்று கூறி தன்னை மணக்க வேண்டினாள். அவளுக்கு கசன் சாபத்தால் அந்தணன் கணவனாக மாட்டான் என்றும் கூறினாள்.
( ப்ருஹஸ்பதியின் குமாரனான கசன் சுக்ரசாரியாரிடம் மிருதசஞ்சீவினி என்னும் இறந்தவரைப் பிழைக்கக் வைக்கும் வித்தையைக் கற்றுக்கொள்வதற்காக மாறுவேடத்தில் வந்து குருகுலவாசம் செய்தான் அப்போது அவனை விரும்பிய தேவயானியிடம் அவன் அவள் குருபுத்திரியாகையால் சகோதரி போன்றவள் என்று கூற அவள் அவனிடம் நீ கற்ற வித்தை உனக்கு பயன்படாமல் போகட்டும் என்று சபித்தாள். அவளுக்கு கசன் மறு சாபம் கொடுத்தான்.)
அவள் கூறியதைக் கேட்ட யயாதி அது தகுதியற்றது என்று தெரிந்தும் அவள் மேல் மனம் சென்றதால் அதை ஏற்றுக்கொண்டான். பிறகு தேவயானி தந்தையிடம் சென்று நடந்ததைக் கூற சர்மிஷ்டையால் தன் மகள் அவமதிக்கப்பட்டதாகக் கருதி சுக்ரசார்யர் நாட்டை விட்டு அகன்றார்.
வ்ருஷபர்வா அவரை நாட்டுக்குத் திரும்ப வேண்ட அவர் தேவயானியை சமாதானம் செய்யும்படி கூறினார். அப்போது தேவயானி தான் மணமாகி யயாதியுடன் செல்லும்போது சர்மிஷ்டை தன் பணிப்பெண்ணாக உடன் வரவேண்டும் என்று கூறினாள்.
சர்மிஷ்டையும் தன் பிதாவின் சங்கடமான நிலைமையைப் பார்த்து சம்மதித்தாள். சுக்ராச்சாரியார் யயாதியிடம் சர்மிஷ்டையுடன் அவன் உறவு கொள்ளலாகாது என்று கூறிப் பெண்ணை யயாதிக்குக் கொடுத்தார். பின்னர் தேவயானிக்கு சந்ததி உண்டானதைபார்த்தி சர்மிஷ்டை யயாதியிடம் தநனையும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்ட, மக்களை விரும்பி அவள் பிரார்த்தித்ததால் தர்மத்தை உணர்ந்த யயாதி அவளை ஏற்றுக்கொண்டான்.
தேவயானி யது துர்வஸு என்ற இரு பிள்ளைகளையும், சர்மிஷ்டை த்ருஹ்யன் , அனு, புரு , என்ற மூன்று புதல்வர்களையும் பெற்றனர். சர்மிஷ்டையின் புதல்வர்களுக்கு தன் கணவனே பிதா என்றறிந்த தேவயானி கோபம் கொண்டு தந்தையிடம் சென்றாள். யயாதி அவரால் கிழட்டு தசை அடைய சபிக்கப்பட்டான். பிறகு மனம் வருந்திய அவனால் ப்ரார்த்திக்கப்பட்டு அவர் அவனுடைய மகன்களில் யாராவது விரும்பி அவன் மூப்பை ஏற்று தன் யௌவனத்தைத் தர சம்மதித்தால் சாப விமோசனம் ஏற்படும் என்று கூறினார்.
யயாதியின் புதல்வர்களில் புருவைத்தவிர வேறு யாரும் சம்மதிக்கவில்லை. புரு மகிழ்ச்சியுடன் தன் யௌவனத்தை பிதாவிற்கு அளித்து அவருடைய மூப்பை ஏற்றுக்கொண்டான். இதனால் யயாதி தனக்குப் பிறகு புருவே அரசிற்குரியவன் என்று கூறினான்.
நாளடைவில் எல்லா சுகத்தையும் அனுபவித்த யயாதி அனுபவிப்பதால் ஆசை அடங்குவதில்லை என்று உணர்ந்து புருவிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைத்து வனம் சென்றான்.
பிறகு சுகர் பரீட்சித்தின் வம்சமாகிய புருவம்சத்தைப் பற்றிக் கூறலானார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends