கோயிலடி (திருப்பேர் நகர்)அப்பக்குடத்தான் என்று அன்புடன் அழைக்கப்படும் அப்பாலா ரங்கநாதப் பெருமாள் தம் வலது கையில் ஓர் அப்பக்குடத்தை அணைத்தபடிக் காட்சியளிக்கிறார்.

அமைந்துள்ள இடம்:-
கொள்ளிடத்தின் அக்கரையில் அன்பிலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருப்பேர் நகர் என்பதைவிட, கோயிலடி என்றால் தான் பலருக்கும் புரியும். திருக்காட்டுப் பள்ளி கல்லணை பேருந்து வழியில் இந்த திவ்யதேசம் அமைந்துள்ளது. தஞ்சை, கும்பகோணத்திலிருந்து திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி வழியாகச் செல்லும் பேருந்துகள் கோயிலடியில் நிற்கும். காவிரிக் கரையில் ஒரு மேட்டின் மீது கோயில் அமைந்துள்ளதால் குளித்துவிட்டுப் பெருமானைத் தரிசிக்க வசதியாக இருக்கிறது. அருகிலுள்ள திருச்சியிலோ, திருக்காட்டுப் பள்ளியிலோ தங்கி பெருமானைத் தரிசிக்கலாம்.

அப்பக்குடத்தான் என்ற எம்பெருமானை அப்பாலா ரங்கநாதன் என்றும் அழைப்பர். உபமன்யு முனிவர் அருகில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு ஆசிகூறும் வகையில் புஜங்கசயனமாக மேற்கு நோக்கி அரவணையில் துயில் கொண்டிருக்கிறார். பெருமானின் வலதுகரம் அப்பக்குடத்தை அணைத்திருக்கிறது.


தாயார்:-
இந்திராதேவிக்கு கமலவல்லி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

தீர்த்தம்:-
இந்திர தீர்த்தம், கொள்ளிடம்,

தலவிருட்சம்:-
வில்வ மரம்

விமானம்:-
இந்திர விமானம்.
சிறப்பம்சம்:-
நம்மாழ்வார் இங்கிருந்து தான் தன் கடைசிப் பாசுரத்தைப் பாடினார் என்று வரலாறு தெரிவிக்கிறது. எனவே அவர் இங்கிருந்து தான் மோட்சமடைந்தார் என்று கருத்தும் உண்டு. தினமும் மாலை வேளைகளில் பெருமாளுக்கு அரவணையாக அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள பெருமாளைத் தரிசித்து, சந்தான கிருஷ்ணனை மடியில் வைத்துப் பிரார்த்தனை செய்தால் மக்கட்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை. ஆஞ்சனேயர், விநாயகர் இவர்களுக்கும் சன்னிதிகள் உள்ளன.

மங்களாசாஸனம்: பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் தமது 33 பாசுரங்களால் இக்கோயிலை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

பெரிய திருமொழி - 5ல் 1429 பாசுரத்தில் திருமங்கையாழ்வார்
`திருமாலைத் துதித்து நான் உய்ந்தேன் என்பதாக

வங்கமார் கடல்க ளேழும்
மலையும்வா னகமும் மற்றும்,
அங்கண்மா ஞால மெல்லாம்
அமுதுசெய் துமிழ்ந்த எந்தை,
திங்கள்மா முகில்அ ணாவு
செறிபொழில் தென்தி ருப்பேர்,
எங்கள்மா லிறைவன் நாமம்
ஏத்திநா னுய்ந்த வாறே! என்று பாடுகிறார்.