Announcement

Collapse
No announcement yet.

வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 4

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 4

    வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 4

    ஆனாலும் பிரமாணங்களில் ச்ருதிப் பிரமாணத்துக்குப் பிறகுதான் ஸ்மிருதி-புராணப் பிரமாணங்களைக் கொள்ள வேண்டும். கர்மா மட்டும் போதாது என்பதற்கு ச்ருதிப் பிரமாணமும் இருக்கிறது என்பதற்கு இங்கே பிருஹதாரண்யக உபநிஷத்தை quote செய்தேன். ஆனாலும் ச்ருதியை கர்மகாண்டம், ஞான காண்டம் என்று பிரிக்கிறபோது, இது ஞான காண்டமான உபநிஷத்தில் வருவதுதானே?ஞான காண்டத்தில் ஞானத்தைச் சிறப்பித்துச் சொல்லி, கர்மாலக்ஷ்யம் இல்லை என்று சொல்லியிருப்பதில் விசேஷம் ஒன்றுமில்லையே என்று கேட்கலாம்.

    ஆகையால் கர்ம காண்டத்திலேயே, கர்மாவே எல்லாம், அதுவே லக்ஷ்யம் என்று நினைப்பதைக் கண்டனம் பண்ணியிருக்கிறது என்பதையும் காட்டுகிறேன். வேதத்தில் சொல்லியிருக்கிற பல விதமான யக்ஞங்களையுமே அதன் நோக்கமறிந்து செய்வது சிலாக்கியந்தான் என்று பகவான் கீதையிலே "ஏவம் பஹ§விதா யக்ஞா விததா ப்ரஹ்மணோமுகே"என்று பாராட்டிச் சொல்லிவிட்டு, ஆனால் இந்த ஸகலவிதமான கர்மாநுஷ்டானங்களும் ஞானத்தில் தான் பூர்த்தியடைகின்றன -

    ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிஸமாப்யதே

    -என்றதை, வேதத்தின் கர்மகாண்டத்திலேயே ஒரு அழுத்தமான திருஷ்டாந்தத்தால் சொல்லியிருக்கிறது. "வெறும் கர்மாநுஷ்டானங்களை மாத்திரம் செய்து கொண்டு, ஈச்வரனை எவனொருவன் உணராமல் இருக்கிறானோ, அவன் நெருப்பிலே விறகைப் போட்டுப் புகையை மாத்திரம் எழுப்பிக் கொண்டிருக்கிறான். அவன் மூடன், அவன் ஆத்ம ஸ்வரூபத்தை ஒருநாளும் அறிந்து கொள்ளமாட்டான்"என்று ச்ருதியில் கர்மகாண்டத்திலேயே தைத்திரீய காடகத்தில் (முதல் ப்ரச்னம், கடைசி அநுவாகம், 4-ம் வாக்யம்) வருகிறது.

    விறகை மூட்டினால் அதன்மேல் வெண்கலப் பானையை வைத்துச் சாதம் வடிக்க வேண்டும். அப்படித் தன்னையே ஞானத்தில் பக்குவம் பண்ணிக்கொள்ளப் பிரயத்தனப்படாமல் ('பக்குவம்'என்றால் சமைக்கப்படுவது என்றே அர்த்தம். நமக்குள்ளே இப்படி முழுமை பெற்று, அரிசி சாதமாகிறாற்போல் நன்றாகக் குழைந்து விடுவதையும் 'பக்குவம்' என்று ஸம்ஸ்கிருதத்தில் சொல்கிறோம்) வெறுமே யக்ஞாதிகள் செய்கிறவன், வெண்கலப் பானையை ஏற்றாமலே அடுப்பை எரிய விடுகிறவன்தான். இப்படி வேதமே சொல்கிறது.

    யக்ஞத்திலே நெருப்பில் ஹவிஸைப் போடாமலே பெரிசாக அக்னியை வளர்த்து என்ன பிரயோஜனம்?புகை ஜாஸ்தியாவதுதான் பலன்!இநத மாதிரிதான் கர்ம பலனையே ஹவிஸாகப் போட்டு எரிக்கிற புத்தியோடு யக்ஞத்தைச் செய்யாவிடில், அது வெறும் புகையாகப் போய் விடுகிறது. "பிரம்மாக்னியில் ஆத்மாவை ஹவிஸாகத் தர வேண்டும். ஸம்யமம் என்ற புலனடக்க அக்னியில் இந்திரிய நுகர்ச்சிகளை ஹோமம் பண்ண வேண்டும்; பஞ்சப் பிராணன்களை ஒன்றிலொன்று ஹோமம் பண்ணவேண்டும்"என்றெல்லாம் பகவான் கீதையில் சொன்ன ஸ்திதிக்குப் போவதற்காகத்தான் திரவ்ய ரூபமான, காரிய ரூபமான வைதிக யக்ஞங்கள் எல்லாம் இருக்கின்றன.

    இதைத் தெரிந்து கொள்ளாமல் எத்தனை யக்ஞம் செய்தாலும் ஒருவன் கொஞ்சங்கூட புத்திசாலியே இல்லை;அவனுக்குப் புத்தியே இல்லை என்று வேதமும் சொல்கிறது. அவனுடைய புத்தி எங்கே போகும்?ஹோமப் புகை போலத்தான் அதுவும் போகிற இடமெல்லாம் கருப்பாகப் பண்ணிக் கொண்டு, கடைசியில் பிசுபிசுவென்று ஒன்றுமில்லாமலாகிவிடும்.

    வேத கர்மாவை ஈச்வரார்ப்பணம் பண்ணினால், அது கட்டுவதற்குப் பதில், கட்டிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக அவிழ்ந்துவிட ஆரம்பிக்கும். நிஷ்காம்யமாக, பகவத் பிரீதிக்காகவே கர்மாவைப் பண்ணப்பண்ண அது சித்தசுத்தியைத் தந்து, முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட ஸ்தானத்துக்கு அழைத்துக்கொண்டு போகும்.

    யக்ஞம் என்ற பெயர் இதைத்தான் குறிப்பிடுகிறது. இங்கிலீஷில் இதை sacrifice என்றுதானே சொல்கிறார்கள்?யாகம் என்றால் தியாகம் என்றுதான் அர்த்தம். "ந மம" ("எனதில்லை") என்று ஒன்றை நெருப்பிலே போடுகிற தியாக சித்தம்தான் யக்ஞத்தின் உயர்நிலை. நெருப்பிலே போட்டதை எடுக்க முடியுமா?எடுத்தாலும் அது க்ஷண காலத்தில் உருச் சிதைந்துதானே போகிறது?அந்த மாதிரி அஹங்கார மமகாரங்களை பஸ்மமாக்க வேண்டும். இப்படி உயர்ந்த அர்த்தத்தைக் கொடுக்கக்கூடியதான "யக்ஞம்"என்பதை, அதன் பேருக்கு நேர் விரோதமாக ஸ்வர்க்கப் பிராப்தி முதலான சொந்த லாபங்களுக்காக, அல்ப பலன்களுக்கா, ஒருத்தன் பண்ணினால் அவன் முட்டாள்தானே?

    கர்ம காண்டம், ஞான காண்டம் என்பனவற்றுக்குள் முரண்பாடு (contradiction) இல்லை. கர்மகாண்டத்திலேயே அநேக இடங்களில் கர்மாவின் லிமிடேஷனைச் சொல்லி, ஞானத்தையே விசேஷித்திருக்கிறது. ரொம்பவும் உயர்ந்த ஞானப் பிரதமான தத்துவங்களைச் சொல்கிற நாஸாதீய ஸ¨க்தம், புருஷ ஸ¨க்தம், திரயம்பக மந்திரம் முதலியவை வேதத்தின் ஸம்ஹிதா பாகத்திலேயே வருகின்றன. உபநிஷத்துக்களில் இல்லை. இதற்கு எதிர் வெட்டாக உபநிஷத்துக்களிலும் நாசிகேதாக்னி முதலான பல கர்மாக்களைச் சொல்லியிருக்கிறது. கர்மாநுஷ்டானங்களில் விசேஷமாகப் பிரயோகமாகிற மந்திரங்கள், தைத்திரீய உபநிஷத்திலிருந்தே கிடைக்கின்றன. ஒன்றுக்கொன்று விரோதமானது என்றால் இப்படியிருக்குமா?ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குப் போக வேண்டும் என்பதே தாத்பரியம்.

    Contd…Part 5…….

Working...
X