Announcement

Collapse
No announcement yet.

வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 5

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 5

    வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 5

    கர்மாவை ஈச்வரார்ப்பணமாகப் பண்ணினால், அதுவே ஞானத்துக்கு உபாயம் என்று ஸ்மிருதியான கீதையில் சொன்னதற்கு ஆதாரம் ச்ருதியான உபநிஷத்தில் இருக்கிறது. தசோபநிஷத்துக்கள் என்ற பத்தில், முதலாவதாக வைக்கப்பட்டிருக்கிற ஈசாவாஸ்யத்தில் இதைத்தான் எடுத்தவுடனேயே உபதேசித்திருக்கிறது. நூறு வருஷம் வேத கர்மாக்களைப் பண்ணிக் கொண்டிரு. ஆனாலும் ஈச்வரார்ப்பண புத்தியோடு பண்ணு. அப்போது அது உன்னைக் கட்டிப்போடாது என்கிறது. ஆகையால் உபநிஷத் என்றாலே inaction (காரியமில்லாமலிருப்பது) , கர்மாவுக்கு விரோதமானது என்று நினைத்தால் சரியில்லை.

    கர்மாதான் லக்ஷ்யம் என்று நினைத்துவிடக் கூடாது. லோக க்ஷேமத்தை உண்டு பண்ணுவதற்காகவும் சித்த சுத்திக்காகவும் தேவதைகளை உபாஸித்தாலும் அதோடு நின்று விடக்கூடாது. ஞானத்தை அடைந்து பரமாத்மாவைத் தவிர தான் என்று ஒன்றில்லை, லோகமென்று ஒன்று இல்லை. தேவதைகள் என்று வேறு இல்லை என்கிற நிலையை அடையவேண்டும். இந்த நிலையை அடைந்தால் வேதமும் வேதம் இல்லாமல் போய்விடும் என்று, அந்த வேதமே சொல்கிறது.

    வேதம் என்பது என்ன?பரமேச்வரன் போட்ட சட்டம். அந்த சட்டத்தைப் பிரஜைகளான சகல ஜனங்களும் மதித்து நடக்க வேண்டும். ஆனால் ஞானியாகி ஸதா ஸர்வகாலமும் பரமாதம ஸத்யத்திலே ஒருவன் உள்ளும் புறமும் ஊறியிருக்கிற போது, அவன் வேத சட்டத்தைப் பார்த்துப் பார்த்துக் காரியங்களைப் பண்ண வேண்டும் என்பதில்லை. அதனால்தான், வேதம் வேதமில்லாமல் போகிறது என்று சொல்லியிருக்கிறது. நாமும்தான் வேதத்தைச் சட்டமாக மதிக்கவில்லை. நமக்கும் வேதம் வேதமாக இல்லாமல் தானிருக்கிறது. ஆனால் ஞானம் என்றால் என்ன என்றுதான் நமக்கு வாஸனைக் கூடத் தெரியவில்லை.

    உபநிஷத்துக்கள் என்கிற பரவித்தையில் கொண்டு சேர்க்கிற உபாயமே கர்மகாண்டம் என்பதைத் தெரிந்து கொள்ளாவிட்டால், வேதமானது (அதாவது, அதன் கர்மகாண்டம்) மற்ற ஹிஸ்டரி, ஜாகரஃபி மாதிரி அபர வித்தையாகத்தான் (அதாவது லௌகிக அறிவு நூலாகத்தான்) நின்றுவிடும். முண்டக உபநிஷத்தில் (l.5) வேதத்தையும் அபரவித்தையோடு சேர்த்திருப்பதற்கு இதுதான் அர்த்தம். இம்மாதிரி தாற்காலிக சௌக்கியத்தோடு வேதத்தின் பயனை நிறுத்திக் கொண்டு விடுபவனை உபநிஷத் வெறும் பசுப்பிராயமானவன் என்றே சொல்லியிருக்கிறது.

    ஸகல தேவதைகளும் எதில் தோன்றியிருக்கின்றனவோ, அந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகி விடுகிற ஞானிக்கு அந்தத் தேவதைகளும் அந்நியமில்லை. பரமாத்மோவோடு பரமாத்மாவாக இவன் இரண்டறக் கலந்துவிட்ட பிறகு, தேவதைகளுங்கூட இவனுக்குள் இருக்கிறவர்களே. தேவதைகளை உபாஸிக்கிற காலத்திலேயே இவனுக்கு இது அநுபவத்தில வராவிட்டாலுங்கூட, நாம் வெளியே நமக்கு வேறாக தேவதை என்று ஒன்றை உபாஸனை பண்ணுகிறோமே, இதுவுங்கூட ஆத்மாவுக்கு அந்நியமானதில்லை என்ற எண்ணம் இருந்துகொண்டேயிருக்க வேண்டும்.

    வெளிக்காரியத்தில் பிரிந்து பிரிந்து வித்யாஸமாகத்தான் செய்ய வேண்டுமென்றாலும், இந்த வித்யாஸங்கள் எல்லாம் ஒடுங்கிப் போகிற ஒரே மூல தத்வத்தில் நாம் கடைசியிலே சேரவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும். இப்படியில்லாமல் எவனொருவன் தேவதையைத் தனக்கு முழுக்க வேறானது என்றே நினைத்து உபாஸித்திருக்கிறானோ, அவன் ஸத்தியத்தைத் தெரிந்து கொள்ளாதவன், அவன் தேவர்களுக்குப் பசு மாதிரியானவன் என்று பிருஹதாரண்ய உபநிஷத்தில் (l.4.10) சொல்லியிருக்கிறது.

    பசு என்று சொன்னதற்கு நிரம்ப அர்த்தமுண்டு. மநுஷ்யனுக்கு உள்ள ஆறாவது அறிவு இல்லாமல், வெறும் மிருகப் பிராயமாக இருப்பவன் என்பது மேலேழுந்தவாரியான அர்த்தம். உள்ளர்த்தத்தைச் சொல்கிறேன். நாம் எதற்குப் பசுவைப் போஷிக்கிறோம்?அது நமக்குப் பால் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். நமக்கு அது க்ஷீரத்தைக் கொடுக்கிறது என்பதற்காகத்தான் நாம் அதற்குப் புல்லும், வைக்கோலும், புண்ணாக்கும், பருத்திக் கொட்டையும் போடுகிறோம். இதே மாதிரி நாம் யக்ஞத்தில் ஹவிஸ்ஸுகளை ஹோமம் கொடுத்து தேவதைகளுக்குப் பிரீதியைச் செய்கிறோம். இப்படி நாம் செய்வதற்குப் பிரதியாகத்தான், அவர்கள் நமக்கு மழை, தான்ய விருத்தி முதலான பல அநுக்ரஹங்களைச் செய்கிறார்கள்.

    நாம் முன்னேயே சொன்ன மாதிரி இந்தத் தேவதைகள் மநுஷ்ய இனத்தைவிட உயர்ந்தவர்களானாலும், இவர்களும் நிறைந்த நிறைவான ஆனந்தத்தை அடைந்தவர்கள் இல்லை. மநுஷ்ய ஜன்மா எடுத்தே ஞானியாக ஆகிவிட்ட ஒருவன் அடைகிற பிரம்மானந்தத்தில் லக்ஷத்தில் ஒரு பங்கு கூட தேவர்களுக்குக் கிடையாது.

    Contd…Part 6…….

    Source; subadra
Working...
X