நாலு கோடி பாடல்
சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை அழைத்து, நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும் என்று ஆணையிட்டான்.
ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார்; புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள் என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார். ஒரு பாடல் எப்படி நாலு கோடி பாடலுக்கு இணையானது ஆகும்? வியப்பாக இருக்கிறதா? இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள்.
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.(ஒளவையார் தனிப் பாடல்:42)
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
இப்பாடலில் கோடி என்று ஒரு கோடி பொன் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரை மதித்து அவரது வீட்டின் முன்பகுதியை மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள்)
2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். இப்பாடலில் முதல் இரண்டு கருத்துகளையும் எதிர்மறைப் பொருளில் பாடிய ஒளவையார் இறுதி இரண்டு கருத்துகளையும் உடன்பாட்டுப் பொருளில் பாடியுள்ளார்.
நல்ல பண்புகளை மதிக்காதவர் வீட்டுக்குச் செல்லாதே!
விரும்பி உண்ணச் சொல்லாதவரின் வீட்டில் உண்ணாதே!
என்பவை எதிர்மறை ஆகும்.
நல்ல குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்!
சொன்ன சொல் தவறாமல் வாழ்!
என்பவை உடன்பாடு ஆகும்.
Bookmarks