ஜீவஹிம்ஸை செய்யலாமா? _ Part 2

யக்ஞம், யுத்தம், நீதிப்படி தண்டனை தருவது முதலிய இடங்களில் ஹிம்ஸை என்று நினைக்கக் கூடாது. யக்ஞத்தைவிட சிரேஷ்டமென்றால், " யக்ஞமும் சிரேஷ்டந்தான் ; அதைவிட அஹிம்ஸை சிரேஷ்டம் " என்றுதான் அர்த்தமாகும். ஆயிரம் யக்ஞங்கள் மிகவும் உயர்வானவை ; அவைகளிலும் அஹிம்ஸை உயர்வானது என்ற அர்த்தத்தில்தான் அந்தக் குறள் சொல்லப்பட்டிருக்கிறது. அன்றியும் இந்தக் குறள் ஆயிரம் யக்ஞங்களைச் செய்வதைக் காட்டிலும், ஸந்நியாஸி ஒரு பிராணிக்கும் ஹிம்ஸை செய்யாமலிருப்பது நல்லது என்ற அபிப்ராயத்தில் இந்தக் குறளைச் சொல்லியிருக்கிறார். சாஸ்திரப்படியும் துறவிக்கு யக்ஞம் செய்யும் அதிகராம் கிடையாது ; அவனுக்கே பூர்ண அஹிம்ஸை விதித்திருக்கிறது.

யாகங்களில் பலவிதம் உண்டு. அதைப்பற்றிப் பின்னால் வேதாங்கங்களில் ஒன்றான " கல்பத்தைப் பற்றியும், கிருஹஸ்தாச்ரமம் பற்றியும் சொல்லும்போது சொல்கிறேன். இங்கே சொல்ல வந்தது, எல்லா யாகத்திலும் பசு பலி செய்யப்படவில்லை என்பதே. ஆஜ்யம் என்று நெய்யை மட்டும் ஹோமம் செய்வது, ஹவிஷ்யான்னத்தை (நெய்ச் சாதத்தை) ஹோமம் செய்வது, சரு என்ற நன்றாகப் பக்குவமான (cooked) தானியத்தை ஹோமம் செய்வது, புரோடாசம் என்பதான அடைமாதிரியான (baked) ஆனிய பக்ஷங்களை ஹோமம் செய்வது, அக்னிஹோத்ரம் என்பதில் பாலை ஹோமம் செய்வது, ஒளபாஸனத்தில் அக்ஷதையை ஹோமம் செய்வது, ஸமிதா தானத்தில் சுள்ளியை மட்டும் ஹோமம் செய்வது என்றிப்படிப் பல இருக்கின்றன. பசுபலி உள்ளதிலும், யக்ஞப் பிரஸாதமாக ஹோமம் செய்து மிஞ்சியதில் ரொம்பக் கொஞ்ச அளவே சாப்பிட வேண்டும்.


ஒருத்தன் செய்ய வேண்டியதாக 21 யக்ஞங்கள் விதிக்கப் பட்டிருக்கின்றன. பாக யக்ஞம், ஹவிர் யக்ஞம், ஸோம யக்ஞம் என்று மூன்று விதமான யக்ஞங்களில், ஒவ்வொன்றிலும் ழு வீதம் மொத்தம் 21 சொல்லியிருக்கிறது. இவற்றிலும் பாக யக்ஞம் ஏழிலும் பசு பலி இல்லை. ஹவிர் யக்ஞங்களிலும் முதல் ஐந்தில் பசுபலி இல்லை. ' நிரூட பசுபந்தம் ' எனற ஆறாவது யக்ஞத்திலிருந்துதான் பசுபலி ஆரம்பிக்கிறது.

' கூட்டம் கூட்டமாகப் பசுக்களைப் பலிகொடுத்து, பிராம்மணர்கள் ஏகமாக மாம்ஸம் சாப்பிட்டார்கள். புத்தர் கூட இப்படி யாகத்துக்காக ஒட்டிக் கொண்டு போகப்பட்ட மந்தைகளை ரக்ஷித்தார்' என்றெல்லாம் இப்போது புஸ்தகங்களில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி ஏகப்பட்ட பசுக்களை பலி கொடுப்பதாக, வாஸ்தவத்தில் எந்த யாகமும் இல்லை. பிராம்மணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜபேயத்துக்கும் 23 பசுக்களே சொல்லப்படுகின்றன. சக்ரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வமேதத்துக்குக்கூட 100 பசுக்கள்தான் சொல்லியிருக்கிறது.


மாம்ஸ போஜனத்தில் இருந்த ஆசையினாலேயே பிராம்மணர்கள் "தேவ ப்ரீதி " என்று கதை கட்டி, யாகம் பண்ணினார்கள் என்று சொல்வது ரொம்பவும் பிசகாகும். ஒரு பசுவின் இன்னின்ன அங்கத்திலிருந்து மட்டுமே இத்தனை அளவுதான் மாம்ஸம் எடுக்கலாம். அதில் இடாவதரணம் என்பதாக ரித்விக்குகள் இவ்வளவுதான் புஜிக்க வேண்டும் என்பதற்கெல்லாம் சட்டம் உண்டு. அது துவரம் பருப்பளவுக்கு கொஞ்சம் அதிகம் தானிருக்கும். இதிலும் உப்போ புளிப்போ,காரமோ, தித்திப்போ சேர்க்காமல், ருசி பார்க்காமல் அப்படியே முழுங்கத்தான் வேண்டும். ஆகையால், வேறு என்ன காரணம் சொல்லி யக்ஞத்தை கண்டித்தாலும் சரி, பிராம்மணர்கள் இஷ்டப்படி மாம்ஸம் தின்னுவதற்கு யக்ஞம் என்று பெரிய பெயர் கொடுத்து ஏமாற்றினார்கள் என்றால் கொஞ்சம்கூட சரியில்லை.


இப்போது ஒரு மருந்தைப் பரீக்ஷிப்பது என்பதற்காக லாபரிட்டரிகளில் எத்தனை ஜீவன்களைக் கொல்கிறார்கள்? இப்படியே ஒரு பெரிய க்ஷேமத்துக்காகச் சின்ன ஹானியையும் உண்டாக்கலாம் என்றே யக்ஞங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வாஸ்தவத்தில் ஹானியும் இல்லை; அந்தப் பசு ஸத்கதி பெறுகிறது என்பதே நம்பிக்கை.

இன்னொரு புரளி, ஸோம யாகம் என்று சொல்லிக்கொண்டு ஸோமரஸம் குடித்தது மதுபானம் மாதிரிதான் என்பது. ஸோமரஸம் போதைப் பொருள் அல்லவே அல்ல. அது intoxicating அல்ல. " அர்த்த வாதம் " என்கிற முறையில், மிகைப்படப் பேசும்போது, வேதத்தில் ஒரிடத்தில், இந்திரன் ஸோமரஸத்தால் மதமடைந்து சத்ருவதம் பண்ணினான் என்று வருவதை வைத்துக் கொண்டு இப்படிக் குயுக்தி பண்ணுகிறார்கள். தேவ சரீர தத்வமே மநுஷ்ய தர்மங்களுக்கு மாறானது. அது மட்டுமின்றி, ரித்விக்குகள் ஏதோ பாட்டில் பாட்டிலாகவோ மொந்தை மொந்தையாகவோ குடித்த மாதிரிப் பேசுவது அடியோடு விஷயம் தெரியாத பேச்சு. ஒரு யாகத்தில், உரல் மாதிரியான ரூபத்தில் ரொம்பவும் செய்ய வேண்டும், அதில் மீறுவதை ஹத சேஷம் ' என்று சாப்பிட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இம்மாதிரி ஒரு யாகத்தில் துளிதுளியாக செய்கிற ஸோம பானத்தையெல்லாம் சேர்த்தால்கூட ஒரு அவுன்ஸுக்குமேல் வராது. இப்படிச் சாப்பிட்டு எவரும் மயக்க மடைந்தததும் கிடையாது. ஸோமரஸம் என்பது அப்படியன்றும் ருசியாக இருக்கவும் இல்லை என்கிறார்கள்.


ஸோம பானத்தை அந்தக் காலத்து காபி என்று சிலர் வியாக்யானம் பண்ணிவிட்டார்கள். ஸோம ரஸம் உண்டாக்குகிற ஸந்தோஷத்தைப் பற்றி வேத மந்திரங்கள் இருப்பதால் இப்படி தப்பர்த்தம் பண்ணிவிட்டார்கள். காபி சித்த விருத்தியைக் கெடுக்கிற வஸ்து. ஸோம ரஸம் சித்த சுத்தியை உண்டாக்குகிற வஸ்து. இரண்டையும் ஒன்று என்பது கொஞ்சங்கூட பொருந்தாது அந்தக் காலத்தில் ஸம்ருத்தியாகக் கிடைத்து வந்த ஸோமலதை இப்போது கிடைப்பதே ரொம்பவும் அபூர்வமாகிக் கொண்டு வருகிறது. வேத தர்மங்கள், ஆசாரங்கள் எல்லாம் நசித்து வருவதற்கு ஏற்றாற்போல், ஸோம யாகங்களுக்கு ஜீவாதாரமாக இருக்கப்பட்ட கொடியும் க்ஷீணித்துக் கொண்டே வந்திருக்கிறது. ஸமீபத்தில் கொல்லங்கோடு ராஜா, ஸோமயாகம் எங்கே நடந்தாலும் அதற்கு ஸோமலதை கொடுப்பதென்று வைத்துக் கொண்டிருந்தார். காபிக்கும் இந்த ஸோமலதைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.Source:
subadra