மஹோத்ஸாஹாய நமஹ:

வேதாந்த தேசிகனிடம் ஒரு பண்டிதர், இறைவனுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்று கேட்டார். இறைவனுக்கு எப்போதுமே அழகான உருவம் உண்டு. உலகம் படைக்கப்படுவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, இறைவன் அழகான திருமேனியோடு விளங்குகிறார்! என்றார் தேசிகன். எதை வைத்துச் சொல்கிறீர்கள்? என்று கேட்டார் பண்டிதர். முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே என்று நம்மாழ்வார் பாடியுள்ளார். உலகைப் படைக்கும் போது கார் மேகம் போன்ற வண்ணத்துடன் இறைவன் இருந்தான் என்பது இப்பாடலின் பொருள். உருவம் இருந்தால் தானே வண்ணம் இருக்க முடியும்? உருவமே இல்லாத ஒருவனுக்கு வண்ணம் எப்படி இருக்கும்? எனவே உலகின் படைப்புக்கு முன்பிருந்தே, அநாதி காலமாக, கார்முகில் போன்ற நிறம் கொண்ட அழகிய உருவத்தோடு தான் இறைவன் விளங்குகிறார்! என்றார் தேசிகன்.

இறைவனுடைய கார்முகில் வண்ணத்தின் பின்னணி என்ன? என்று கேட்டார் பண்டிதர். அதற்கு தேசிகன், மையார் கருங்கண்ணியான மகாலட்சுமியின் திருக்கண்களின் பார்வை எப்போதும் திருமாலின் திருமேனியில் பட்டபடியால், அக்கண்களின் கறுப்பு நிறம் அவரது திருமேனியில் படிந்து விட்டது. அதுமட்டுமின்றி, அவரது நாபியிலுள்ள தாமரை மலரை மொய்க்கும் வண்டுகளின் கருமை நிறம் திருமால் திருமேனியில் பட்டு, அது மேலும் கருமையானது. அது மட்டுமா? தோளிணை மேலும், நன் மார்பின் மேலும், சுடர்முடி மேலும், தாளிணை மேலும் திருமால் அணிந்திருக்கும் துளசி மாலையின் பசுமை திருமாலின் கறுப்பு நிறத்தை மேலும் வளர்த்து விட்டது. கறுப்பு நிறம் கொண்ட யமுனை நதியின் கரையில் கிருஷ்ணாவதாரத்தில் எப்போதும் விளையாடிக் கொண்டிருந்தபடியால், யமுனையின் கருமை திருமால் திருமேனியில் படிந்து, அது மேலும் கறுப்பாகி விட்டது.

இவைகள் ஒருபுறமிருக்க, உலகைப் படைக்க முற்பட்ட போது, திருமால் ஆனந்தத்தால் கருமை நிறத்தை அடைந்தார்! என்றார் தேசிகன். அது என்ன? ஆனந்தத்தால் கருமை நிறம் பெற்றாரா? என்று கேட்டார் பண்டிதர்.ஆம் உலகம் படைக்கப்படுவதற்கு முன், உயிர்களாகிய நாம் அனைவரும் அறிவற்றவர்களாக, ஜடப் பொருட்களுக்குச் சமமானவர்களாகச் சிந்தையும் கரணங்களும் சிதைந்து கிடந்தோம். நாம் அந்நிலையிலேயே இருந்திருந்தால், இறைவனை அடைவதற்காகக் கர்ம யோகமோ, ஞான யோகமோ, பக்தி யோகமோ, சரணாகதியோ எதையுமே நம்மால் செய்ய இயலாதல்லவா? அதனால், நம்மேல் கருணை கொண்ட இறைவன், உலகைப் படைத்து நமக்கு உடலையும், அறிவையும், சாஸ்திரங்களையும், ஆசார்யர்களையும் வழங்கினார். அனைத்தையும் நமக்குத் தந்து விட்டு, இனி இந்த ஜீவாத்மாக்கள் இந்த உடல், அறிவு உள்ளிட்டவற்றை நல்ல வழியில் பயன்படுத்தி, கர்ம, ஞான, பக்தி யோகங்களையோ அல்லது சரணாகதியையோ செய்து நம்மை வந்து அடையப் போகிறார்கள் என்று எண்ணி மகிழ்ந்தார் இறைவன்.

மிகவும் மகிழ்ச்சி அடைந்தால் உடல் கறுத்துப் போய்விடும் என்று சொல்வார்கள். ஏற்கெனவே கருங்கண்ணியான லட்சுமியின் பார்வையாலும், உந்தித் தாமரையை மொய்க்கும் வண்டுகளாலும், துளசி மாலையின் பசுமையாலும், யமுனையின் பிரதிபலிப்பாலும் கருமையாக இருந்த திருமாலின் திருமேனி உலகைப் படைத்த உற்சாகத்தாலும் மகிழ்ச்சியாலும் மேலும் கருமையானது. இவற்றைக் கருத்தில் கொண்டு தான் ஆழ்வார், முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே! என்று பாடினார்.

ஆண்டாளும், ஊழி முதல்வன் உருவம் போல் மெய்க்கறுத்து என்று பாடினாள். இவ்வாறு நாம் நற்கதி அடையவேண்டும் என்ற உற்சாகத்துடன் உலகைப் படைத்து, அந்த உற்சாகத்தால் மேலும் கருமையடைந்த திருமாலின் கறுப்புநிறம் நம்மைக் காக்கட்டும்! என்று கூறினார் தேசிகன்.

இக்கருத்தை ஒரு ஸ்லோக வடிவில், தேசிகன் தத்வ முக்தா கலாபம் என்னும் நூலில் கூறுகிறார்:

லக்ஷ்மீ நேத்ரோத்பல ஸ்ரீஸதத பரிசயாத் ஏஷ ஸம்வர்தமான:
நாபீ நாலீக ரிங்கன் மதுகர படலீ தத்த ஹஸ்தாவலம்ப: |
அஸ்மாகம் ஸம்பதோகாத் அவிரல துளஸீ தாம ஸஞ்ஜாத பூமா
காளிந்தீ காந்தி ஹாரீ கலயது வபுஷ: காலி மா கைடபாரே: ||

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇவ்வாறு நாம் அனைவரும் நற்கதி அடையவேண்டும் என்ற எண்ணத்தில் பெரும் உற்சாகத்தோடு உலகைப் படைத்தபடியால், திருமால் மஹோத்ஸாஹ: (மஹா + உத்ஸாஹ: = மஹோத்ஸாஹ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 173-வது திருநாமம். உத்ஸாஹ: என்னும் வடமொழிச் சொல்லின் தமிழாக்கமே உற்சாகம்.

மஹோத்ஸாஹாய நமஹ: என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அவர்கள் கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்குரிய உற்சாகத்தைத் திருமால் அருள்வார்.

dinakaran.


This post is for sharing knowledge only, no intention to violate any copy rights