வேதம் தசோபநிஷத்துக்கள் _ Part 1

"தசோபநிஷத்"என்ற பத்தைப் பொறுக்கி ஸ்ரீ சங்கர பகவத் பாதாள் அத்வைத பரமாக பாஷ்யம் பண்ணினார். பின்னால் வந்த விசிஷ்டாத்வைதம், த்வைதம் முதலியவற்றை சேர்ந்த பெரியவர்களும் இதே பத்துக்குத் தங்கள் தங்கள் ஸித்தாந்தப் பிரகாரம் பாஷ்யம் செய்தார்கள். இந்த பத்தையும் சுலபமாக ஞாபகத்தில வைத்துக் கொள்வதற்காகப் பெயர்களை ஒரு ச்லோக ரூபத்தில் கோத்துச் செல்வதுண்டு.

ஈச-கேன -கட-ப்ரச்ன -முண்ட-மாண்டூக்ய-தித்திரி|
ஐதரேயம் ச சாந்தோக்யம் ப்ருஹதாரண்யகம் தச||


ச்லோகத்தில் சொல்லியிருக்கிற order (வரிசைக் கிரமப்) படித்தான் ஆசார்யர்கள் பாஷ்யம் பண்ணியிருக்கிறார்கள்.

இதிலே ஈசம் என்பது ஈசாவாஸ்ய உபநிஷத். அது சுக்ல யஜுர் வேதத்தில் ஸம்ஹிதையிலே முடிவாக வருவது. "ஈசாவாஸ்யம்" என்ற வார்த்தையோடு ஆரம்பிப்பதால் இந்த உபநிஷத்துக்கு இப்படிப் பெயர். "கேன"என்று ஆரம்பிக்கும் அடுத்த உபநிஷத்துக்கு "கேனோபநிஷத்"என்றே பேர். ஈச்வரனால்தான் இந்த லோகம் முழுக்கவும் வியாபிக்கப்பட்டிருக்கிறது. அவனுக்கே கர்மாக்களை அர்ப்பணம் பண்ணிப் பரமாத்ம தத்வத்தை நாம் அடைய வேண்டும் என்று ஈசாவாஸ்யோபநிஷத்து கூறுகிறது.

மரயானைப் பொம்மையைப் பார்த்தால் குழந்தை அது யானை என்றே எண்ணுகிறது. பெரியவர்களுக்கு அது யானை மாதிரி இருந்தாலும் மரம்தான் என்று தெரிகிறது. குழந்தைக்கு மரம் மறைந்து யானை தெரிகிறது. பெரியவர்களுக்கு யானை மறைந்து மரம் தெரிகிறது. இப்படியே பார் (உலகம்) முதலாக பஞ்ச பூதங்களும் பரமாத்மா என்ற மரத்தால் பண்ணின பொம்மைதான். பரமாத்மாதான் இத்தனையும் என்று நாம் பார்க்கவேண்டும்.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்

என்று திருமூலர் சொன்னபடி, பஞ்ச பூதங்களையே பார்த்துக்கொண்டு, அதன் காரணமான பரமாத்மாவை மறந்திருப்பதை விட்டு, இவற்றால் பரமாத்மா மறைந்துப்போகவிடாமல், இவற்றிலும் வியாபித்திருப்பது பரமாத்மாதான் என்று, அனைத்தையும் ஈச்வர வியாபகமாகப் பார்க்க வேண்டும். திருமூலர் சொன்னதையே அச்சடித்தாற்போல் "தந்தினி தாரு விகாரே" - மதத்தின் மாற்று ரூபத்தில் யானை - என்று ஆசார்யாள் சொல்கிறார். இவற்றில் எது முந்தி, எது பிந்தி என்ற வாதத்துக்கு நான் வரவில்லை. மஹா புருஷர்களுக்கு ஒரே மாதிரித்தான் தோன்றும்.

கேனம் என்பது கேனோபநிஷத். அது ஸாம வேதத்தில் ஜைமினி சாகையில், தலவகார பிராம்மணக்கில் வருவதால் தலவகார உபநிஷத் என்றும் சொல்வதுண்டு கெட்டதைக் கேனத்தில் தேடு என்று வசனம் இருக்கிறது. அடிமுடி தெரியாத பரம்பொருளை, அஹம்பாவம் பிடித்த தேவர்கள் தெரிந்து கொள்ள முடியாமல் தேடினபோது, ஸாக்ஷத் அம்பிகையே தேவேந்திரனுக்கு ஞானோபதேசம் செய்ததை இந்த உபநிஷத் சொல்கிறது. நம்முடைய சகல சக்திகளும் ஒரே மஹாசக்தியிடமிருந்து வந்ததுதான் என்று ஸாக்ஷத் பராசக்தியே உபதேசிக்கிறாள்.

இதற்கு ஸ்ரீ பகவத்பாதாள் மற்ற உபநிஷத்துக்களுக்கு பாஷ்யம் செய்த மாதிரிப் பதம் பதமாக எடுத்துக்கொண்டு பாஷ்யம் செய்ததோடு நிற்காமல், வாக்கியம் வாக்கியமாகவும் எடுத்துக் கொண்டு இன்னொரு பாஷ்யம் செய்ததோடு நிற்காமல், வாக்கியம் வாக்கியமாகவும் எடுத்துக் கொண்டு இன்னொரு பாஷ்யம் செய்திருக்கிறார். அதாவது இந்த உபநிஷத்து ஆசார்யாளின் இரட்டை பாஷ்யத்தைப் பெற்றிருக்கிறது. ஸெளந்தர்ய லஹரியிலும் ஆசார்யாள் இந்த உபநிஷத்தை முக்கியமாக நினைத்துக் கொண்டே, "வேத மாதாவின்சிரஸில் வைக்கப்பட்ட உன் திருவடிகளை என் தலை மேலும் வையம்மா"என்று அம்பாளை பிரார்த்தனை பண்ணுகிறார்.

வேதாந்தம் என்ற மாதிரியே வேத சிரஸ், ச்ருதி சிரஸ் என்ற பெயரும் உபநிஷத்துக்களுக்கு உண்டு. சிரஸ் என்றால் தலை. முடி என்றும் தமிழில் சொல்கிறோம். வேதத்தின் அந்தமாக, முடிவாக இருப்பதோடு அதன் சிரஸான முடியாகவும் இருப்பவை உபநிஷத்துக்களே. வேத மாதாவின் சிரஸில் அம்பாள் பாதம் இருக்கிறது என்றால், அது உபநிஷத்தில் இருக்கிறது என்றே அர்த்தம். இந்தக் கேனோபநிஷத்தில்தான் அம்பாள் ஞானாம்பிகையாக வருகிறாள். " ஸாமகான ப்ரியா " என்று லலிதா ஸஹஸ்ர நாமத்தில் அவளுக்கு ஒரு பெயர் சொன்னதற்கு ஏற்றாற்போல், இந்த ஸாமவேத உபநிஷத்தில் அவளுடைய பெருமை விசேஷமாகத் தெரிகிறது.

ஒரு வஸ்துவை நாம் பார்க்கிறோம் என்றால், பார்க்கப் படுகிற object என்றும், பார்க்கிறவனான subject என்றும் இரண்டு ஏற்பட்டுவிடுகின்றன. நம் உடம்பை நம்மால் object -ஆகத் தெரிந்து கொள்ள முடிகிறது. "என் உடம்பு நன்றாயிருக்கிறது;அல்லது நன்றாக இல்லை"என்று நாம் அதைப்ப பற்றித் தெரிந்து கொள்கிறோம் என்றால், அப்போது அது object - ஆகி விடுகிறது. அதிலிருந்து வேறாக, 'நாம்'என்ற ஏதோ ஒன்று Subject - ஆக இருந்து கொண்டு, அதைப் பார்க்கிறது என்று ஏற்படுகிறது. அப்படிப் பார்ப்பது எதுவோ அதுதான் ஆத்மா. இந்த Subject -ஐ எதனாலும் தெரிந்து கொள்ள முடியாது.

Contd2
source: subadra