பெண்ணுக்கு மாப்பிள்ளை, மாப்பிள்ளைக்கு பெண் பார்ப்பதென்றால் சந்தேகமே இல்லாம தீர விசாரிச்சு முடிவு பண்ணனும்! இல்லாட்டி கதை இப்படித்தான் ஆகும்!
ஒரு தரகர் மாப்பிள்ளை வீட்டுக்குப் போனார்.
""அம்மா! உங்க பையன் கோயிலுக்குப் போயிருக்கான். அங்கே, சீனிவாசன் மகள் சுமதி அவளை பார்த்திருக்கா! அவனைத் தான் கட்டுவேன் என அடம்பிடித்து ஒத்தைக்காலில் நிக்கிறாள். அவளையே நம்ம பையனுக்கு பேசி முடிச்சிடலாமா?'' என்றார்.
அம்மாவுக்கு வாயெல்லாம் பல்.
""சரி! அந்தப்பொண்ணே விரும்பறாள், இந்தா பிடியுங்கோ! இரண்டாயிரம்! பேசி முடியுங்கோ'' என பணத்தை நீட்டினாள்.
தரகர் நேரா பெண் வீட்டுக்குப் போய், அவளது தகப்பனாரைப் பார்த்தார்.
""ஐயா! உங்க பொண்ணு கோயிலுக்குப் போயிருக்கா! அங்கே பத்மாவதி அம்மா மகன், சுந்தரேசனைப் பார்த்திருக்கா! அவனைத்தான் கல்யாணம் முடிப்பேன். எங்க அப்பாகிட்ட பேசி முடிச்சு வையுங்கன்னு சொன்னாள். குழந்தை ஆசைப்படறது! பையன் ஒத்தைக்கையாலே உலகத்தையே வளைக்கிற பயல். முடிச்சுடட்டுமா!'' என்றார்.
அவருக்கும் சம்மதம். தன் பங்குக்கு இரண்டாயிரத்தை தூக்கிக் கொடுத்தார். கல்யாணம் முடிந்தது. முதல் ராத்திரியில், தம்பதிகள் பேசிக்கொண்டார்கள்.
""என்னங்க! நீங்க ஒத்தைக்கையாலே உலகத்தையே வளைப்பீர்களாமே! தரகர் சொன்னார். அப்படி என்ன சாதனை படைச்சிருக்கீங்க!'' என்றதும், ""ஓ! இதைச் சொல்றியா! என்று ஒரு கையைத் தூக்கிக் காட்டினான். அதிலே மரக்கட்டை இருந்தது.
அவள் அதிர்ச்சியுடன் நிற்க, அவன் ""நீ என்னைத்தான் கல்யாணம் பண்ணுவேனு ஒத்தைக்காலில் நின்றாயாமே! அப்படி என்ன விசேஷத்தை எங்கிட்ட கண்டே?'' என்று திருப்பிக் கேட்டான்.
அவள் சற்று தெளிந்தவளாய்,""ஓ! அதைச் சொல்றீங்களா!'' என்று ஒரு காலைக் காட்டினாள். அவளுக்கு ஒரு கால் தான் இருந்தது. இன்னொன்று செயற்கைக்கால். புயல் கிளம்பியது. இருவீட்டாரும் தரகரை அழைத்தனர்.
"" பையனுக்கு "ஒத்தைக்கை', பெண்ணுக்கு "ஒற்றைக்கால்' என்று சரியாத்தானே சொன்னேன். நீங்க கவனிக்காட்டி நானா பொறுப்பு?'' என்றார்.
எல்லாரும் வாய்மூடி விட்டனர்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends