யக்ஞத்துக்கு மூன்று விதமான பிரயோஜனங்கள்.

ஒன்று இங்கே உயிர் வாழ்கிற போதே நமக்கும் ஸமஸ்தப் பிராணிகளுக்கும் தேவர்களின் அருளினால் க்ஷேமத்தைப் பெறுவது.


இரண்டாவது, செத்துப் போன பிறகு நாம் தேவலோகம் போய் ஆனந்தமாக இருப்பது. தேவலோக வாஸம் நிரந்தரமானதில்லை. நம் புண்ணியம் தீருகிற வரைதான் அங்கு இருக்க முடியும். தேவலோக இன்பம் என்பது பரம பக்தர்கள், ஞானிகள் ஆகியவர்கள் அடைகிற ஆனந்தத்தைப் போல் பூர்ணமானதுமல்ல. ஸ்வர்க்க ஸெளக்கியம் என்பது ஆத்மானந்தம் அல்லது ஈச்வரனை அநுபவிக்கிற இன்பத்துக்கு ஸமதையே இல்லை.


இந்திரனின் இன்பமும் ஆத்மானந்தத்தில் துளித்துளிதான் ( " லேச லேசம்தான் " ) என்று ஆசார்யாள் " மநீஷா பஞ்சக " த்தில சொல்லியிருக்கிறார் . ஆனாலும் இந்த மநுஷ்ய லோகத்தில் ஒயாமல் அழுதுகொண்டிருப்பதைக் காட்டிலும் ஸ்வர்க்க வாஸம் என்பது எத்தனையோ ஆயிரம் மடங்கு உயர்ந்தது தான். இப்படி தேவலோக வாஸத்தை விரும்பி நாம் யக்ஞ கர்மாநுஷ்டானம் பண்ணினால், விரும்பிய அந்தப் பலனை அது கொடுக்கிறது என்பது யக்ஞத்தின் இரண்டாவது பிரயோஜனம்.மூன்றாவதுதான் முக்கியமானது. அது என்னவென்றால் பலனை நினைக்காமல் கீதையில் சொன்னபடி நிஷ்காம்யமாக யக்ஞம் புரிவதால் ஏற்படுவது. இந்த லோகத்தில் நமக்கு க்ஷேமம் வேண்டும், பிறகு தேவலோகம் போகவேண்டும் என்பதெல்லாம் பலனை உத்தேசித்துதான்.

இப்படி உத்தேசிக்காமல், " லோக க்ஷேமத்துக்காக இது நமக்குக் கடமையாக வந்திருக்கிறது " என்று ஒரே உணர்ச்சியோடு, சொந்தப் பளனில் பற்றில்லாமல் யக்ஞங்களைப் பண்ணினால், அது விரைவிலேயே சித்த சுத்தியைக் கொடுத்து, நம்மை ஞான மார்க்கத்தில் சேர்த்து, முடிவிலே சாச்வத ஆனந்தமான மோக்ஷத்தில் சேர்த்துவிடும். அதாவது பரமாத்மாவோடு பரமாத்மாவாக நாம் கரைந்திருக்கிற நிலைக்குக் கொண்டு போய்ச் சேர்ந்து விடும். ஆத்ம ஸாக்ஷத்காரத்தையும் ஞானத்தையுமே சொன்ன ஆதிசங்கர பகவத்பாதாள், " வேதோ நித்யம் அதீயதாம் : தத் உதிதம் கர்ம ஸுஅநுஷ்டீயதாம்- தினமும் வேதம் ஒதுங்கள் ; அதில் சொல்லியிருக்கிற யக்ஞாதி அநுஷ்டானங்களை நன்றாகப் பண்ணுங்கள் " என்று சொன்னது. இந்த மூன்றாவது பிரயோஜனத்தை உத்தேசித்துத் தான் . இந்த லோக வாழ்க்கை நன்றாக இருப்பற்காகவோ, பிறகு தேவலோகம் என்றும் ஸ்வர்க்கலோகம் என்றும் சொல்லப்படும் கேளிக்கை உலகத்தில் நாம் போய் இருப்பதற்காகவோ அவர் இப்படிச் சொல்லவில்லை.

இப்படிப்பட்ட அல்ப பலன்களை நினைக்காமல், ஆத்மாவைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வேத கர்மாக்களை நிஷ்காம்யமாகப் பண்ணினால், அது சித்த சுத்தி தரும் என்பதால்தான் ஆசார்யாளும் யக்ஞாநுஷ்டானம் பண்ணவேண்டும் என்று ஆக்ஞை போட்டிருக்கிறார்.

Source: kamakoti.org

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends