காஞ்சிப்பெரியவர் பக்தர்களுக்கு ஆசியளிக்கும் போது, நகைச்சுவையாக பேசுவதும் உண்டு.

ஒரு சமயம், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடந்து கொண்டிருந்தது. அதில் தினமும் வித்வான்கள் பாடுவர்.விழாவின் ஒருநாள் மாலையில், பெரியவரை தரிசிக்க பக்தர் ஒருவர் வந்தார். எழுத்தாளரான அவர், தன் புத்தகங்களை பெரியவரிடம் காட்டி விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். பக்தர்கள் பலர் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களைக் கண்டதும் பெரியவர் எழுத்தாளரிடம், ""இப்போது நீ காமாட்சியம்மனைத் தரிசித்து விட்டு வா. அங்கு தர்பார் நடக்கிறது. சீக்கிரம் முடிந்து விடும், வேகமாகச் செல்,'' என்றார்.

எழுத்தாளர் சென்றபோது, அம்மன் தர்பார் அலங்காரத்தில் இல்லாமல் வேறு அலங்காரத்தில் காட்சியளித்தாள்.

""பெரியவர் "தர்பார் அலங்காரம்' என்று சொன்னாரே!. இங்கு வேறு அலங்காரத்தில் அம்பாள் இருக்கிறாளே!'' என்று குழப்பமடைந்தார்.

அப்போது, இனிய கானம் காற்றில் மிதந்து வந்தது. தர்பார் ராகத்தில், ""லோசனா.. கமல லோசனா'' என்று பிரபல பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிக்கொண்டிருந்தார்.

""அடடா..நாமோ தர்பார் அலங்காரம் என்று நினைத்து வந்தோம். இங்கே தர்பார் ராக பாடல் அல்லவா பாடப்படுகிறது! பெரியவர் சொன்னதை இப்படி புரிந்து கொண்டோமே! அவருடைய நகைச்சுவை உணர்வு தான் என்னே!'' என்று சிரித்தபடியே, மற்றவர்களிடமும் இந்த நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

மற்றவர்களும் இதுகேட்டு சிரிக்க, ""அது சரி...தர்பார் ராகத்தில் எம்.எஸ்., பாடுவார் என்பது முன்கூட்டியே எப்படி பெரியவருக்குத் தெரிந்தது! முக்காலமும் உணர்ந்த ஞானி என்று சொல்வது இதனால் தானோ என்று பரவசமும் அடைந்தனர்.

-"நீலக்கல்' ராமச்சந்திர சாஸ்திரிகள்
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends