வேதம் - ரிக்-யஜுஸ்-ஸாமம்-அதர்வம் Part 2

ரிக் வேத ஸம்ஹிதை முழுக்கவும் பொயட்ரி (செய்யுள்) ரூபத்தில் இருப்பது. பிற்காலத்தில் ச்லோகம் என்று சொல்லப்பட்ட செய்யுளுக்கே வேதகாலத்தில் ரிக் என்று பெயர். பிற்கால ச்லோகத்திற்கும் வேத ரிக்குக்கும் பெரிய வித்யாஸம் என்னவென்றால் ரிக்குகளைத்தான் ஸ்வரப்படி ஏற்றி இறக்கி அல்லது ஸமமாகச் சொல்ல வேண்டியிருப்பது. " ரிக் " என்றால் ஸ்தோத்திரம் என்றும் அர்த்தம். ரிக் வேத ஸம்ஹிதை முழுக்கவும் இப்படிப்பட்ட ஸ்தோத்திரங்களாகவே இருக்கிறது. பல தேவதைகளைப் பற்றின ஸ்தோத்திரங்கள். ஒவ்வொரு ரிக்கும் ஒரு மந்திரம். ஒரு தேவதையைப் பற்றிப் பல ரிக்குகள் சேரந்து ஒவ்வொரு ஸக்தமாக ஏற்பட்டிருக்கின்றன.

ரிக் வேதத்தில் - அதாவது ஸம்ஹிதையில் - பத்தாயிரத்து சொச்சம் (10170) ரிக்குகள் (மந்திரங்கள்) உள்ளன. (1028 ஸக்தங்கள்) . ரிக் வேதத்தைப் பத்து மண்டலங்களாகவும், எட்டு அஷ்டகங்களாகவும் இரண்டு விதத்தில் பிரித்திருக்கிறது. அக்னியைப் பற்றிய ஸக்தத்தோடு ஆரம்பித்து, அக்னியைப் பற்றிய ஸக்தத்தோடேயே அது முடிகிறது. வேதங்களுக்குள்ளே தேவதா ஸ்தோத்ர ரூபமாயிருப்பது ரிக் வேதம். அதில் உபக்ரமம் (ஆரம்பம்) , உபஸம்ஹாரம் (முடிவு) இரண்டிலும் அக்னியைச் சொல்லியிருப்பதால், அக்னி உபாஸனைதான் ( fire worship ) வேத தாத்பர்யம் என்றே கொள்கிறவர்களும் உண்டு. அக்னி என்றால் ஆத்ம சைதன்யத்தின் பிரகாசம் (ஸத்ய தத்துவத்தைப் பற்றிய அறிவொளி) என்றால், இதுவும் ஸரிதான். ரிக் வேதத்தின் கடைசி ஸக்தம் அக்னியைப் பற்றியதாக இருந்தாலும் அதில்தான் இப்போது தேசியகீதம் - National Anthem - என்று சொல்வதற்கு மேலாக, ஸர்வ தேசத்திற்குமான ஒற்றுமைப் பிரார்த்தனை - International Anthem - இருக்கிறது. " எல்லா ஜனங்களும் ஒன்று சேர்ந்து ஏக மனஸாக இணைந்து ஆலோசனை பண்ணட்டும். எல்லோருக்கும் ஒரே லக்ஷ்யமாக இருக்கட்டும். எல்லா ஹ்ருதயங்களும் அன்போடு ஒன்று சேரட்டும். இப்படி ஏகோபித்த எண்ணத்தோடு எல்லாரும் ஆனந்தமாக இருக்கட்டும் " என்று ரிக் வேதம் முடிகிறது.

யஜ் - வழிபடுவது - என்ற தாதுவிலிருந்து யஜுஸ், யக்ஞம் என்ற இரண்டும் வந்திருக்கின்றன. ரிக் என்றாலே எப்படி ஸ்தோத்திரம் என்று அர்த்தமோ, அதே மாதிரி யஜுஸ் என்றாலே யக்ஞ ஸம்பந்தமான வழிபாட்டுக் காரியக்ரமத்தை விவரிப்பது என்று அர்த்தம் ஆகிறது. இதற்கேற்றாற்போல் ரிக்வேதத்திலுள்ள ஸ்துதி ரூபமான மந்திரங்களை யக்ஞம் என்கிற காரியத்தில் பொருத்திக் கொடுப்பதே ( practical applictaion ) யஜுர்வேதத்தின் முக்கியமான லக்ஷ்யமாக இருக்கிறது. ரிக்வேதத்தில் உள்ள பல மந்திரங்கள் இதிலும் கூறப்படுகின்றன. அதோடு கூட, ப்ரோஸில் (உரைநடையில்) யக்ஞம் முதலான வேத கர்மாநுஷ்டானங்களைச் சொல்கிறது. வாயால் ஸ்தோத்திரம் செய்ய ரிக் வேதம் உபகரிக்கிறது. காரியத்தில் வழிபாடு பண்ண யஜுர்வேதம் முக்கியமாக உபகாரம் செய்கிறது.

ஒவ்வொரு வேதத்திலும் பல சாகைகள் இருக்கிற மாதிரி மட்டும் இல்லாமல், யஜுர் வேதம் தனக்குள்ளேயே நிரம்ப மாறுபாடுகள் உள்ள இரண்டு தனி வேதங்களாகவே பிரிந்திருக்கிறது. இந்தப் பிரிவுகளுக்கு சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என்று பெயர். சுக்லம் என்றால் வெளுப்பு. கிருஷ்ணம் என்றால் கறுப்பு. சுக்ல யஜுர் வேத ஸம்ஹிதைக்கு " வாஜஸநேயி ஸம்ஹிதா " என்றும் பெயருண்டு. " வாஜஸநி " என்பது சூரியனுடைய பெயர். சூரியனிடமிருந்தே யாக்ஞவல்கிய KS இந்த ஸம்ஹிதையை உபதேசிக்கப் பெற்று, லோகத்துக்குக் கொண்டு வந்ததால், இதற்கு வாஸநேயி ஸம்ஹிதா என்று பேர் ஏற்பட்டது.

Contd..3

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends