Announcement

Collapse
No announcement yet.

வேதமு வேதாந்தமும் முரணானவையா?ம் - 1

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேதமு வேதாந்தமும் முரணானவையா?ம் - 1

    வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 1

    வேதத்தின் கர்மகாண்டத்தில் என்ன காரியங்களை எல்லாம் சொல்லியிருக்கிறதோ, அதை எல்லாம் இல்லாமல் பண்ணுவதாக இருக்கிறது அதே வேதத்தின் ஞானகாண்டமான உபநிஷத்து!கர்ம காண்டத்தில் தேவதைகளை உபாஸிக்கச் சொல்லி, அதற்கு ஏகப்பட்ட வழிபாட்டு முறைகளைக் கொடுத்துவிட்டு, இங்கே உபநிஷத்தில் அதே வேதம், "தேவ பூஜைபண்ணுகிறவன் அசடு, அவன் பசுவுக்கு ஸமானம்"என்று கேலி பண்ணுகிறது.

    இது இப்படி ரொம்பவும் விசித்ரமாக இருக்கிறது, ஒரே விதத்தின் ஆரம்பத்தில் என்ன இருக்கிறதோ, அதற்கு முழுக்க மாறாக அதன் முடிவு இருக்கிறது. ஒரு பக்கம் கர்ம மயமாகவும், இன்னொரு பக்கம் ஞான மயமாகவும் வித்யாஸமாக இருக்கிறது. இந்த வித்யாஸத்தினால், "வேதம்"என்றாலே கர்மகாண்டம் என்றும், "வேதாந்தம்"என்றால் ஞான காண்டமான உபநிஷத் என்றும் பிரித்து அர்த்தம் பண்ணிக்கொள்கிற அளவுக்கு ஆகியிருக்கிறது.

    வேதாந்தத்தைத்தான் கீதையில் பகவான் சொல்லியிருக்கிறார். அவரே அதே கீதையில் (கர்மகாண்டமான) வேதத்தைத் திட்டுத் திட்டு என்று திட்டுகிறார். புத்தரும், மஹாவீரரும்தான் முதலில் வேதத்தைத் திட்டினார்கள் என்று பொதுவில் சொல்கிறார்கள். இது சரியில்லை. ஸாக்ஷத் கிருஷ்ண பரமாத்மாதான் இவர்களுக்கு முந்தியே வேதத்தை நன்றாக வைதிருக்கிறார்.

    ஒரிடத்தில் (ll.42-45) "வேதமெல்லாம் ஸத்வ-ரஜோ-தமோ-குண ஸம்பந்தமானதுதான். இந்த முக்குணங்களையும் கடந்த நிலையை அடையவேண்டும்" என்று அர்ஜுனனிடம் சொல்கிறார். "காமாத்மாக்களாக ஸ்வர்க்கத்தில் ஆசை வைத்து, போகத்தையும் ஐச்வர்யத்தையுமே நினைத்து கொண்டு, இந்த வேத கர்மடர்கள் மறுபடி மறுபடி ஜன்மா எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஸமாதியில் உண்டாகிற நிச்சயமான புத்தி ஏற்படாது" என்றெல்லாம் நிந்திக்கிறார். இன்னோரிடத்தில் ( Xl -48) "வேத யக்ஞ அத்யயனங்களால் நான் அடையத் தக்கவனில்லை"என்கிறார்.

    வேதம்தான் ஸகல தர்மத்துக்கும் மூலம் என்று இத்தனை நேரம் நான் நீள நெடுக அளந்துவிட்டு, இப்போது இப்படிச் சொன்னால் முரணாக இருக்கும்! தீர விசாரித்துப் பார்த்தால், இதிலே முரணாக ஒன்றும் இல்லை என்று தெரியும். சாதாரணமாக நாம் இருக்கப்பட்ட நிலையில், முக்குணங்களையும் கடந்து மனஸை ஆடாமல் அசையாமல் நிறுத்தித் தியானம் பண்ணுவது, உபநிஷத்தில் சொல்கிற ஆத்மாவின் ஸத்ய நிலையைத் தெரிந்து கொள்வது என்றால், துளிக்கூட முடியாமல்தானே இருக்கிறது?அந்த நிலையில் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் வேத கர்மாநுஷ்டானங்கள் யாவும் இருக்கின்றன. லோகம் என்பது நிஜம் என்று நினைத்துக் கொண்டிருக்கிற வரையில், இதிலே நாம் க்ஷேமமாக இருப்பதற்காகத் தேவதைகளை உபாஸிக்கிறோம்.

    லோகம் நிஜம் என்று நினைப்பதால், அந்த லோகத்துக்கும் தேவர்களால் க்ஷேமத்தை உண்டு பண்ணுகிறோம். இந்த லோகம் மாதிரியே தேவலோகம் நிஜம், தேவதைகளும் நிஜம் என்று வைத்துக் கொண்டு அந்த தேவதைகளுக்கு உபகாரம் பண்ணி, அவர்களிடமிருந்து பிரத்யுபகாரமாகப் பல நன்மைகளை பெறுகிறோம். இந்த லோகத்தில் ஸந்தோஷமாக வாழ்க்கை நடத்துவது போலவே, தேவலோகத்துக்குப் போய் ஸ்வர்க்க போகங்களை அநுபவிக்க ஆசைப்படுகிறோம். இதெல்லாம் சரிதான். ஆனால் இதோடேயே நின்றுவிட்டால், முக்கியமான லக்ஷ்யத்தைக் கோட்டை விட்டதாக அல்லவா ஆகிவிடுகிறது? வாஸ்தவத்தில் நாம் பரமாத்மாவை சாச்வதமாகச் சேர்ந்திருப்பதுதானே லக்ஷ்யம்? அதை விட்டுவிட்டு, மற்றவற்றை மட்டும் பிடித்துக் கொண்டிருந்தால் அது அசட்டுத்தனந்தானே?

    நாம் இருக்கிற நிலையில் லோகத்தைப் பொய்யென்று நினைத்துக் கொள்ள முடியவில்லை என்பதால், 'சரி, மெய்யென்றுதான் வைத்துக் கொள்' என்று சொல்லி, லோக க்ஷேமத்துக்கான கர்மாக்களை வேதம் கொடுத்திருக்கிறது. நாம் உள்ள நிலையில் அரூபமான ஒரே பரமாத்மாவை அபேதமாக உபாஸிக்க முடியவில்லை என்பதால், அநேகம் தேவதைகளின் உபாஸனைகளை அது கொடுத்திருக்கிறது. ஆனால் இப்படிக் கர்மாவும் உபாஸனையும் பண்ணும் போதே, லோகமெல்லாம் அடிபட்டுப்போய், கர்மாவும் நின்று விடுகிற ஞானநிலை நமக்கு வர வேண்டும்;பல தேவதைகளை உபாஸிப்பதாக இல்லாமல், பரமாத்மாவுக்கு அன்னியமாக நாம் என்றே ஒன்று இல்லை என்று கரைகிற நிலை வரவேண்டும்.

    அதற்கு ஆரம்பப் படிகளாக சித்தசுத்தியும், மனஸின் ஐகாக்ரியமும் (ஒருமுனைப் பாடும்) ஏற்படுவதற்காகவே இந்த கர்மாக்களையும், உபாஸனைகளையும் வேதம் கொடுத்திருக்கிறது என்ற அறிவோடு பண்ண வேண்டும். அப்படியில்லாமல், வெறுமே லௌகிகமான க்ஷேமத்தை உண்டாக்கிக் கொள்வது, தேவதைகளிடம் கொடுக்கல் -வாங்கல் வியாபாரம் மாதிரி யக்ஞம் கொடுத்து நன்மை பெறுவது என்று இதோடேயே நிறுத்திக் கொண்டால், ஸத்ய ஸாக்ஷத்காரம் கிடைக்கவே கிடைக்காது. தேவலோகத்துக்குப் போனாலும், ஆத்மஸுகம் என்ற ஸத்ய ஸாக்ஷத்கார ஆனந்தம் அதில் கிடைக்காது. மேலும், தேவலோக வாஸமும் நம் புண்ணியம் தீர்ந்தவுடன் முடிந்து, நாம் மறுபடி பூலோகத்தில் கர்ப்ப வாஸம் பண்ணுவதற்காகத் திரும்பித்தானாக வேண்டும். ஒரு அளவுக்கு நம் இப்போதைய மனப்பான்மைக்கு விட்டுக்கொடுத்தும், நம்மை இன்றுள்ள நிலையிலிருந்தே சிறுகச் சிறுக ( gradual -ஆக) ப் பக்குவப்படுத்தவுமே கர்மாவும், உபாஸனையும் வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால், இதோடேயே நின்றுவிடுவேன், மேலே போக மாட்டேன் என்றால், அது தப்பு.

    Contd…Part 2…….
Working...
X