பெரியவா சிவாஸ்தானத்தில் இருந்தபோது மடத்துக்கு அருகிலேயே ஒரு தயிர் விற்கும் ஒரு அம்மாவும் வசித்துவந்தாள். ஸ்ரீ மடத்தை தாண்டிப் போகும்போதெல்லாம் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுப் போவாள். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில், எட்ட இருந்தே நமஸ்காரம் பண்ணிவிட்டுப் போய்விடுவாள். காரணம்,தயிர் வியாபாரம் சூர்யோதயத்துக்கு முன்னமேயே ஆரம்பித்தால்தான் தயிர் அதிகம் புளிக்காமல் இருக்கும். எனவே காலையில் ஸ்நானம் பண்ணுவது அவளுக்கு வழக்கமில்லை. வியாபாரம் முடிந்ததும் மத்தியானம்தான் குளியல்!

ஒருநாள் காலை மடத்தில் நாலைந்து பேர் தவிர அதிகம் யாரும் காணப்படவில்லை. அந்தத் தயிர்க்காரம்மா பெரியவா அமர்ந்திருந்த இடத்துக்கு சற்று தள்ளி தன்னுடைய தயிர்க்கூடையை வைத்தாள். சின்னச்சின்ன மண் சட்டிகள் நாலைந்தை எடுத்து அதில் தயிரை நிரப்பினாள்.

"எசமானே! பசும்பால காய்ச்சி, ஓரக்குத்தி கொண்டாந்திருக்கேன் ஸாமீ!சுத்தமா செஞ்சிருக்கேன்.. ஸாமீ எல்லாத்தையும் சாப்பிடணும் .." என்று பெரியவாளிடம் உரக்கச் சொல்லிவிட்டு, நமஸ்காரம் பண்ணிவிட்டுப் போய்விட்டாள்.

கோடிகோடியாக பணமும், பொன்னும்,மணியும் கொட்டக் காத்திருக்கும் தனவான்களுக்குக்கூட கிடைக்காத பெரிய பாக்யம் அந்த ஏழை தயிர்க்காரம்மாவுக்கு கிடைத்தது!

"டேய்! அந்த சட்டில தயிர் இருக்கு பாரு....அத இங்க கொண்டா!..."

சிஷ்யர் கொண்டு வந்து பக்கத்தில் வைத்ததும், அன்று கோகுலத்தில் குட்டி விரல்களால் வெண்ணை, தயிர், நெய்யை வழித்து வழித்து உண்ட பழக்கத்தின் விட்டகுறை தொட்டகுறை நீங்காமல், லாவகமாக அந்த சட்டியிலிருந்து தன் கையாலேயே கொஞ்சம் தயிரை எடுத்து சாப்பிட்டார்.சிஷ்யரை கூப்பிட்டு, " இந்தா.....எல்லா சட்டிலயும் இருக்கற தயிராய் ஒண்ணாக் கொட்டி, இன்னிக்கி பிக்ஷைல தயிர்ப்பச்சடி, மோர்கொழம்பு, மோர்க்கூட்டு, அவியல் பண்ணிடு....."

அன்று தயிர்க்காரம்மா தன்னுடைய கள்ளமில்லா அன்பு ஒன்றினாலேயே அந்த மஹா தபஸுக்கு பிக்ஷை பண்ணிவைக்கும் பெரிய பேற்றை பெற்றாள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends