Announcement

Collapse
No announcement yet.

தரிசன அனுபவங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தரிசன அனுபவங்கள்

    நினைவு கூர்ந்தவர் : பி.எஸ். தேவராஜ சர்மா, பழையனூர்.


    1978 ஏப்ரல் 13-ஆம் தேதி. மறுநாள் தமிழ் வருஷப் பிறப்பு. அன்றைய தினம் விடியற்காலையிலேயே பெரியவாளை தரிசித்துவிட வேண்டும் என்று உத்வேகம். முதல்நாளே தேனம்பாக்கம் சென்று, கிடைத்த இடத்தில் படுத்துக் கொண்டோம். முதலில் கண் விழிப்பவர், மற்றவர்களை எழுப்பிவிட வேண்டும் என்று ஒப்பந்தம்.

    காலை மணி மூன்று முப்பது.

    மின்சாரம் பாய்ந்தது போல் உடலில் ஓர் ஓட்டம்.

    சட்டென்று கண்விழித்து எழுந்தோம்.

    எதிரே, மஹாஸ்வாமிகள்! விபூதி, ருத்ராட்சம்.. மங்கிய விளக்கொளியில் காஷாயம் பளபளக்கிறது. யாருக்கும், பக்கத்தில் இருப்பவர் யார் என்று தெரியவில்லை; கண்ணில் படவில்லை. ஒரே ஒருவரை, அருட்புன்னகையுடன் நிற்கும் பரமேஸ்வரனை மட்டுமே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். ஹரிக்கேன் விளக்கொளி வழிகாட்ட, பெரியவாள் வெளியே வந்து நடக்கத் தொடங்கினார்கள். முந்தைய இரவு அவ்வளவு பேசிய அவர், இப்போது மௌனம். நாற்பது பேர் பின் தொடர்ந்து சென்றோம்.

    வரதராஜர் கோயில் தெற்கு வாசல் வந்ததும், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டே, நான்கு மாடவீதிகளிலும் வலம் வந்தோம். வரும் வழியில் சாலையின் நடுவில், சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருந்தது. “பெரியவா எப்படிக் கடந்து செல்வார்கள்?” என்று நாங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே, பெரியவாள் ஒரே தாண்டாகத் தாண்டி சென்றார்கள்! (அனுமான் அம்சமும் இருக்குமோ?)

    பிறகு தேனம்பாக்கம் திரும்பினோம். காமாட்சியை தரிசித்துவிட்டு, ஊர் திரும்பினோம். அந்த ஆண்டு முழுவதும், எனக்கு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம்தான்.

    1985-ஆம் ஆண்டு எனக்குக் காதில் வலி ஏற்பட்டு, எந்த வைத்தியத்துக்கும் கட்டுப்படாமல் போய், பெரிய ஆபரேஷன் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

    பெரியவாளை தரிசனம் செய்யாமல், எப்படி ஆபரேஷனுக்குச் சம்மதிக்க முடியும்?

    எண்கணிதத்தின்படி, என் பகை எண், ஏழு.

    பெரியவாளுக்கு சமர்ப்பிக்க ஏழு ஆரஞ்சுப் பழங்களும் வில்வமாலையும் வாங்கிச் சென்றேன். பிற்பகல் இரண்டு மணி. பெரியவாள் மேனாவில் சாய்ந்து கொண்டிருந்தார்கள். பொதுப்படையாகச் சில கேள்விகளைக் கேட்டுக்கொண்டே, ஆரஞ்சுப் பழங்களை உரித்து உரித்து வைத்தார்கள். (என் தீவினைகளைத் தோலுரித்து விட்டார்கள் என்பதைப் பின்னால் புரிந்து கொண்டேன்).

    ஆபரேஷனுக்கு முதல் நாள் மருத்துவமனைக்குச் சென்றேன். டாக்டர் என்னை நன்றாகப் பரிசோதித்தார்.

    “உண்மையைச் சொல்லுங்கள். நான் கொடுத்த மருந்துகளைத் தவிர, வேறு எந்த மருந்துகளை உபயோகப்படுத்தினீர்கள்? வேறு எந்த டாக்டரிடம் போனீர்கள்?” என்று கேட்டார்.

    “நான் வேறு எந்த டாக்டரிடமும் போகவில்லை; எந்த மருந்தும் போடவில்லை”.

    “பயப்படாமல் சொல்லுங்கள். அந்த டாக்டர் கொடுத்த மருந்துகள் ரொம்ப effective-ஆக இருக்கின்றன. நான் அதைத் தெரிந்து கொண்டால், மற்றவர்களுக்கும் எழுதிக் கொடுப்பேனில்லையா?”

    “டாக்டர்! உண்மையைத்தான் சொல்கிறேன். இரண்டு நாள் முன்னர் காஞ்சிபுரம் சென்று மஹாஸ்வாமிகளைத் தரிசித்து, பிரார்த்தித்துக் கொண்டேன். அவ்வளவுதான்.”

    டாக்டரின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

    “உங்கள் காது நோய் குணமாகிவிட்டது. ஆபரேஷன் தேவையில்லை.”

    வீட்டுக்கு வந்ததும், மனைவி – குழந்தைகளுக்கு ஏற்பட்ட ஆனந்தத்தை விளக்க வார்த்தைகளே இல்லை.

    ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
    Source: Uma
Working...
X