அக்ஷர்தாம்' என்றால் "பிரம்மாண்டமான கலைக்கோயில்'. இந்தியாவில் அகமதாபாத், காந்திநகர், கோல்கட்டா, மும்பை, டில்லி நகரங்களில் அக்ஷர்தாம் கோயில்கள் உள்ளன. பிரமிக்க வைக்கும் டில்லி நிஜாமுதீன் அக்ஷர்தாம் சுவாமி நாராயணர் கோயில் புகழ்மிக்கது.தல வரலாறு:


சுவாமி நாராயணர் அயோத்தி அருகிலுள்ள சாப்பையா கிராமத்தில் 1781 ஏப்.3ல் பிறந்தார். ஏழு வயதிற்குள் வேதசாஸ்திரம் கற்று முடித்தார். குடும்பத்தைத் துறந்து ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டார். ஏழு ஆண்டுகள், இந்தியா முழுவதும் பாதயாத்திரை சென்று, குஜராத் வந்தடைந்தார். 500 சீடர்களைக் கொண்டு "சுவாமி நாராயண் ஸம்ப்ராடே' என்னும் இயக்கத்தைத் தொடங்கினார். மக்களுக்கு தொண்டாற்றினார். ஆன்மிக வாழ்விற்கு ஒழுக்கம் அவசியம் என்பதை வலியுறுத்தி வந்தார். 49 வயது வரை வாழ்ந்த அவர், பிரம்மாண்டமான 6 அக்ஷர்தாம் கோயில்களைக் கட்டி "அட்சர புரு*ஷோத்தம வேத தத்துவ வழிபாட்டை' ஏற்படுத்தினார். தனது உபதேசங்களை "வசனாம்ருதம்' என்னும் நூலாக எழுதினார். வாழ்வின் இறுதியில், "மக்களை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன்; ஆன்மிக குருமார்களின் வடிவில் எப்போதும் நிரந்தரமாகப் பூவுலகில் இருப்பேன்,'' என்று கூறி உயிர் துறந்தார். உலகம் முழுவதும் நாராயணருக்கு 8100 கிளைகள் இயங்கி வருகின்றன. மாமிசம், மது, கூடாஒழுக்கம் ஆகியவை மனிதனின் பரம எதிரிகள் என்றார். மனம்,சொல்,செயல் மூன்றாலும் தூய்மையுடன் இருப்பதே ஒவ்வொருவருக்கும் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று போதித்தார். இவரின் போதனைகளைப் பரப்பும் விதத்தில் நாடெங்கும் அக்ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது.

எழில்மிக்க வாயில்கள்:


கலைநயம் மிக்க வாயில்களைக் கடந்தால், பிரதான கோயிலுக்குள் செல்லலாம். முதல் வாயிலுக்கு "பக்தி துவார்' என்று பெயர். இதில் 208 சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இரண்டாவதாக "மயூர் த்வார்' உள்ளது. இதில் உள்ள இரட்டை வாயிலில் மயில்கள் உயிருடன் இருப்பது போன்று உள்ளது. நுணுக்கமான 869 சிற்பங்கள் உள்ளன. மயில் நுழைவுவாயிலில் சுவாமி நாராயணரின் நினைவாக இரு பாதச்சுவடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தபாதச் சுவட்டின் நான்கு புறமும் குளிர்ந்த நீர் விழுந்து கொண்டிருக்கிறது.
பிரதான கோயில்:


யமுனை நதிக்கரையில் 30 ஏக்கர் பரப்பில் கோயில் அமைந்துள்ளது. பிரதான கோயில் 315 அடி நீளம், 275 அடி அகலம், 129 அடி உயரம் கொண்டது. கோயில் மண்டபம் இளஞ்சிவப்பு மணற்பாறை, வெள்ளைப் பளிங்கு கற்களால் ஆனது. 148 யானைகள், விதவிதமான மனிதர்கள், விலங்குகளின் சிற்பங்கள் நேர்த்தியாக காட்சியளிக்கின்றன. மண்டபத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் இறைவனின் 200க்கும் மேற்பட்ட வடிவங்கள் உள்ளன. ஒன்பது வட்டவடிவ சிகரங்களில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன. இக்கட்டடப்பணியில் சிறு ஆணி கூட பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடுநாயகமாக 11 அடி உயரத்தில் சுவாமி நாராயணரின் திருவுருவம், தங்கக் கவசத்தில் பளபளக்கிறது. அதைச் சுற்றி நான்கு திசையிலும் வட்டவடிவமாக ராதாகிருஷ்ணர், சீதாராமர், லட்சுமிநாராயணர், சிவபார்வதி வடிவங்கள் பளிங்குக் கற்களில் அமைக்கப்பட்டுள்ளன.

சிற்ப மண்டபங்கள்:


65 அடி உயர லைல மண்டபம், பக்த மண்டபம், ஸ்ம்ருதி மண்டபம், பரமஹம்ச மண்டபம் ஆகியவை இங்கு உள்ளன. வெளிப்புறச் சுவரில் 611 அடி சுற்றளவில் கர்நாடகத்திலுள்ள பேளூர், ஹளபேடு கோயில்களில் உள்ளது போல, 4287 சிற்பங்கள் உள்ளன. இதில் விநாயகரின் 48 திருமேனிகள், 200 ரிஷிகள், பக்தர்கள், லட்சுமி, பார்வதி, சரஸ்வதி சிலைகள் சிறப்பானவை.
நாராயண தடாகம்:


திருக்கோயில் பீடத்தின் அடியில் மூன்று பக்கமும் வரிசையாக 108 கோமுகங்கள் உள்ளன. அவற்றில் ஊற்று போல நீர் விழுந்து கோயிலைச் சுற்றி தடாகம் போல காட்சி தருகிறது. நாராயண தடாகம் எனப்படும் இக்குளத்தில் சுவாமி நாராயணர் விஜயம் செய்த இடங்களில் உள்ள 51 நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் சேர்க்கப்பட்டுள் ளது என்பது குறிப்பிடத்தக்கது

அபிஷேகமண்டபம்:


இங்குள்ள அபிஷேக மண்டபத்தில் குழந்தையோகி நீலகண்ட வார்னியின் சிலை உள்ளது. இந்தச்சிலைக்கு கங்கைநீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதைச் சுற்றி சிவப்புக் கற்களால் ஆன, 3000 அடி நீளமும், 1152 தூண்களும் கொண்ட இரண்டடுக்கு மண்டபம் உள்ளது. அதில் 145 ஜன்னல்கள் உள்ளன.
கண்காட்சிக்கூடங்கள்:


சகஜானந்த தரிசனம், நீலகண்டதரிசனம் என்னும் கண்காட்சிக் கூடங்கள் இங்கு உள்ளன. சகஜானந்த தரிசனத்தில் சுவாமி நாராயணரைப் பற்றிய 50 நிமிடப் படமும், நீலகண்ட தரிசனத்தில் யோகி நீலகண்ட வார்னியைப் பற்றிய 40 நிமிடப்படமும் காண்பிக்கப்படுகின்றன.
படகுச்சவாரி:


சன்ஸ்கிருதி விஹார் என்னும் 15 நிமிடப் படகுச்சவாரி இங்குண்டு. சவாரியின் போது சரஸ்வதி நதிக்கரையில் இந்திய பண்பாட்டை பிரதிபலிக்கும் தட்சசீலம் பல்கலைக்கழகம், வேதகாலக் கிராமங்கள், கடைவீதிகள் ஆகியவற்றைக் காணலாம். இதற்கும் கட்டணம் உண்டு.
திறக்கும்நேரம்:


காலை 9- இரவு7. குளிர்காலமான அக்டோபர்- மார்ச் வரை மட்டும் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். அனுமதி இலவசம். கண்காட்சி, ஒளிஒலி காட்சிக்கு கட்டணம் உண்டு.
இருப்பிடம்:


டில்லி நிஜாமுதீன் பாலத்திற்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 24ல் உள்ளது.