தந்தையின் விருப்பத்திற்காக இளமை துறந்து பதவியை உதறிய பீஷ்ம பிதாமகர் மறைந்த நன்னாள் பீஷ்மாஷ்டமி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. பிப்ரவரி 18ம் தேதி பீஷ்மாஷ்டமி தினம் என்பதால் பீஷ்மரின் தியாகத்தை இந்த நாளில் அறிந்து கொள்ளலாம். சந்தனு மகாராஜாவிற்கும் கங்கா தேவிக்கும் பிறந்தவர்தான் தேவவிரதன் என்ற காங்கேயன். இளவரசான இவர் தனது தந்தை சந்தனுவிற்காக யாருமே செய்ய முடியாத தியாகத்தை செய்துள்ளார். தந்தை விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக இளமை விட்டுக்கொடுத்தார். அவர்களின் வாரிசுகள் அரசாளா வேண்டும் என்பதற்காக திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சபதம் ஏற்றார். அவரது தியாகம் கண்டு உலகமே அதிசயத்தது. தந்தையின் ஆசையை நிறைவேற்ற தியாகம் செய்தவர் பீஷ்மர்' என்று போற்றப்பட்டார். பீஷ்மர் என்றால் யாருமே செய்ய முடியாத தியாகத்தை செய்தவர் என்று பொருள். மகனின் தியாகத்தைக் கண்டு மகிழ்ந்த சந்தனு, மகனுக்கு மிகப்பெரிய வரம் ஒன்றை அளித்தார். "தீர்க்காயுளுடன் இருக்கும் நீ விரும்பும் நாளில்தான் உயிர்துறப்பாய்" என்பதுதான் அந்த வரம்.

சந்தனு மகாராஜாவின் இரண்டாவது மனைவி மூலம் சித்திராங்கதன், விசித்திரவீர்யன் என்ற இரு மகன்கள் பிறக்கிறார்கள். அவர்களுக்கு அம்பிகா, அம்பாலிகா ஆகியோரை பீஷ்மர் மனமுடித்து வைக்கிறார். மன வலிமை குறைந்த சித்திராங்கதன் முதலில் இறந்துபோக, சந்தனு மஹாராஜாவுக்குப் பிறகு, விசித்திரவீர்யன் அஸ்தினாபுரத்தைத் தலைநகராய்க்கொண்டு இராஜ்ஜியத்தை ஆள்கிறான். கொஞ்ச காலத்திற்குப் பின்னர், காச நோயால் அவதியுற்ற விசித்திரவீர்யனும், சந்ததி இல்லாமல் மரணமடைகிறான். அவனுடைய அம்பிகா, அம்பபாலிகா என்ற இரு மனைவியரும் தம் இளம் வயதிலேயே விதவைகள் ஆகின்றனர். அஸ்தினாபுர இராஜ்ஜியம் அரசன் இல்லாமல் தவிக்கிறது. அன்றாட அரச காரியங்கள், சத்யவதி, பீஷ்மர் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. அப்போது விரதத்தை விட்டு வம்சவிருத்தி செய்ய உதவவேண்டும் என்று என்று இரண்டாவது அன்னை கேட்டுக்கொண்ட போதும் சபதத்தை கைவிடவில்லை பீஷ்மர். இதனையடுத்து வியாசர் மூலம் அம்பிகா, அம்பாலிகாவிற்கு பிறந்தவர்கள்தான் திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோர். இதில் திருதராஷ்டிரன் கண்பார்வையற்றவன். பாண்டுவின் புத்திரர்கள் பாண்டவர்கள், திருதராஷ்டிரன் மக்கள் கவுரவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

பிற்காலத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தீயவர்கள் என்று தெரிந்தும் கவுரவர்களின் பக்கம் நின்றார் பீஷ்மர். அர்ஜூனன் விட்ட அம்புப் படுக்கையில் பல நாள் இருந்தாலும் உத்தராயண காலத்தில் உயிர் விட வேண்டும் என்று காத்திருந்து ரத சப்தமிக்கு மறுதினம் அஷ்டமி நாளில் உயிர்நீத்தார். எனவேதான் இந்த நாளினை பீஷ்ம தர்ப்பண நாள், பீஷ்மாஷ்டமி என்று அழைக்கின்றனர். தகப்பனுக்காக யாரும் செய்ய முடியாத தியாகத்தை செய்தவர் பீஷ்மர். ஆனால் இன்றைய காலத்தில் பெற்றவர்களுக்கு ஒருவேளை உணவளிக்க கூட யோசிக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கின்றனர். பீஷ்மாஷ்டமி நன்நாளில் பெற்றோர் இருந்தாலும் பீஷ்மருக்காக தர்பணம் செய்யலாம் என்கின்றனர் முன்னோர்கள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends