மடத்துக்கு சொந்தமான நிலத்திலிருந்து வேர்க்கடலை அறுவடையாகி வந்தது. அத்தனை மூட்டைகளையும் மானேஜேர் எப்போதும் போல் விலைக்கு விற்றுவிட்டார். பெரியவா திடீரென்று வேர்க்கடலை வந்ததை நினைவில் வைத்துகொண்டு “இருக்கிறதா” என்று கேட்டனுப்பினார். சிப்பந்திகளுக்கு கூட வைக்காமல், அத்தனையும் வித்தாயிற்று என்று சொல்ல மானேஜருக்கு பயம். அதனால் ஆட்களை அனுப்பி, களத்தில் தர்மத்துக்கென விட்டு வந்ததை பொறுக்கி கொண்டு வர சொன்னார்.
ஆனால் ஆட்கள் போனபோது, களம் அடியோடு காலி. அந்த அசகாய சூரர்கள், அதற்காக சும்மா திரும்பி வரவில்லை. வயலிலிருந்த எலி வளைகளை துளைந்து பார்த்தார்கள்! அவற்றில், ஓரளவு ஒரு மூட்டையே கிடைத்தது! சந்தோஷமாய் எடுத்து வந்து சன்னதியில் சேர்த்தார்கள்.
“இது ஏது?” அயனான கேள்வி ஐயன் வாயிலிருந்து வந்தது.
“அஸ்வத்தாமா ஹத; குஞ்சரஹ;” பாணியில், “நம்ம நிலத்துலேர்ந்துதான் கொண்டு வந்தது” என்று பதில் சொன்னார்கள்.

ஆனால் அங்கே உலகம் “அசடு” என்று கருதும் ஓர் உண்மை விளம்பியும் இருந்தான். அவன், “நெலத்துல இருந்த எலி வங்குலேர்ந்தாக்கும் இத்தனை கடலை தோண்டி எடுத்தது!” என்று கக்கிவிட்டான். பெரியவாளுக்கு அது சற்றும் ஏற்கவில்லை. “பாவம்! அல்ப ஜீவன்கள் ஏதோ தங்க வயித்துக்காக எடுத்துண்டு போய் சேமிச்சு வெச்சதயா நாம சூறயாடிண்டு வரது?”

மானேஜரை கூப்பிட்டார். “இந்த வேர்க்கடலயோட இன்னம் பொட்டுக்கடலையும் வெல்லமும் கலந்து, அந்த எலி வங்குக்குள்ளேயெல்லாம் போட்டுட்டு வரணும். உடனே ஏற்பாடு பண்ணு”
வேர்க்கடலை பறிமுதல் பண்ணினதுக்கு, தாக்ஷிண்ய தக்ஷிணையாக பொட்டுக்கடலையும், வெல்லமும்! பாகின் மூலச்சரக்கும், பருப்பும் கலந்து கரிமுகத்தூமணியின் ஊர்திக்கு படைக்கிறார் நம் அருள் பாட்டனார்!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendssource: mahesh