போய்ப் பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான்
பொருதிறல் கஞ்சன் கடியன்
காப்பாரும் இல்லை கடல்வண்ணா! உன்னைத்
தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே! கேசவ
நம்பீ! உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லோரும் வந்தார்
அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்.
பொருள்: கண்ணா! உன் தந்தை நந்தகோபன், பசுமேய்க்கச் சென்று காலம் தாழ்த்தி வருவதால் கவனிக்க பொழுது கிடைக்கவில்லை. மாமன் கம்சன் உன்னிடம் கோபமாக இருக்கிறான். நீலவண்ணனே! உன்னைக் கண்டு கொள்வார் யாருமில்லை. நீயோ தனியாக ஊர் சுற்றித் திரிகின்றாய். அரக்கி பூதனையிடம் பால் குடித்தவனே! கேசவனே!
நல்லவனே! உனக்கு காது குத்துவதற்காக ஆயர்குலப் பெண்கள் எல்லாம் நம் இல்லத்துக்கு வந்து விட்டனர். அவர்களை வரவேற்க வெற்றிலை பாக்கை தயாராக வைத்துவிட்டேன். சீக்கிரம் வருவாயாக.