இன்று "திருவாதிரை" நடராஜருக்குகந்த்த நன்னாள்
சிறுவயதில் திருவாதிரை என்றாலே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்போம் நாங்கள் . எனது தாயார் அன்று அதி காலையில் எழுந்து எங்களையும் எழுப்பி ஸ்நானம் செய்வித்து கோவை அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலமாகிய பேரூர் என்றழைக்கப்படும் "பட்டிச்வரம்" சென்று வர ஆயத்தம் செய்வார்கள் . அதனுடன் அன்று செய்யப்படும் திருவாதிரை களி மற்றும் ஏழு கறி (காய்) கூட்டு சாப்பிட்டுவிட்டு முதல் நாளே ஏற்பாடு செய்யப்பட்ட "ஜட்கா" வண்டியில் குடும்பத்துடன் பேரூர் சென்று ஆனந்த நடராஜ நடனத்தை கண்டு கழித்து வருவோம். திருவாதிரை அன்று மட்டுமே இங்கு திரு நடராஜ பெருமான் தனது கனக சபையிலிருந்து வெளியே வந்து சப்பரத்தில் எழுந்து ஆடும் காட்சியைக்காண பல்லாயிரம் பக்தர்கள் கூடுவார்கள். அந்த அற்புதக்காட்சி இன்றும் என் கண் முன்னே இருக்கிறது. ஆட வல்லான் அருளும் இத்தலம் தில்லைக்கு அடுத்தபடியாக மேலை சிதம்பரம் என அழைக்கப்படுகிறது. திருவாதிரையன்று நடராஜப்பெருமான் ஆடும்போது மூன்று முறை வலம்வரும்போது சப்பரத்தை எடுத்து வரும் பச்சை மூங்கில் உடையும் காட்சியை காணலாம் . சிறுவயதில் திருவிழா காட்சிகள் எல்லாமே அற்புதமானதாக தோன்றும் . தவிர அங்கு விற்கப்படும் ஊதல், காத்தாடி மற்றும் எளிய விளையாட்டு சாமான்களை வாங்கிவரும் போது அடையும் ஆனந்தமான நாட்கள் எனது நினைவுகளில் உறைந்துவிட்டன.
இங்கு மூலவர் சிவபெருமான் பட்டீ ஸ்வரர் என்று அழைக்கப்படும் கோஷ்டீஸ்வரர், தாயார் பச்சை நாயகி என்றழைக்கப்படும் மரகதவல்லி. இத்திருக்கோயில் கோவையிலிருந்து 5 கி மீ தொலைவில் இருக்கிறது .. அற்புதமான சிற்பங்கள் உள்ள கனகசபை உலக பிரசித்திபெற்றது . திருக்கோயில் அருகில் இருபுறமும் தென்னந்தோப்புகளின் நடுவில் ஓடும் நொய்யல் நதி யில் நான் பல முறை ஸ்நானம் செய்திருக்கிறேன். இத்திருத்தலம் மலையாள தேசத்திலுள்ளோருக்கும் மிகவும் சிறப்பான முக்தித்தலம் .
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே
பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே.
(சுந்தரமூர்த்தி சுவாமிகள்)
நலம்கோரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களுரு
Bookmarks