ஹரசாப விமோசனப் பெருமாள் என்ற நாமம் பெற்று ஸ்ரீமந் நாராயணன் திருக்கண்டியூர் என்ற இத்தலத்தில் அருள் பாலிக்கிறார்.

அமைந்துள்ள இடம்:-
தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் வடக்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சையிலிருந்தும், திருவையாற்றிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.

மூலவர்:-
ஹரசாப விமோசனப் பெருமாள். கிழக்கு முகம் நோக்கிய நின்ற திருக்கோலம்.

உத்ஸவர்:-
கமலநாதன்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsதாயார்:-
கமலவல்லி.

தீர்த்தம்:-
பத்மதீர்த்தம், கபாலதீர்த்தம், கபாலமோக்ஷ புஷ்கரிணி, குடமுருட்டி நதி.

விமானம்:-
கமலாக்ருதி விமானம்.

சிறப்பம்சம்:-
திருக்கரம்பனூரில் சொல்லப்பட்ட அதே ஐதீகம் இங்கும் வழங்கப்படுகிறது. பரமசிவன், பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ளியதால் அவருடைய கபாலம் கையில் ஒட்டிக்கொண்டது. இந்த சாபத்தை எம்பெருமான் விமோசனம் செய்ததால் பெருமானுக்கு ஹரசாப விமோசனப் பெருமாள் என்று பெயர். பிரம்மா, விஷ்ணு, சிவன் இம்மூவருக்கும் கோபுரங்களுடன் கூடிய தனித்தனிக் கோயில்கள் 1/4 கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ளன. பெருமாள் கோயிலின் ஒரு சன்னிதியில் சக்கரத்தாழ்வாரும், நரசிம்மரும் ஒருசக்கரத்தின் இரு பக்கங்களில் காட்சியளிக்கின்றனர். ஆண்டாள், தேசிகருக்குத் தனிச் சன்னிதிகள் உள்ளன. சிவனுக்கு ப்ரம்மசிரக் கண்டீஸ்வரர் என்று பெயர்.

மங்களாசாஸனம்:-
திருமங்கையாழ்வார் தமது ஒரே பாசுரத்தால் (2050) மங்களாசாஸனம் செய்திருக்கிறார்.

பிண்டியார் மண்டை ஏந்திப்
பிறர்மனை திரிதந் துண்ணும்,
உண்டியான் சாபம் தீர்த்த
ஒருவனூர், உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம்
கச்சிபேர் மல்லை என்று
மண்டினார், உய்யல் அல்லால்
மற்றையார்க் குய்ய லாமே?