ருத்ரர் வழிபாடு

Click image for larger version. 

Name:	nataraja.jpg 
Views:	3 
Size:	10.4 KB 
ID:	467

ருத்ரமூர்த்திக்கு ஆலயங்கள் , சந்நதிகள் அமைந்திருப்பது மிகவும் குறைவு. என்றாலும் திருமாணிக்குளி பீமருத்ரர் ஆலயம் ருத்ரருக்கான ஆலயங்களில் பிரபலமானது. கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழியில் அம்புஜாட்சி உடனாய வாமனபுரீஸ்வரராலயம் அமைந்துள்ளது.


இங்கு கருவறையின் முன்பு திரையிடப்பட்டு நீலவண்ணத்தாலான அத்திரையில் சிவப்பு வண்ண நூலால் பீமசங்கரர் என்ற பீமருத்ரரின் திருவடிவம் பொறிக்கப்பட்டிருக்கும். சிறப்பான கலைநுணுக்க வேலைப்பாடுகளுடைய இந்த ருத்ரரின் திருவடிவம் அக்னிஜ்வாலையுடன் எட்டுக்கரங்களுடன் காணப்படுகின்றது. இக்கோவிலில் நடத்தப்படும் நான்கு கால பூஜைகளும் இந்த திரையிலுள்ள பீமருத்ரருக்கே நடத்தப்படுகின்றன. பூஜை முடிந்ததும் உள்ளே உள்ள சிவலிங்கத்திருமேனிக்கு தீபாராதனை மட்டுமே செய்யப்படுகிறது. இத்தகு புதுமையான வழிபாட்டிற்கு பல புராணக்கதைகளை அத்தலபுராணம் பேசுகிறது.


இதே போல, திருக்குடந்தை என்ற கும்பகோணத்தில் நாகநாதசுவாமி கோவிலில் பிரளயகாலருத்ரருக்கு திருவடிவம் அமைத்து வழிபாடு நடந்து வருகிறது. திருவெண்காட்டில் அகோரருத்ரருக்கு அழகான பெரிய வடிவம் உள்ளது. அதே போல, திருவண்ணாமலையில் காலாக்னிருத்ரர் சந்நதி இருக்கிறது. ஆனால், அம்மூர்த்தியை பைரவர் என்றே அழைத்து வழிபாடாற்றுவதாயும் தெரியவருகின்றது.


இதே போல, பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மஹாதேவன் என்ற அஷ்டருத்ரருக்கும் திருக்கடவூரில் திருமாளிகைச்சுற்றில் திருவுருவங்கள் உள்ளதாக ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், அதைப் புரிந்து கொள்ளாமல் அத்திருவடிவங்களின் மேல் அஷ்டவசுக்களின் பெயர்களை எழுதி வைத்திருப்பதாயும் தெரியவருகிறது. ஆனால், சிலர் அஷ்டபைரவர்களையும் வேறு சிலர் சிவனுடைய ஆஷ்டு வித்யேஸ்வரரையுமே அஷ்ட ருத்ரராக கருதுகின்றனர். எனவே, இது தொடர்பில் ஆய்வுகள் நடைபெற வேண்டிய தேவையுள்ளது.


மயானத்தில் சிவபெருமான் ருத்ரதாண்டவம் செய்வதாக குறிப்பிடப்படுகிறது. இங்கே காட்டப்படும் மய என்பதற்குஉருவாக்குதல் என்றும், அயனம் என்பதற்கு தொடர்ந்து செல்லுதல் என்றும் பொருள். இதனை ஸ்மசானம் என்ற சொல்லால் குறிப்பது தவறு என்றும் பெரியவர்கள் காட்டுவர். இதனால், உருத்திரசமயிகளும் பாசுபதர்களும் தம் வழிபாட்டிடங்களை மாயானம் என்று சொன்னார்கள் என்றும் தெரிய வருகின்றது. கச்சிமயானம், திருக்கடவூர்மயானம், வீழிமயானம், காழிமயானம், நாலூர் மயானம் என்ற ஐந்து மயானங்கள் சிவவழிபாட்டாளர்களுக்கு முக்கியமானவையாக காட்டப்படுகின்றன.

இதே போல, ருத்ரவழிபாடுகள் ஈழத்தில் நடைபெற்றமைக்கான ஆதாரங்கள் இப்போது இல்லாதவிடத்தும், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற ஸ்தலங்களை அடுத்து ருத்ரமயானங்கள் அருகில் காணப்படுவதும், அருகிலேயே ஆலய தீர்த்தம் உள்ளதும், அங்கெல்லாம் ருத்ரவழிபாடு நடந்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆவரங்கால் என்ற ஊரில் மயானத்திற்கு மிக அண்மையாக, மயானத்தை நோக்கிய வண்ணம் பெரியதொரு சிவாலயம் இராஜகோபுரத்துடன் காணப்படுவதும், ருத்ரவழிபாட்டுடன் இணைத்து சிந்திக்க வைக்கிறது. இதனை விட, பிற்காலத்தில் இங்கிருந்த ருத்ரவழிபாடு பைரவ வழிபாட்டுடன் கலந்திருக்கலாம் என்றும் எண்ண முடிகின்றது.

ஆக, ருத்ரர் பற்றிய விளக்கங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. அது பற்றிய பல்வேறு சர்ச்சைகளும் குழப்பங்களும் ருத்ரரை சிவனுடன் இணைத்தும், கலந்தும், பேதப்படுத்தியும் மாறுபட்டும் சிந்திக்கும் நிலைமைகளும் விரவிக்கிடக்கின்றன. எனவே, ருத்ரர் பற்றியும் ஸ்ரீ ருத்ரம் பற்றியும் ஆய்வுகள் மேம்படவேண்டும். இது வரை ஆய்வுகள் நடைபெற்றிருந்தால் அவை பிரபலப்படுத்தப்பட வேண்டும். அதன் வாயிலாக, சைவத்தமிழ்ச்சான்றோர்கள் ருத்ரர் பற்றிய தெளிவு உண்டாக வழி செய்ய வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsSource : mahesh