மகா பெரியவா சரணம் : பாவையின் ஏற்றம் இங்கே தொடக்கம்
மார்கழி மாதம் பிறந்து விட்டால் போதும் தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோவில்களின் கோபுரங்களிலிருந்தும் இசைமாரி பொழிய ஆரம்பித்து விடும் விடியற்காலை நாலு மணியிலிருந்தே !
சிவன் கோவிலாக இருந்தால், திருவெம்பாவையும் திருபள்ளிஎழுச்சியும்; பெருமாள் கோவிலாக இருந்தால், திருப்பாவை.
இது தவிர, திருப்பாவை திருவெம்பாவை மாநாடுகள்; வைணப் புலவர்கள் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு, ஊர் ஊராகச் சென்று சொற்பொழியாற்றுவார்கள். பள்ளிக்கூடங்களில், பாவப் பாடல் போட்டி பரிசுகள் !
இத்தனைக் கோலாகலம் எப்போது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது ?
தலைக்காவேரியில்,நீர்த்திவலைகலாகக் தோன்றும் காவேரி, பறந்து விரிந்து வெள்ளமாகப் பெருகி அகண்டகாவேரியாக மாறிப் பிரமிக்க வைக்கிறது.
அப்படித்தான், பாவைகள் பப்ளிக் ஆனதும், யாரோ சில சைவர்களும் வைணவர்களும் தனித்தனியாக முணுமுணுத்துக்கொண்டிருந்த பாவைகள், பார் எங்கும் பரவி, விசுவரூபம் எடுத்துவிட்டன.
1949, மகாசுவாமிகள் திருவிடமருதூரில் தங்கியிருந்தார்கள்.
மகாலிங்கஸ்வாமி கோவிலில், செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள்.
அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ ?

உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். பெரியவா.
ஒரே குரலில், தெரியாது என்று பதில் வந்தது.
அந்த ஆச்சி அம்மாள், திருவெம்பாவை படிச்சிண்டிருக்கா நல்ல ராகத்தோட..
இரண்டு நிமிஷ நடை.
இந்தப் பாடல்களை எல்லோரும் பாட வேண்டும் என்று பிரசாரம் செய்தால், யாரவது பாடுவார்களா ?..
ஒருவரும் பாட மாட்டார்கள். இது, யாருக்குத் தெரியும் ?..
பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் மனத்திரையில் மணிவாசகரும் ஆண்டாளும் காட்சி தந்தார்கள் போலும் !
அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே ?..
ராமமூர்த்தி.. திருப்பாவை திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் ..
அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம் !
திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி திருப்பாவை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
பாவைப் பாடல்களின் பண் நயமும் இலக்கிய நயமும் அறிஞர்களால் விளக்கி மொழியப்பட்டன. அவற்றின் பக்தி ரசத்தைச் சுவைத்து மயங்காதவரே இல்லை.
பாவைப் பாடல் இசைத்தட்டுக்கள் அமோகமாக விற்பனை ஆயின.
மார்கழி மாதம் வந்தது.
பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர். உபதேசங்களை நத்திக் காட்டுபவர்கள்.
மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும் என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா ?
பிரகலாதன் என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்.
அப்புறம் கேட்பானேன் !
தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம் !
ஓரிரு ஆண்டுகள் சென்றன.
ராமமூர்த்தியையும் கண்ணனையும் அழைத்தார்கள், பெரியவாள்.
ஞாபகம் இருக்கா ? திருவெம்பாவை யாருக்குத் தெரியும் ? அதை யாரும் பாடமாட்டா ன்னு சொன்னேளே ? இப்போ யாரவது பாடராளா ?
இது, பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsSource:Panchanathan Suresh