ரைவதனின் பெண் ரேவதியின் கதை!
வேதம் கூறும் 27 நட்சத்திரங்களில் கடைசியாக இருப்பது ரேவதி. அதி அற்புதமான அறிவியல் ரகசியத்தை அறிவிக்கும் நட்சத்திரம் இது. புராணம் கூறும் ரேவதியின் கதையே ஆச்சரியமானது. ரைவதன் என்ற மன்னனுக்குப் பிறந்த பெண்ணின் பெயர் தான் ரேவதி!அவன் வாழ்ந்த காலத்தில் மனிதர்கள் அனைவரும் இப்போது இருப்பதை விட இன்னும் அதிக உயரம் உடையவர்களாக இருந்தார்கள். தன் பெண் ரேவதிக்கு தகுந்த மாப்பிள்ளையைத் தேட ஆரம்பித்தான் மன்னன் ரைவதன்.அவளுக்கு ஏற்றபடி ஒருவரும் சரியாக அமையவில்லை.ரைவதன் கவலைப்பட ஆரம்பித்தான். நாளடைவில் கவலை பயமாக மாறியது. இவளுக்கு உரிய மணாளன் யார், அவனை எப்படிக் கண்டுபிடிப்பது? சிந்தித்தான். சிந்தனையின் முடிவில் ஒரு வழி தோன்றியது.


இவளைப் படைத்த பிரம்மனையே நேரில் சென்று கேட்டு விட்டால் என்ன? இவளுக்காக யாரைப் படைத்தீர்கள் என்று சுலபமாகக் கேட்டு விடலாமே! உடனே நேரே சத்யலோகத்துக்குத் தன் பெண்ணையும் அழைத்துக் கொண்டு சென்றான்.அவன் பிரம்ம லோகம் சென்ற சமயம் அங்கு ஒரு பெரிய வேள்வி நடந்து கொண்டிருந்தது. பிரம்மா அவனை வரவேற்று சைகையால் சற்று இருக்குமாறு சொன்னார்.ரைவதனும் காத்திருந்தான்.


வேள்வி முடிந்ததும் பிரம்மா ரைவதனிடம் வந்த விஷயம் என்ன என்று அன்புடன் கேட்டார். ரைவதன் தன் கவலையைச் சொன்னான். ரேவதிக்கு உரிய மணாளன் யார் எனத் தாங்கள் தான் எனக்குச் சொல்ல வேண்டும் என்று வேண்டினான்.பிரம்மா சிரித்தார்.


ரைவதா! ஏமாந்து விட்டாயே! நீ இங்கே வந்த போது பூமியில் கிருத யுகம் நடந்து கொண்டிருந்தது. வேள்வி முடிந்து விட்ட இந்த சமயத்திலோ அங்கு கலி யுகம் நடந்து கொண்டிருக்கிறது!பூமியின் காலமும் இங்குள்ள கால நிர்ணயமும் வேறு! இனி இவளை பூமியில் உள்ள யாரும் மணம் புரிந்து கொள்ள முடியாது. அதோ, பூமியைப் பார். அங்கு அனைவரும் உயரம் குறைந்தவர்களாக இருப்பதைப் பார், என்றார். ரைவதன் கலங்கிப் போனான். அருள் புரிய பிரம்மனை வேண்டினான்.


பிரம்மாவும் அருள் கூர்ந்து அவனை நோக்கி, ரைவதா, கவலைப்படாதே! பூமியில் பத்து அடி உயரம் உள்ள பலராமன் என்பவர் பிறப்பார். அவர் இவளைத் தன் கலப்பையால் உயரத்தைக் குறைத்து மணப்பார். இனி, கவலையை விடு என்றார்.


பிரம்மா சொன்னபடியே பலராமனும் கலப்பையால் ரேவதியின் தலையில் ஒரு குட்டு குட்டி அவள் உயரத்தைக் குறைத்து அவளை மணம் புரிந்தார். இப்படி முடிகிறது. கதை. இதைப் பல புராணங்களிலும் படிக்க முடிகிறது.

Source: ச.நாகராஜன்