23/12/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமத்தின் மந்திர சாஸ்திரங்களில் அர்த்தங்களை விரிவாக மேலும் பார்க்க இருக்கிறோம்.*


*ஆவஹந்தி ஹோமம் செய்ய வேண்டிய முறை என்று பார்த்தால், முதலில் சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். கலசத்தில் பிரணவாத்வமாக உள்ள இந்திரனை பூஜை செய்து கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமானதொரு மந்திரம் இது.*


*ஏன் இந்திரனை நாம் பூஜை செய்கிறோம் என்றால் அத்தனை தேவதைகளுக்கும் அவன் தான் இராஜாவாக இருக்கிறான். தேவராஜா என்று அவருக்குப் பெயர். இந்திரஹா என்றால் அது ஒரு ஸ்னானத்தையும் குறிக்கிறது, ஒரு நபரையும் குறிக்கிறது. ஒருவரை மாத்திரம் உத்தேசித்து என்று இல்லை.*


*இந்திர பதவி என்று சொல்கிறோம். அத்தனை தேவதைகளுக்கும் அதிபதியாக உள்ள ஒரு பதவி. அதனால் அவரை அங்கு நாம் ஆவாகனம் செய்கிறோம். ஷோடச உபசார பூஜைகள் எல்லாம் செய்து முடித்த பிறகு, இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் ஒரு தடவையாவது ஜெபிக்க வேண்டும். அதிகபட்சம் நமக்கு எந்த அளவுக்கு பலன் சீக்கிரமாக வர வேண்டும் என்று நினைக்கிறோமோ அவ்வளவுக்கு ஆவர்த்திகள் செய்யலாம். அப்படி செய்து ஜெபம் செய்யலாம்.*


*ஜபம் செய்யும் போது நாம் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தினுடைய அர்த்தம் மிகவும் அற்புதமானது. இரண்டு விதமான அர்த்தங்களை இந்த மந்திரத்திற்கு பார்க்கலாம். சாயணாசாரியாரும் இந்த மந்திரத்திற்கு அர்த்தம் சொல்லி இருக்கிறார், ஆதிசங்கரரும் உபநிஷத் பாஷ்யத்தில் இந்த மந்திரத்திற்கு அர்த்தம் சொல்லி இருக்கிறார்.**நிர்குணமான மற்றும் சகுணமான அர்த்தமும் உண்டு. இந்த மந்திரம் முதலில் நமக்கு ஸ்ரவணம் செய்து ஞானத்தை நாம் அடைவதற்கு, உபநிஷத் சிரவணம் செய்வதற்கு முன்பு நமக்கு சில அதிகாரங்கள் வேண்டும். அவை என்ன வென்றால் சாதண சதுஷ்டைய சம்பத்தி வேண்டும். இது யாருக்கு இருக்கிறதோ அவர்தான் உபநிஷத் சிரவணம் செய்ய முடியும் அவரால் மனதில் அதை கிரகித்துக் கொள்ள முடியும்.*


*பழைய நாட்களில் எல்லாம் நாம் போய் ஒருவரிடம் உபநிஷத் பாஷ்யம் எனக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டால், சாதண சதுஷ்டைய சம்பத்தியோடு வா என்று சொல்வார்கள். அப்படி என்றால் என்ன, எவையெல்லாம் நித்தியமான வஸ்துக்கள் எவையெல்லாம் அநித்தியமான வஸ்துக்கள் என்கின்ற விபாகம் நமக்கு மனசுக்கு தெரிய வேண்டும்.*


*வாயினால் சொன்னால் போதாது மனசுக்கு நன்றாக புரிய வேண்டும். அதாவது வேதாந்த சிரவணம் செய்வதற்கு முன்பு நமக்கு இந்திரிய நிக்கிரகம் வேண்டும். எதையெல்லாம் பார்க்க கேட்க சாப்பிட வேண்டும் என்கின்ற ஆசைகள், எல்லாம் இருக்கக் கூடாது. அதற்குத்தான் போகம் என்று பெயர். நாக்குக்கு ருசியாகவும் பக்கத்திலேயே பட்சணங்களை வைத்துக்கொண்டு உபநிஷத் பாஷ்யம் வாசிப்பது என்பதெல்லாம் கூடாது அதெல்லாம் பொழுதுபோக்காக செய்வது.*

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
*பக்கத்தில் சாப்பிடுவதற்கான வஸ்துக்களை வைத்துக்கொண்டோ அல்லது குடிப்பதற்கு தண்ணீர் வைத்துக் கொண்டு நாம் படிக்கிறோம் என்றால் அந்த நேரத்தை வீண் செய்ய வேண்டாம் என்பதற்காக ஒரு அர்த்தம்தான் ஆகும். சொல்கின்ற அவருக்கும் அந்த நேரம் வீணாகப் போய்விடும். எதிலும் ஆசையே இருக்கக் கூடாது. இந்த லோகம் இருந்தாலும் சரி மற்ற லோகம் ஆக இருந்தாலும் சரி அந்த பலன்களில் நமக்கு ஆசையே இருக்கக் கூடாது.*


*சமத மாதி ஷட்கம் என்று மூன்றாவது சாதம். அடிப்படையாக இந்த ஆறும் இருக்க வேண்டும் நமக்கு. எதையும் பொறுத்துக் கொள்ளக்கூடிய சக்தி, மற்ற விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருத்தல் இப்படி ஆறு இருக்கின்றன. இது எல்லாவற்றுக்கும் மேல் முமுக்ஷ்த்துவம் அவசியம். நாம் ஞானத்தை அடைய வேண்டும் என்கின்ற முழுமையான ஆசை ஈடுபாடு வேண்டும்.**இவைகளெல்லாம் நமக்கு இருந்தால்தான் உபநிஷத்தின் அர்த்தங்கள் நமக்கு புரியும். இல்லையென்றால் அதை சொல்பவர்களை பார்க்கும்போது நமக்கு எல்லாம் புரிந்தார் போல் தோன்றும். ஆனால் வீட்டுக்கு வந்த பிறகு என்ன சொன்னார் என்று கேட்டால் ஏதோ அவர் சொன்னார் வித்தியாசமாக இருந்தது என்று சொல்வோம். மனதிற்கு கிரகித்தது போல் தோன்றினாலும் தத்துவத்தை கிரகிக்க முடியாது.*


*இது நமக்கு அந்த நேரத்தை ஏதோ நல்ல பொழுதாக போக்குமே தவிர, ஞானம் வரையிலும் கொண்டு போய் விடாது. அதனால்தான் சாதன சம்பந்த சந்துஷ்டி மிக மிக அவசியம். முதலில் நாம் இதற்காகத்தான் முயற்சி செய்ய வேண்டும்.*


*அதற்கான முயற்சியாக தான் இந்த கர்மாக்கள் எல்லாம் நமக்கு சொல்லி இருக்கிறார்கள். ஏதோ நம்மை வேறு வழியில் கொண்டு செல்வதற்காக என்று நாம் நினைக்கக் கூடாது. இந்த கர்மாக்கள் எல்லாம் நம்மை என்ன செய்கின்றது என்றால் சித்த சுத்தியை நமக்கு கொடுக்கின்றன.*


*மன அமைதி அனைத்து விஷயங்களிலும் சகிப்புத்தன்மை போரும் என்கின்ற எண்ணம், இவைகளை எல்லாம் கர்மாக்கள் தான் நமக்கு கொடுக்கின்றன. இந்தக் கர்மாவின் துணை இல்லாமல் நாம் எவ்வளவு கட்டுக்கட்டாக, உபநிஷத்துக்களை நாம் படித்தாலும் கேட்டாலும் ஏதோ மனதிற்கு ஆகுமே தவிர அந்த சமயத்தில், பிறகு மீண்டும் நாம் இதற்கு வந்து விடுவோம்.*


*ஃபேன் இல்லாமல் நம்மால் உட்கார முடியாது படுக்கை இல்லாமல் நம்மால் படுக்க முடியாது. ருசி இல்லாமல் நம்மால் சாப்பிட முடியாது. இதெல்லாம் ஒருவருக்கு இருக்கு என்றால் ரொம்ப தூரம் தள்ளி இருக்கிறார் ஞான வழியில் இருந்து. இது எல்லாம் போதும் என்கின்ற எண்ணத்தை கொடுப்பது தான் இந்த கர்மாக்கள் எல்லாம்.*


*இதை நாம் மனதில் வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த ஆவஹந்தி ஹோமத்தில், நாம் செய்யக்கூடிய ஜெபம் நமக்கு என்ன பலனை கொடுக்கிறது என்றால், சாதன சம்பந்த சந்துஷ்டி ஓரளவு நமக்கு ஏற்படுத்துகிறது.*


*அதனால்தான் மஹா பெரியவா இந்த ஹோமத்தை நமக்கு சொல்லியிருக்கிறார்கள். பர பிரமத்தை குறித்து தான் இந்த மந்திரங்கள் எல்லாம் சொல்கின்றன. முதலில் இந்த மந்திரங்கள் பரம் பிரம்மத்தைப் பற்றி தான் சொல்கிறது. இரண்டு விதமான அர்த்தங்கள் இருக்கின்றன. முதலில் பர பிரமத்தை என்ன சொல்கிறது என்று பார்த்தபிறகு, இந்த லோகத்தில் தேவைப் படும் படியாக எப்படி சொல்வது என்று இரண்டு விதமான அர்த்தங்களை எப்படி சொல்வது என்று அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*