Announcement

Collapse
No announcement yet.

அன்னதானம் செய்வோம் ! அளப்பரிய பலன் பெறுவோ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அன்னதானம் செய்வோம் ! அளப்பரிய பலன் பெறுவோ

    அன்னதானம் செய்வோம் ! பலன் பெறுவோம்





    நம்மிடம் இருக்கும் பொருளை மற்றவர்க்கு ஈந்து - கொடுப்பவரும், பெறுபவரும் மகிழ்ச்சி அடைவதால் ஏற்படும் பெரும் புண்ணியம் பெறுவதற்கான புனிதச் செயல் அன்னதானமாகும்.

    தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படுதானம் என்று பொதுவாக மூன்று வகைப்படுத்தப்படுகின்ற தானங்களிலும்,தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் கொடுக்கப்படும் சுமார் 42 வகை தானங்களிலும், மிக மிக உயர்ந்ததாகவும், உன்னதமானதாகவும், அனைவரும் செய்தே ஆகவேண்டிய தானமாகவும் கருதப்படுவது அன்னதானம் மட்டுமே ஆகும்.



    உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது. வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும். அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும். மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும். ஆனால், அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும். ஆகையாலே பூரணமான தானம் - அன்னதானம் மட்டுமே ஆகும்.



    எந்த ஒரு பெரும் வைபவத்திலும் இறுதியாக அமைவது அன்னதானம் மட்டுமே. வைபவத்தில், எந்த ஒரு குறையிருந்தாலும் அந்தக் குறைகள் அனைத்தையும் களைவது அன்னதானம் மட்டுமே ஆகும். உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது.அன்னதாதா சுகி பவ

    (அன்னத்தை வழங்குபவர் சுகமாக வாழ்வார்) - என்ற மூதுரையும்,

    அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி

    (திருக்குறள் - 226) என்ற திருக்குறளும் அன்னதானத்தின் அருமைகளை அறிவிக்கின்றன.

    அன்னதானத்தின் பெருமைகளை அளவிடமுடியாது. அதைப்பற்றி அறிவிக்க அனேகம் உள்ளன.



    தானம் செய்வதில் பெரும் பெயர் அடைந்தவன் - கர்ணன்.

    மஹாபாரத இதிகாசத்தில் கர்ணன் - அவன் செய்த கொடையாலும், தர்மத்தாலும், தானத்தாலும் பெரும் பெயர் பெற்றான்.

    கர்ணனுக்குப் பிறகு கொடையில்லை என்ற சொல்வழக்கே உண்டு. கர்ணனைப் போல் யாவரும் தானம் செய்தது கிடையாது. அவன் பெருமையை அனேக சம்பவங்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.ஒரு சமயம், கடும் மழையால் அகிலமே நனைந்திருக்கின்றது. அச்சமயம் பார்த்து வேதியர் ஒருவர் தான் செய்யவேண்டிய ஒரு பெரும் யாகத்திற்காக, காய்ந்த ஸமித்துகளும், மரங்களும் பெற வேண்டி, அனைவரிடமும் வேண்டுகின்றார். சமையலுக்குக் கூட விறகு இல்லாத நிலையில் அனைவரும் தங்களிடம் இல்லை என்று கைவிரித்து விடுகின்றனர். இறுதியாக கர்ணனிடம் வந்து யாசிக்கின்றார்.

    அவர் கர்ணனிடமிருந்து பெரும் அளவில் காய்ந்த மரங்களை யாகங்களுக்காக மனமகிழ்வுடன் பெற்றுச் செல்கின்றார்.

    எங்கிருந்து இந்த அளவுக்குக் காய்ந்த மரங்கள் கிடைத்தன என்று அனைவரும் வியந்தனர்.



    அரண்மனையின் உள்ளே சென்று பார்த்தபோது தான் தெரிந்தது, தனது மணிமண்டபத்தினை இடித்து, மண்டபத்தினைத் தாங்கிக் கொண்டிருந்த உத்தரங்களையும், தூண்களையும் (மண்டபத்தின் உள்ளே இருக்கும் தூண்களும், உத்தரங்களும் காய்ந்துதானே இருக்கும்) வெட்டிக் கொடுத்திருக்கின்றான் கர்ணன். அந்த அளவுக்கு கொடுப்பதிலே வள்ளல் கர்ணன். வறுமைக்கே வறுமையை வைத்தவன். இடது கை கொடுப்பதை வலது கை அறியாவண்ணம் (இடக்கையில் இருப்பதை வலக்கையில் கொண்டு வரும் நேரம் கூட, தானத்தின் தன்மையை மாற்றிவிடும். ஆகையால், இடக்கையில் எடுத்ததை அக்கையாலேயே வழங்கும் தன்மை கொண்டவன்) கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரத்தை உடையவன்.



    கர்ணனின் கொடைக்கு மற்றும் ஓர் உதாரணம்.

    மஹாபாரதப் போரில் கர்ணனின் மார்பை அம்புகளால் துளைத்தெடுக்கின்றான் அர்ஜுனன். ஆயினும் கர்ணனின் உயிர் பிரியவில்லை. அவன் செய்த தர்மம் அவனின் தலையைக் காக்கின்றது. பகவான் கிருஷ்ணர் ஒரு வேதியர் வடிவம் கொண்டு கர்ணனிடம், இதுவரை கர்ணன் செய்த புண்ணியத்தை அனைத்தையும் தானமாக வேண்டுகின்றார்.

    இதுவரை செய்த தானத்தைக் கொடுப்பதால் அதற்கென்று ஒரு புண்ணியம் வருமே! அந்தப் புண்ணியத்தையும் தானமாக கொடுக்கின்றார் கர்ணன்.

    எப்படி?

    வேதியர் வடிவம் கொண்ட கிருஷ்ணருக்கு 'இப்பிறப்பில் யான் செய்புண்ணியம் அனைத்தையும் தருகின்றேன்' என்று உரைக்கின்றார்.செய்புண்ணியம் எனும் வார்த்தை - ஒரு வினைத் தொகை. வினைத் தொகை முக்காலத்தையும் குறிக்கக் கூடியது.

    உதாரணமாக ஒரு வினைத்தொகை வார்த்தை : ஊறுகாய். ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறப்போகின்ற காய் என்று அர்த்தம் அமையும்.

    அது போல - செய்புண்ணியம் எனும் வார்த்தை - இதுவரை செய்த புண்ணியம், இப்பொழுது செய்கின்ற புண்ணியம், எதிர்வரப் போகின்ற புண்ணியம் என அனைத்தையும் தானமாக கண்ணனுக்கு அளிக்கின்றான் கர்ணன்.

    கர்ணனுக்கு அளப்பரிய வகையில் தானம் செய்த பெரும் பெயர் கிடைக்கின்றது. தானம் பெற்றவுடன் வேதியர், தன் சுய உருக்கொண்டு, கர்ணனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டுகின்றார்.

    கர்ணன் மடிகின்றான்.

    இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்கின்றான் கர்ணன். எல்லாவிதமான சௌகரியங்களும் கிடைக்கின்றது கர்ணனுக்கு. ஆனால், கடுமையான பசி எடுக்கின்றது. சொர்க்கத்தில் பசி என்ற உணர்வே கிடையந்தாயிற்றே!

    தனக்கு மட்டும் பசியெடுக்கக் காரணம் என்று எண்ணியபோது, நாரத மகரிஷி அங்கு தோன்றுகின்றார்.

    கர்ணனிடம் நாரதர், பசி நீங்கவேண்டுமானால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் என்கிறார். அதன்படி, ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால், பசி நீங்குகின்றது. ஆனால், மறுபடிப் பசியெடுக்கின்றது.

    மறுபடியும் நாரதரை கர்ணன் நினைக்க, அவர் தோன்றுகின்றார். அவரிடம் கர்ணன் தனக்குப் பசியெடுப்பதற்கும், ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி நீங்குவதற்கும் காரணம் கேட்கின்றார்.

    அதற்கு, நாரதர் உன் வாழ்வில் நீ அனைத்து தானங்களையும் செய்திருக்கின்றாய், ஆனால், ஒரே ஒரு தானத்தைத் தவிர. அது அன்னதானம். அன்னதானம் செய்யாமல் சொர்க்கத்திற்கு வந்ததால், இங்கு வந்தும் உனக்குப் பசியெடுக்கின்றது. உன் பூலோக வாழ்நாளில் ஒருநாள் உன்னிடமிருந்து தானம் பெற்றவர் அன்னசத்திரம் எங்கிருக்கிறது எனக் கேட்க அதற்கு நீ உன் ஆட்காட்டி விரலைக் காட்டி அங்கிருக்கின்றது என்றிருக்கின்றாய். நேரடியாக அன்னதானம் செய்யாவிட்டாலும், அன்னதானத்திற்கான காரணியாக விளங்கிய உன் ஆட்காட்டி விரல் மட்டும் அன்னதானப் பலன் பெற்றது. ஆகையால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைக்கும்போது, சொர்க்கத்தின் முழுப்பலனாகிய பசியின்மையும் சேர்த்து உனக்குக் கிடைக்கின்றது என்றார்.

    அன்னதானம் செய்யாமலேயே, அன்னசத்திரம் இருந்த இடத்தைக் காட்டியமைக்கே இந்தப் புண்ணியம் என்றால், அன்னதானத்தின் மகிமையை எப்படி அளவிடமுடியும்.

    கர்ணனுக்கு ஒரு எண்ணம் தோன்றுகின்றது. அன்னதானத்தையும் அளப்பரிய வகையில் செய்யத் தோன்றுகின்றது. பரம்பொருளிடம் தன் எண்ணத்தை முன்வைக்கின்றான் கர்ணன்.

    ....

    கி.பி. எட்டாம் நூற்றாண்டு.

    மாமல்லபுரத்தைக் கட்டிய நரசிம்ம பல்லவன் காலம்.

    நரசிம்ம பல்லவனின் படைத்தளபதி பரஞ்சோதி. மகா வீரர்.

    பரஞ்சோதி படைக் கலன்களைக் கையாள்வதில் பெரும் தேர்ச்சி பெற்றிருந்தார். அதேசமயம் சிவத் தொண்டிலும், சிவனடியார்க்குத் தொண்டு செய்வதிலும் மனம் அதிகமாகச் சென்றது.

    நரசிம்ம பல்லவனுக்காக, வடபுலம் சென்று வாதாபி எனும் நகரைக் கொளுத்தி வெற்றி வாகை சூடி வருகின்றார்.

    பரஞ்சோதி படைத் தளபதியாக இருந்தாலும், ஆழ்மனதில் சிவத்தொண்டு செய்யும் மனப்பாங்கே அதிகமாக இருந்தது.

    வெற்றிச் செய்தியை நரசிம்ம பல்லவனுக்குச் சொல்லிய அதே நேரம் தன் உள்ளக் கிடக்கையாகிய சிவத்தொண்டு புரிவதே தன் விருப்பம் என்று சொல்கின்றார்.

    மனம் மகிழ்ந்த பல்லவன் பரஞ்சோதியின் விருப்பத்திற்கிணங்க, அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தந்தான்.

    திருவெண்காட்டு நங்கை எனும் தன் மனையாளுடன் இல்லறம் நடத்திவந்தார். சீராளன் எனும் செல்வ மகன் பிறந்தான். மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர்.

    சிவனடியார்களில் தான் ஒரு சிறு அடியவர் என அறிவித்துக் கொண்டமையால் அவர் சிறுத்தொண்டர் என அன்புடன் அழைக்கப்பட்டார்.

    ஒவ்வொரு நாளும் சிவனடியாருக்கு அன்னதானம் இட்ட பிறகே உண்ணும் வழக்கம் கொண்டு, அந்த சிவப் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார். அப்பணியை குடும்பமே உவந்து செய்து வந்தது.

    அவரின் சிவத்தொண்டினை உலகறியச் செய்ய சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார்.

    ஒரு நாள், வைரவர் (வடதேசத்திலிருந்து வந்த காபாலிகர். சிவச் சின்னங்களோடு, கையில் மண்டையோடு, சூலாயுதம் தரித்து) வேடம் கொண்டு, சிறுத்தொண்டர் இல்லம் சென்றார்.

    அச்சமயம், சிறுத்தொண்டர் சிவனடியார் எவரேனும் இருக்கின்றாரா என்று பார்த்து அழைத்து வர வெளியில் சென்றிருக்கின்றார்.

    வைரவர் வேடம் கொண்ட சிவமூர்த்தியைக் கண்ட சிறுத்தொண்டரின் மனைவி ஆவலுடன் அன்னமிட அழைக்கின்றார்.

    அவரோ, ஆண்கள் இல்லாத வீட்டில் நுழையமாட்டேன், அருகில் (உள்ள ஆலயமாகிய திருச்செங்காட்டங்குடியின் ஸ்தல விருக்ஷமாகிய) அத்தி மரத்தின் கீழ் அமர்கின்றேன், உன் கணவர் வந்தால் வரச்சொல் என்று சொல்லிச் சென்றுவிட்டார்.

    சிவனடியார் எவரையும் காணாமல் மனம் நொந்து வருகின்ற கணவரைக் கண்டு, அவரின் மனைவி நடந்ததைச் சொல்ல, சிறுத்தொண்டரோ மனம் மிக மகிழ்ந்து அத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருந்த வைரவர் கோலம் கொண்ட வடகயிலை நாதனின் பாதத்தில் விழுந்து, அன்புடன் அடியவன் இல்லம் வந்து அமுது கொண்டு, அருள்பாலிக்க அழைக்கின்றார்.

    வைரவரோ, நான் கேட்கும் உணவை உன்னால் அளிக்க முடியாது. ஆகையால் உன் இல்லம் வரமுடியாது என்கின்றார்.

    சிறுத்தொண்டர், தாங்கள் கேட்கும் உணவை மிக நிச்சயமாக அளிப்பேன் என்று வாக்குக் கொடுக்கின்றார்.

    அனைவரும் அதிரும் வண்ணம், வைரவர், 'நான் ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான் உணவு கொள்வேன். அந்த உணவு ஐந்து வயதுடைய, குடும்பத்திற்கு ஒரே வாரிசான ஆண் குழந்தையின் கறியை மட்டுமே சாப்பிடுவேன். அதுவும் அக்கறியை அக்குழந்தையின் அன்னை கால்களைப் பிடிக்க, தந்தை அரிவாளால் அரிந்து சமைக்க வேண்டும். இந்தச் செயலைச் செய்யும் போது எவர் கண்ணிலும் கண்ணீர் வரக்கூடாது. மனமகிழ்வுடன் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் தான் சாப்பிடுவேன்' என்கின்றார்.

    எந்தக் குழந்தையின் தாய் தன் ஒரே மகனை வெட்டுப்படுவதைப் பார்க்க முடியும்? எந்தத் தந்தைதான் தன் ஒரே குழந்தையை வெட்ட முடியும்? அதுவும் அச்செயலை மனமகிழ்வுடன் எவர்தான் செய்ய முடியும்?

    கலங்கிய நிலையில் வீட்டிற்கு வரும் கணவரை ஆவலுடன் கேட்கின்றார் அவரின் மனைவி. நடந்ததை விவரிக்கின்றார் சிறுத்தொண்டர். வேறு எவரிடமும் சென்று உங்கள் குழந்தையை வெட்டிக் கொடுங்கள் என்று கேட்க முடியாதே என்று வருந்துகின்றார். இருவரும் சேர்ந்து ஒரு முடிவெடுக்கின்றனர். தமது ஒரே குழந்தையை, ஆசையும் பாசமும் சேர்த்து வளர்த்துவரும், செல்வ மகனை, ஐந்து வயதுடைய சீராளனையே கறி சமைத்து அன்னமிட முடிவெடுக்கின்றனர்.

    பாடசாலை சென்றிருந்த சீராளனை அழைத்துவருகின்றார் சிறுத்தொண்டர். ஏதுமறியாக் குழந்தை ஆசையுடன் தந்தையின் கழுத்தைக் கட்டி முத்தமிடுகின்றது. வீட்டிற்கு வந்தவுடன், குழந்தையைக் குளிப்பாட்டி, அழகு செய்து, அமரவைக்கின்றார் திருவெண்காட்டு நங்கை.

    நங்கை கால் பிடிக்க, சிறுத்தொண்டர் குழந்தையை அரிவாளால் அரிந்து தர, குழந்தைக் கறி செய்கின்றனர்.

    இதை அனைத்தையும் முடித்து வைரவரை அழைக்கின்றார்.

    வைரவரும் சிறுத்தொண்டரின் இல்லம் வந்து அன்னமிடச் சொல்கின்றார். நங்கை அன்னத்துடன் குழந்தைக் கறியையும் கொண்டு வந்து பரிமாறுகின்றார்.

    அப்போது வைரவர் தன்னுடன் அமர்ந்து சாப்பிட சிறுத்தொண்டரை அழைக்கின்றார். வைரவரின் மனம் கோணக் கூடாது என எண்ணி, அவர் அருகே அமர்கின்றார். சிறுத்தொண்டருக்கும் குழந்தைக் கறியுடன் உணவு பரிமாறப்படுகின்றது. தன் மகனின் கறியை தானே சாப்பிடவும் துணிகின்றார்.

    வைரவர் மேற்கொண்டு, சிறுத்தொண்டரை நோக்கி, உனக்கு மகன் இருக்கின்றான் எனில் அவனையும் அழைத்து வந்து சாப்பிடச் சொல்லுங்கள் என்கின்றார்.

    தன் மகனின் கறியைத் தான் சமைத்தோம் என்று சொன்னால், இறந்தவர் வீட்டில் வைரவர் சாப்பிட மாட்டாரோ என்று எண்ணி அஞ்சி, 'அவன் உதவான்' என்கின்றார்.

    வைரவரோ, 'இல்லை இல்லை. அவன் வந்தால் தான் சாப்பிடுவேன்' என்கின்றார்.

    மனம் கலங்கி நின்ற சிறுத்தொண்டரை நோக்கி, வைரவர், உங்கள் மகனை அழையுங்கள் என்கின்றார்.

    நிலைதடுமாறி, வாசலில் நின்று 'சீராளா' என்கின்றார்.

    மகன் எப்படி வரமுடியும்?

    வைரவர் திருவெண்காட்டு நங்கையை நோக்கி, நீங்கள் சென்று அழையுங்கள் என்கின்றார்.

    அவரும் தலைவாசல் வந்து 'சீராளா' என்கின்றார்.

    அனைவரும் அதிசயக்கும் வகையில், சீராளன் பாடசாலையிலிருந்து வரும் நிலையில், 'அப்பா, அம்மா' என்று அழைத்தபடியே வர, பெற்றோர்கள் அவனை அப்படியே வாரியெடுத்து உச்சிமோர்ந்து, மகிழ்ந்து உள்ளே வர, அங்கே இருந்த உணவையும், வைரவரையும் காணவில்லை.சிவனும் பார்வதியும் இடபாரூடராகக் காட்சி நல்கினார்கள்.

    அனைவரும் நற்கதி பெற்றனர்.

    .....

    கர்ணனுக்கும், சிறுத்தொண்டருக்கும் என்ன சம்பந்தம்?

    சொர்க்கத்திலும் பசியெடுத்த கர்ணன் பரம்பொருளிடம், தான் மறுபடியும் பூலோகத்தில் பிறந்து, கொடைக்கு ஒரு கர்ணன் என்று பெயர் எடுத்தது போல, அன்னதானத்திலும் தான் ஒரு பெரும் பெயரும் பேறும் பெற வேண்டும் என்று பெரும் தவம் செய்து வேண்டிக்கொண்டான்.(கர்ணனின் முற்பிறப்பு ஸஹஸ்ர(1000)கவசன் என்றும், நரநாராயணர்களால் 999 கவசங்கள் அறுபட்டு, சூரியனிடம் அடைக்கலம் புகுந்தவன் என்றும், அவனே மறுபிறப்பில் ஒரே ஒரு கவசத்துடன் பிறந்த கர்ணன் என்றும் அபிதான சிந்தாமணி கூறுகின்றது.)அந்தக் கர்ணனின், மறுபிறப்புதான் சிறுத்தொண்டர்.எவரும் செய்யத் துணியாத வகையில் வைரவருக்கு அன்னமிட்டவர். சிவ பதவி அடைந்தவர். 63 நாயன்மார்களுள் ஒருவராகக் கொண்டாடப்படுபவர்.



    அவரின் தூய்மையான பக்தியையும், இறைத் தொண்டினையும், ஆழ்ந்த நம்பிக்கையும், அன்னமிடுதலில் உள்ள அளவிலா அவாவினையும் இன்றளவும் உலகம் மெச்சுகின்றது.



    கர்ணன் வேண்டி விரும்பிப் பெற்ற பிறவியே சிறுத்தொண்டர். முழுக்க முழுக்க அன்னதானத்திற்காகவே பிறப்பெடுத்தவர்.



    அன்னதானமிட்டு அளப்பரிய பேறு பெற்றவர்.



    அருந்தவம் செய்ததாலேயே அன்னதானம் செய்ய முடிந்தது.



    அன்னதானம் செய்தால் அடுத்து வரும் ஏழு பிறப்புகளுக்கும் தர்மம் தலைக்காக்கும் என்றும், சந்ததிகளை வளமாக வாழவைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.



    அன்னதானம் செய்வதால் எல்லா விதமான பலன்களும், வேண்டுதல்களும் நிறைவேறும்.



    அன்னதானம் செய்வோம் ! அளப்பரிய பலன் பெறுவோம் !!




    Source: K S RAMAKRISHNAN














Working...
X