கனியாக வந்த குழந்தை

திருமணமாகிப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
தசரதன் என்ற மாமன்னன் எதற்காக ஏங்கினானோ, அதே ஏக்கம் எங்களுக்கு. என்ன பாவம் செய்தோம்?

பக்தி சிரத்தையான குடும்பம். பிறந்தது புகுந்தது என்ற இரண்டுமே வீடுபேறு பெற்ற பரம்பரை. என் மாமனார், புதுக்கோட்டை டாக்டர் ந.தியாகராஜன், புதுக்கோட்டை சங்கர மடத்தில் அப்போதைய முத்ராதிகாரி. மஹாபெரியவாள் இளையாத்தங்குடியில தங்கியிருந்தபோது (1965) சிறிது உடல்நலம் குன்றியிருந்தார். கோயில் குளத்தில் நீராடிவிட்டு, என் மாமனார்தான் (பெரியவாளைத் தொட்டு) சிகிச்சை அளிக்கும் பாக்கியம் பெற்றவர்.

மஹாபெரியவாளின் பூர்வாசிரம சகோதரர் பிரும்மஸ்ரீ சாம்பமூர்த்தி சாஸ்திரிகள், கடைசிக் காலங்களில் நோய்வாய்ப்பட்டிருதபோது, சில மாதங்கள் எங்கள் மருத்துவமலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

தசரதனுக்கு வசிஷ்டர் இருந்தார். எங்களுக்கு?

பெரியவாளைத் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், விவாகமான நாள் முதல் (2-2-1977) நானும் என் கணவரும் சேர்ந்து புறப்படவிருக்கும் நேரத்தில் ஏதாவது ஒரு தடங்கல் வந்துவிடும்! யாராவது ஒருவர் மட்டும் சென்று தரிசித்துவிட்டு வருவோம்.

எங்களுக்கும் கொஞ்சம் கொடுப்பினை இருந்தது போலும்! 1-9-1988 அன்று கலவையில் நாங்கள் (இருவருமாக) மஹாபெரியவாளைத் தரிசித்தோம்.

ஒரு மாமாங்க ஏக்கம் தீரப்போகிறது.

நாங்கள் சென்ற சமயம், பெரியவாள் மேனாவுக்குள், கதவை மூடிக்கொண்டு ஜபம் செய்து கொண்டிருந்தார்கள்.

எப்போது தரிசனம் கொடுப்பார்கள்?

சித்தம் போக்கு, சிவம் போக்கு சாட்சாத் பரமேஸ்வரனாலேயே பதில் சொல்லமுடியாத கேள்வி! இரண்டு மணி நேரம் கழித்துக் கதவைத் திறக்கலாம்; அல்லது இதோ இப்போதேஅந்த விநாடி வந்துவிட்டது!

ஓர் அணுக்கத் தொண்டர், புதுக்கோட்டை டாக்டர் தியாகராஜனின் இரண்டாவது பிள்ளை, தம்பதியா வந்திருக்கா தரிசனத்துக்கு என்று சற்று உரத்த குரலில் விண்ணப்பித்துக் கொள்ள
பெரியவாளே, கதவைத் திறந்தார்கள். தெய்விகப் புன்முறுவல்! அந்த க்ஷணகாலம் அப்படியே நிரந்தரமாகவே நின்று விடக்கூடாதா என்றொரு வேட்கை.

சாம்பமூர்த்தியை ரொம்ப நன்னா கவனிச்சிண்டார், உன் தகப்பனார் மெய் சிலிர்த்தது, எங்களுக்கு.

என் கணவர் குமார் (என்ற கிருஷ்ணமூர்த்தி) எங்கள் ஏக்கத்தை, நெஞ்சங் குழையக் கூறினார்.

நாங்கள் தனித்தனியா தரிசனத்துக்கு வந்திருக்கோம். இப்போதான், முதல் தடவையா, ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கோம்

பெரியவா கைகளைத் தூக்கி ஆசீர்வதித்தார்கள். மேனாவிலிருந்த ஓர் ஆரஞ்சுப்பழத்தை, என் கணவர் கையில் கொடுத்தார்கள். ஒரு குழந்தையையே எடுத்துக் கொடுப்பதுபோல் எங்களுக்குத் தோன்றியது.

21-5-1989 அன்று எனக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. இதிலென்ன ஆச்சரியம்? ஆச்சார்யாள் அனுக்ரஹத்தால் எல்லாம் நடக்கும் என்று சொல்லிவிடலாம்தான்.

ஆச்சரியம் இருக்கிறது. அன்றைய தினம், வைகாசி அனுஷம் பெரியவர் ஜன்ம நக்ஷத்ரம்!

முன்னர், ராமேஸ்வரத்தில் சில பரிகாரங்களைச் செய்து முடித்திருந்தோம். அதனால், குழந்தைக்கு இராமநாத் சந்திரசேகர் என்று பெயர் சூட்டினோம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:திருமதி ரேவதி கிருஷ்ணமூர்த்தி, சென்னை - 33