Announcement

Collapse
No announcement yet.

வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 7

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 7

    வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 7

    வைதிக மார்க்கத்தை அநுஸரித்து உபநிஷத் வாயிலாக ஞானியாக ஆன ஒருவன், தேவதைகளைப் பண்ணும் யக்ஞத்தை விட்டு விடுவதால் அவன் தேவர்களுக்குப் பிரியமில்லாதவனாகி விடுகிறானென்றால் , பௌத்தத்திலோ யாருமே யக்ஞம் பண்ணக் கூடாதாகையால், அவர்கள் எல்லோரையுமே தேவருக்குப் பிரியமாகாதவர்களாகத்தான் சொல்ல வேண்டும். ஆனாலும், "அவைதிக பௌத்தத்தை விசேஷமாக ஆதரித்த அசோகனை, தேவானாம் ப்ரிய என்று சொல்லியிருக்கிறதே, ஏன்?என்றால், அவன் வேதாந்தத்தின்படியான ஞானத்தை அடைந்து, தேவர்களுக்கு அப்பிரியமாக ஆகமாட்டான் என்பதை மட்டும் நினைத்து, இப்படிச் சூசகமாகப் பெயர் கொடுத்த மாதிரி இருக்கிறது.

    அதாவது நல்ல புத்தி சாதுர்யமுள்ளவனாகவும், தேவர்களுக்குப் பிரீதியாக உள்ள யக்ஞ கர்மாக்களைப் பண்ணாதவனாகவும் ஒருவன் அவைதிக பௌத்தம் போன்ற மதத்தில் இருந்தாலும் கூட, அவன் வேதாந்தம் சொல்லுகிறபடி ஞானியாக மாட்டான் என்ற அளவில், அவனையும் தேவானாம் ப்ரியன் என்று சொல்லுகிற வழக்கம் வந்திருக்கலாம்.

    அல்லது, விஷயம் தெரியாத சில்பியோ ராஜாங்க அதிகாரியோ, தேவானாம் ப்ரியன் என்றால் நல்ல பேராக, நல்ல அர்த்தமாகத் தெரிகிறதே என்று நினைத்து சாஸனத்தில் அப்படி வெட்டியிருக்கலாம்.
    தேவானாம் ப்ரியனாக யக்ஞம் பண்ணிக் கொண்டிருப்பவன் ஞானியாக ஆகிக் கர்மாநுஷ்டானத்தை விட்டுவிட்டால் நமக்கு ஒன்றும் கிடைக்காதே என்று தேவதைகள் பிரதிபந்தங்கள் (இடையூறுகள்) செய்வார்கள். ரிஷிகளின் தபஸைக் கலைப்பதற்கு ரம்பை, மேனகை முதலியவர்களை அனுப்புவார்கள் என்று புராணங்களில் பார்க்கிறோம்.


    ஞானியாகும்வரையில் மனிதன் தேவதைகளுக்குரிய கர்மாக்களைச் செய்து கொண்டிருக்கிறான். அதற்காக, அவர்கள் மனிதனுக்கு நல்லது பண்ணுகிறார்கள். மழை பெய்யச் செய்கிறார்கள். அதற்காக ஹவிர்பாகம் கொடுக்க வேண்டும். நமக்கு இந்த உலகத்தில் ஒருவர் ஒர் உபகாரம் செய்தால் பிரதி உபகாரம் செய்ய வேண்டுமல்லவா?அதைப்போல மழைக்கும் செய்யவேண்டும். அதற்காகத்தான் யக்ஞம் செய்கிறோம். யாராவது ஒரு பிராம்மணர் தேவதைகளுக்கு ஹவிர்பாகம் கொடுக்கிறார். அவர் எல்லோருக்கும் பிரிதிநிதியாக இருந்து கொடுக்கிறார். யாராவது ஒருவர் வரி கொடுப்பதைப் போல் அவர் கொடுக்கிறார்.

    ஆகவே ஞானியாகும் வரைக்கும் மனிதன் தேவதைகளுக்குப் பிரியமான கர்மாக்களைச் செய்து அவர்களுக்குப் பிரியமானவனாக இருக்கிறான். மாடு கறந்து பால் பெற்றுக் கொள்வது போலத் தேவர்கள் அவன் மூலம் லாபத்தை அடைகிறார்கள்.

    மாடு கறப்பது இல்லையானால், அந்த மாட்டால் மனிதனுக்கு என்ன பிரயோஜனம்?அதுபோல மனிதன் பசுவைப் போல இருக்கிறவரையிலும் தேவதைகள் அவன் மேல் பிரியமாக இருப்பார்கள்;பசுவாயில்லாமற்போனால் வெறுப்பார்கள்;உபத்திரவப் படுத்துவார்கள். அதாவது இரண்டு அர்த்தப்படியும் மனிதன் தேவதைகளுக்குப் பசுவாக இருக்கிறான்.

    அறிவில்லாதவன் என்ற அர்த்தத்தில் மாடு மாதிரி இருப்பதால்;கறவை நின்ற பசுவை நாம் ரக்ஷிக்காத மாதிரி கர்மாவை நிறுத்தினவனைத் தேவர்கள் ரக்ஷிக்காமல் விடுவதாலும் பசு மாதிரி.

    தேவதை தனக்கு வேறல்ல என்று அறிவதே ஞானம். அதற்குத்தான் வேதாந்தம் வழி சொல்லிக் கொடுக்கிறது. கர்மாவும் தேவதா உபாஸனையுங்கூட நின்று போய், அனைத்தும் தானாகிவிடுகிற நிறைந்த நிலைக்கு வழி சொல்கிறது. அந்த வேதாந்தத்துக்கு நம் தேசத்தில் எத்தனை கௌரவம் இருந்திருக்கிறது என்பதற்கு ஒரு பெரிய அத்தாட்சி சொல்கிறேன்.


    அனந்தமாக இருந்த வேதங்களில் ரிஷிகள் பிடித்துக் கொடுத்ததே ஒரளவுதான். ஆனால் அதுவுங்கூட கலிகால அற்பசக்தர்களால் அப்பியஸிக்க முடியாதது என்பதால், 1180 சாகைகளாகப் (கிளைகளாக) பிரித்து, இதில் ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யகம், முடிவிலே உபநிஷத் என்று வைத்து, இதில் ஒன்றையாவது ஒருத்தன் அத்யயனம் பண்ணவேண்டும் என்று வைத்தார்கள். பிற்காலத்தில், இதிலும் அநேகம் வழிக்கொழுந்து போய்விட்டன. பாக்கியையும் தீர்த்துக்கட்டிவிடுகிற நிலைமைக்கு இந்தத் தலைமுறையைச் சேர்ந்த நாம் புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

    அது இருக்கட்டும் நான் சொல்ல வந்தது, ஒவ்வொரு சாகையிலும் ஒரு உபநிஷத் இருக்கிறது. அம்மாதிரி, இப்போது பூர்ணமாக உள்ள சாகைகளில் இருக்கிற உபநிஷத்துக்களோடுத் தற்போது பிரசாரத்தில் வேறு பல உபநிஷத்துக்களும் இருக்கின்றன. இந்த உபநிஷத்துக்கள் எந்தச் சாகையைச் சேர்ந்தனவோ, அந்தச் சாகையில் ஸம்ஹிதை, பிராம்மண் முதலிய பாகங்கள் தற்போது அத்யயனம் செய்யப்படவில்லை. அவற்றில் பலவற்றின் டெக்ஸ்ட் கூட நமக்கு அகப்படவில்லை. ஆனாலும் அவற்றை சேர்ந்த அந்த உபநிஷத்துக்கள் மட்டும் இன்று வரை அழியாமல் வந்திருக்கின்றன.

    உதாரணமாக ரிக் வேதத்தில் சாங்காயன சாகை என்பதன் ஸம்ஹிதா பாகம் இப்போது அத்யயனத்தில் இல்லை;அதை இழந்து விட்டோம். ஆனாலும் அந்த சாகையின் முடிவிலே வருகிற கௌஷீதகீ உபநிஷத் மட்டும் இன்றைக்கும் நம்மிடையே ஜீவனோடு இருந்து வருகிறது. ரிக் வேதத்திலேயே பாஷ்கல மந்த்ரோபநிஷத்து என்று ஒன்று நமக்கு வந்திருக்கிறது. அடையாறு லைப்ரரியில் இதன் சுவடிகள் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இது எந்தச் சாகையின் முடிவில் வருகிறதோ, அந்த "பாஷ்கல சாகை" என்பதன் ஸம்ஹிதையைப் பற்றியோ பிராம்மணத்தைப் பற்றியோ நமக்கு ஒன்றும் தெரியவில்லை. கடோபநிஷத் என்பது கிருஷ்ண யஜுர் வேதத்தில் கடசாகை என்பதைச் சேர்ந்தது.

    உபநிஷத் என்பது ஆரண்யகத்தின் கடைசியில் வருவது என்று முன்பே சொன்னேனல்லவா?ஆனால் இன்றைக்குக் கடைபநிஷத்து மிகவும் பிரஸித்தமாக, தசோபநிஷத்துக்க்ளிலேயே ஒன்றாக இருந்த போதிலும், இதற்கான ஆரண்யகம் நமக்குக் கிடைக்கவில்லை. அதர்வ அத்யயனம் வட இந்தியாவில் சில பாகங்களில் கொஞ்சம் மூச்சைப் பிடித்துக் கொண்டிருப்பது தவிர, தக்ஷிண தேசத்தில் அடியோடு மறைந்து போய்விட்டிருக்கிறது. ஆனாலும், பத்து உபநிஷத்துக்களில் மூன்று ('ப்ரச்னம்', 'முண்டகம்', 'மாண்டூக்யம்') அதர்வ வேதத்தைச் சேர்ந்தவைகளாகவே இருக்கின்றன.

    அதாவது கர்மாக்களுக்குப் பிரதானமாக இருக்கிற சாகா (சாகையின்) பாகங்கள் மறைந்து போகும்படி விட்டுவிட்டாலும், தத்வத்தை மட்டும் விடக்கூடாது என்று, நம் தேசத்தில் இப்படி ஞான உபாயமான உபநிஷத்துக்கள் பலவற்றை விசேஷமாகக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.

    உபநிஷத்துக்கள் ஏகப்பட்டன இருந்திருக்கின்றன. இருநூறு வருஷங்களுக்கு முன் காஞ்சீபுரத்திலே இருந்த ஒரு யதிகள் 108 உபநிஷத்துக்களுக்கு பாஷ்யம் எழுதியிருக்கிறார். அவருக்கு உபநிஷத் பிரம்மேந்திராள் என்றே பேர் ஏற்பட்டுவிட்டது. இன்னமும் அங்கே அவர்களுடைய மடம் இருக்கிறது.


    Jaya Jaya Shankara Hara Hara Shankara

    Source: subadra
Working...
X