மனிதர்களாகிய நாம், நம் நாக்குக்கு அடிமை, உணவின் சுவைக்கு அடிமை. மனக் கட்டுப்பாடு இல்லாது, நாவை அடக்க முடியாமல் கண்ட உணவுகளை உட்கொண்டு நம்மில் எத்தனையோ பேர் எப்படிப்பட்ட நோய்களை எல்லாம் சம்பாதித்துக் கொள்கிறோம்? எந்த நேரத்தில் என்ன உணவு எடுத்துக் கொள்வது என்பது பற்றி நம்மில் எத்தனைப பேர் தெரிந்து இருக்கிறோம்? ஒரு இரவு விருந்துக்கு செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த விருந்துக்கு எவ்வாறு நமது மனதை மற்றும் வயிற்றை தயார் செய்ய வேண்டும், என்பது நமக்கு தெரியுமா? மூன்று வேளையும் உணவகங்களிலேயே சாப்பிட வேண்டி இருப்பவர்கள் எந்த வகையான உணவு முறைகளை கையாண்டால் அவர்களின் உடல் நலத்திற்கு நல்லது என்பது பற்றி நம்மில் யாருக்கேனும் தெரியுமா? இந்த மாதிரியான கேள்விகளுக்கு எளிய முறையில் விளக்கம் தருவதுதான் இந்த தொடர்க் கட்டுரையின் நோக்கம்.

முதலில், நகரங்களில் குறிப்பாக எழில்மிகு சென்னையில் கல்வியின் நிமித்தம், பணியின் நிமித்தம் வசிக்கும் வேற்றூர்காரர்கள் மூன்று வேளையும் சாதாரண உணவகங்களிலும், துரித உணவகங்களிலும் சாப்பிட்டாக வேண்டிய இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்கள் எந்த மாதிரியான உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றி கொஞ்சம் விரிவாகக் காண்போம்.
உணவு முறைக்குப் போவதற்கு முன், சில விதிமுறைகளை நீங்கள் தினமும் கடைபிடிக்க வேண்டியது அவசியம். முதலில், உணவு உட்கொள்ளுதலை நேரந்தவறாது கடைபிடிக்க வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளை தினமும் நேரம் தவறாமல் சாப்பிடுதல் மிகவும் நல்லது. காலையில் எப்பொழுதுமே சாப்பிடாமல் இருப்பது, காபி மற்றும் ஒரு சமோசாவோ அல்லது ஒரு சிகரெட்டோ புகைத்துவிட்டு, நேரடியாக மதிய உணவுக்கு செல்வது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் காபி குடித்தே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளவர்கள் காபி குடித்துக் கொள்ளுங்கள். நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் காபி மற்றும் டீயைக் குறைவாக உட்கொள்வது நல்லது. காலை எட்டு முப்பது மணிக்குள் மூன்று இட்லிகளைச் சாப்பிடலாம். இட்லிகள் சற்று சூடாக இருக்கும்போதே சாப்பிடுவது சாலச் சிறந்தது. பிறகு, பதினோரு மணி வரை உண்ணா நிலையை கண்டிப்பாக கடைபிடியுங்கள். நொறுக்குத் தீனிகளைப் பற்றி நினைக்காமல் இருங்கள். பதினோரு மணிக்கு ஒரு பழச்சாறு தாரளாமாக அருந்துங்கள்.

இதில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழச்சாறு அருந்தாமல் திடமான உணவாக ஒரு ஆப்பிள் பழம் அல்லது ஒரு மாதுளம் பழம் சாப்பிடலாம் அல்லது பல பழவகைக் கூழ் (சாலட்) கொஞ்சம் சாப்பிடலாம் அல்லது காய்கறி நிரம்பிய சாண்ட்விச் சாப்பிடலாம். மதியம் ஒரு மணியளவில் ஒரு கப் சாதம், கீரை மற்றும் இரண்டு காய்கறிகள் மற்றும் கொஞ்சம் மோருடன் கிடைக்குமென்றால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான். கூடவே ஒரு வேகவைத்த முட்டையை [ மஞ்சள் கரு தவிர்த்து ] தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.


சரி, அப்படியே அரைத் தூக்கத்தில் கொஞ்சம் வேலை செய்து முடிக்கிறீர்கள். மாலை நான்கு மணியாகிறது. வயிற்றுக்குள் சின்னதாக ஒரு அலாரம் அடிக்கிறது. கொஞ்சம் காரமாக ஏதாவது உள்ளே தள்ளினால் நன்றாக இருக்குமே என்று மனம் விரும்பும். இப்போது தான் நீங்கள் கடினமான சில முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறது. தக்காளி சட்னியுடன் இரண்டு வாழைக்காய் பஜ்ஜியை உள்ளே தள்ளினால் என்ன? என்று மனது விரும்பும். தயவுசெய்து மக்களே!! பேராசைப்பட்டு பலகாரம் என்ற அந்த படுகுழியில் விழாதீர். எண்ணை ஆகாரங்களை மனோதிடத்துடன் புறந்தள்ளுங்கள். நான்கு மணிக்கு ஒரு டீயை, தரமான இரண்டு ரொட்டி (பிஸ்கட்) கொண்டு குடியுங்கள். அதோடு உங்களது மாலைப்பொழுது செவ்வனே முடியட்டும்.
பின்பு, இரவுச்சாப்பாடு. குண்டான இரண்டு தோசைகள் (அ) மூன்று சப்பாத்திகள் (அ) மூன்று இட்லிகள் போதும். அதுவும் எட்டு மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். குறைந்த பட்சம் பத்து மணிக்குள் படுக்கைக்குச் செல்லுங்கள். பசிப்பது போல் தோன்றினால் ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்.
இந்த முழு நாளில் நீங்கள் குறைந்தது ஆறு முதல் எட்டு லிட்டர் வரை தண்ணீர் குடித்திருக்க வேண்டும். நன்கு காய்ச்சிய நீராக இருத்தல் மிகவும் நல்லது. மேற்சொன்ன உணவு முறைகள் திடகாத்திரமான ஒரு இளைஞனின் தினசரி உணவுமுறையினை மனதில் கொண்டு எழுதப்பட்டது. இந்த சொற்ப உணவுக்கு இடையே கடுமையான பசியையோ அல்லது சோர்வையோ நீங்கள் உணர்ந்தால், அப்படி எப்போது உணர்கிறீர்களோ, அப்போது ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு பசியைத் தள்ளிப் போடுங்கள். கடுமையான பசியோடு எப்போதும் சாப்பாட்டை அணுகாதீர்கள். அதிகமாய் சாப்பிடவே அது வழிவகுக்கும்.


ஒரு கடுமையான விதிமுறையைச் சொல்ல மறந்துவிட்டேன். தொடர்ந்து மூன்று வேளையும் வெளியே சாப்பிட வேண்டிய அவசியம் உள்ளவர்கள் அசைவ உணவை உணவகங்களில் சாப்பிடுவதைதத் தயவுசெய்து தவிர்க்கவும். அது காரைக்குடியாக இருக்கலாம். பரமக்குடியாக இருக்கலாம். உங்கள் நண்பர் வைக்கும் வாரந்தர (இரண்டாந்தர) விருந்தாகவோ கூட இருக்கலாம். ஒரு ஜென்னுக்குரிய புன்னகையுடன் அதை மறுத்துவிடுங்கள். அசைவ உணவை வீட்டில் சமைத்துச் சாப்பிட முடிந்தால் மட்டும் உண்ணுங்கள்.
இந்த புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை பற்றி எழுதாமல் இந்த கட்டுரையை முடிப்பது அநீதி. புகைப்பிடிப்பதால் பசித்தல் மிகவும் குறைந்து போகும். இதனால் ஆகார நேரம் மாறுபடும். ஓட்டல்களில் சாப்பிடவேண்டுமே என்ற வெறுப்பினாலேயே சாப்பிடுவதைப் புகைப்பிடிப்பவர்கள் தள்ளிப் போடுவார்கள். இதனால் வயிற்றுப்புண் ஏற்பட்டு வயிற்றுவலித் தொல்லை வரும் வாய்ப்பு அதிகம். அதனால் புகை மற்றும் குடியை அறவே விட்டொழியுங்கள்(!!!).

Source: harikrishnamurthy

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends