தசோபநிஷத்துக்கள் _ Part 7

உபதேசம் ஒன்றேயானாலும், சிஷ்யர்களின் பக்குவத்தைப் பொறுத்தே ஒவ்வொருவரும் அதனால் பிரயோஜனம் அடைகிறார்கள் என்பதை இன்னொரு கதை காட்டுகிறது. தேவராஜாவான இந்திரன், அசுர ராஜாவான விரோசனன் இரண்டு பேருக்கும் பிரஜாபதியானவர், "கண்ணினால் எவன் பார்க்கிறானோ அவனே ஆத்மா"என்று ஒரே உபதேசத்தைச் செய்கிறார்.

கண், அறிவு முதலான எல்லாவற்றுக்கும் பின், அவற்றுக்கு ஆதாரமாக இருக்கிற வஸ்துவை அவர் இப்படி மறைமுகமாக குறிப்பிட்டார். ஆனால் இதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் இருவரும் தங்களைத் தாங்களே கண்களால் பார்த்துக் கொள்ளும்படியாகத் தோன்றும் தங்களுடைய பிரதிபிம்பங்களையே ஆத்மா என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள்.

பிரதிபிம்பத்தில் சரீரம் தானே தெரிகிறது?அதனால் சரீரமே ஆத்மா என்று விரோசனன் முடிவாகத் தீர்மானம் பண்ணி விடுகிறான். அதிலிருந்து நாஸ்திகவாதம், லோகாயதம், materialism என்றெல்லாம் சொல்வது அசுரர்களின் கொள்கையாகி விடுகிறது. இந்திரனும் முதலில் இப்படித் தப்பாக நினைத்தாலும், அப்புறம் (தைத்ரீயத்திலே வருகிற) பிருகு அன்னமய கோசத்திலிருந்து ஒவ்வொன்றாகத் தாமே பரீக்ஷித்துப் பரீக்ஷித்து ஆனந்தமய கோசத்துக்குப் போன மாதிரி, இங்கே இந்திரனும் ஸ்தூல தேகத்திலிருந்து ஸக்ஷ்ம தேகமான ஸ்வப்ன சரீரம், அப்புறம் ஸ்வப்னமும் இல்லாமல் ஆழ்ந்து தூங்குகிற காரண சரீரம் முதலியவற்றை ஆராய்ந்து கொண்டே போய், மாண்டூக்யோபநிஷத்தில் சொன்ன துரீயம்தான் ஆத்மா என்று தெரிந்து கொள்கிறான்.

பிருஹதாரண்யக உபநிஷத்து எல்லாவற்றுக்கும் கடைசியில் வருவது. பிருஹத் என்றால் பெரியது என்று அர்த்தம். பிருஹதீச்வரர், பிருஹந்நாயகி என்பவற்றைப் பெருவுடையார், பெரியநாயகி என்கிறோமல்லவா?உபநிஷத்துக்களுக்குள் பெரியது பிருஹதாரண்யகம். ஸாதாரணமாக ஒரு ஆரண்யகத்தின் முடிவிலே வருவதுதான் உபநிஷத். இதற்கு மாறுதலாக சுக்ல யஜுஸ் ஸம்ஹிதையிலேயே வருவது ஈசாவாஸ்ய உபநிஷத். அதே சுக்ல யஜுஸ்ஸில் ஒரு முழு ஆரண்யகமாக (ஆரண்யகத்தின் கடைசிப் பகுதியாக மட்டுமில்லாமல் முழு ஆரண்யகமாகவே) இருக்கிற உபநிஷத்துத்தான் பிருஹதாரண்யகம். இதில் இரண்டு பாடம் உண்டு.

மாத்யந்தின சாகையில் இருப்பது ஒன்று;காண்வ சாகையில் இருப்பது இன்னொன்று. பகவத்பாதாள் காண்வ சாகைப் பாடத்துக்கே பாஷ்யம் எழுதியிருக்கிறார்.

இதில் மொத்தம் ஆறு அத்யாயங்கள். முதல் இரண்டை மது காண்டம் என்றும், அடுத்த இரண்டை யாக்ஞவல்கியர் பெயரில் முனி காண்டம் என்றும், கடைசி இரண்டைக் கில காண்டம் என்றும் சொல்வார்கள். மது என்றால் ஆனந்த ரஸமாக இருப்பது என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். எல்லாம் பரமாத்ம ஸ்வரூபம் என்று தெரிந்து கொண்டால் லோகம் பூராவும் ஜீவர்களுக்கு மதுவாக இருக்கும். ஜீவர்களும் லோகத்துக்கு மதுவாக இருப்பார்கள். ஆத்மா ஸகலத்துக்கும் மது. இந்த விஷயம் மது காண்டத்தில் வருகிறது.

பிற்பாடு இதே உபநிஷத்தில்தான் (iv.4.22) ஆத்மா இப்படி இல்லை, இப்படி இல்லை என்று தள்ளித்தள்ளி, அதை இப்படி இருக்கிறது என்று வர்ணிக்க முடியாது;நமக்குத் தெரிந்த எதுவாகவும் அது இல்லை என்று சொல்லியிருக்கிறது. இதற்கு "நேதி நேதி" வாதம் என்று பெயர். "ந இதி"என்பது ஸந்தியில் "நேதி" என்றாகும். "ந இதி"என்றால் இவ்வாறு என்று சொல்வதற்கு இல்லாதது'என்று அர்த்தம்.

முதலில் இப்படி 'நேதி'கொள்கைப்படி பிரபஞ்சம், சரீரம், மனஸ் எல்லாவற்றையும் தள்ளிவிட்டுத்தான் வர்ணனாதீதமான ஆத்மாவை அறிந்துகொள்ள வேண்டும். அப்படி அறிந்து கொண்டதற்குப் பின் விவகாரத்தில் தோன்றுகிற லோகம், ஜீவர்கள் எல்லாமும்கூட அதே ஆனந்தரஸத்தால் ஆனதுதான் என்ற பாவம் உண்டாகும்.

இப்போது அநேக இடங்களில் ப்ரேயர் மாதிரிச் சொல்லப்படும் அஸதோ மா ஸத்கமய மந்திரம் பிருஹதாரண்யகம் ஆரம்ப அத்யாயத்திலேயே இருக்கிறது. (1.3.28) க்ஷத்ரிய ராஜாவான அஜாதசத்ருவிடம் கார்க்கியர் என்ற பிராம்மணர் உபதேசம் வாங்கிக்கொண்டது இரண்டாம் அத்யாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அஜாத சத்ரு, ஜனகர் போன்ற ராஜாக்கள் பிரம்ம ஞானிகளாக இருந்திருப்பது இதிலிருந்து தெரிகிறது. இதே போல் ஸ்திரீகளும் ராஜ ஸதஸில் ரிஷிகளுக்கு ஸமமாகக் கேள்விகள் கேட்டு வாதம் பண்ணிய 'ப்ரம்மவாதினி'களாக (பிரம்மத்தைப் பற்றி ஆராய்ந்து பேசுகிறவர்களாக) இருந்திருப்பதை, ஜனகரின் வித்வத் ஸதஸில் இருந்த கார்கி என்பவனைப் பற்றிச் சொல்கிறபோது தெரிந்து கொள்கிறோம்.

யாக்ஞவல்கியரின் இரண்டு பத்தினிகளில் ஒருத்தியான காத்யாயனி ஸாதாரண லௌகிக ஸ்த்ரீயாகவும், இன்னொருத்தியான மைத்ரேயி பிரம்மவாதினியாகவும் இருந்ததை இந்த உபநிஷத்து சொல்கிறது. யாக்ஞவல்கியர் மைத்ரேயிக்குப் பண்ணின உபதேசம் இந்த உபநிஷத்தில் மதுகாண்டம், முனிகாண்டம் இரண்டிலும் (2ம் அத்யாயம் 4ம் பிரிவிலும், 4ம் அத்யாயம் 5ம் பிரிவிலும்) கொஞ்சம் கொஞ்சம் வித்யாஸத்தோடு திருப்பிச் சொல்லப்படுகிறது. அது ரொம்பவும் அழகான கதையும் தத்வமும் சேர்ந்ததாக இருக்கிறது.

யாக்ஞவல்கியர் வீட்டை விட்டுவிட்டு ஸந்நியாஸியாகப் போவதற்கு உத்தேசம் பண்ணி, இரண்டு பத்னிகளுக்கும் சொத்தைப் பாகம் பிரித்துக் கொடுக்கிறார். காத்யாயனி சொத்திலேயே திருப்தி அடைந்து விடுகிறாள். ஆனால் மைத்ரேயியோ, இந்த சொத்திலெல்லாம் இல்லாத ஸெளக்கியம் ஸந்நியாஸத்தில் இருக்கிறது என்பதால்தானே இதைவிட்டு அதற்குப் போகிறீர்கள்?அப்படிப்பட்ட அந்த ஸெளக்கியம் என்ன?அதை எனக்கும்தான் எடுத்துச் சொல்லுங்களேன்!என்று கேட்கிறாள். அதற்கு யாக்ஞவல்கியர், c எப்போதுமே எனக்கு பிரியமானவளாக ஆகிவிட்டாய்!என்று சொல்லி, உபதேசிக்க ஆரம்பிக்கிறார். இந்தப் பிரியம் என்பது என்ன என்பதையே தத்வார்த்தமாக விஸ்தாரம் செய்கிறார்.

பதியிடம் பத்தினிக்குள்ள பிரியமும், பத்தினியிடம் பதிக்குள்ள பிரியமும், இப்படியே புத்திரரிடத்திலுள்ள பிரியமும், செல்வங்களில் உள்ள பிரியமும், எல்லாவிதமான பிரியங்களுமே எதனிடம் செலுத்தப்படுகின்றனவோ அந்தப் பதி, பத்தினி, புத்ரர், செல்வம், மற்ற விஷயங்கள் இவற்றின் பொருட்டாக உண்டாவதில்லை. இப்படிப் பிரியமாக இருப்பதால் ஒருவனுக்குத் தன் நிறைவு ஏற்படுகிறதல்லவா?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅவ்வாறு தன் ஆத்மாவுக்கு இது ஸந்தோஷம் உண்டாக்குகிறது என்பதால்சதான் எதனிடமும் பிரியத்தைச் செலுத்துகிறான். அப்படியானால் அந்த ஆத்மா அன்பு ஸ்வரூபமாக இருக்கிறது என்பதுதானே அர்த்தம்?அதை மட்டும் பிரித்துத் தெரிந்து கொள்வதற்காகத்தான் அதுவரை பிரியமாக இருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஸந்நியாஸியாகப் போவது. அதைத் தெரிந்து கொண்டபின், அதற்கு அந்நியமாக எதுவுமே இல்லை என்று ஆகிவிடும். எல்லாமும் பிரியமானதாகிவிடும். முதலில் சிலதில் பிரியம் வைத்தபோது, அதற்கு மாறான வேறு சிலதில் அப்ரியம் என்று இருந்தது.

இவை எல்லாவற்றையும் விட்டு விட்டு ஆத்மாவைத் தெரிந்து கொண்டு விட்டால் ஏற்றத்தாழ்வில்லாமல், எல்லாமே ஆத்ம ஸ்வரூபம் என்ற உணர்ச்சி ஏற்பட்டு, சிலதில் மட்டுமின்றி, எதனிடமுமே த்வேஷம் இல்லாமல் எல்லாமே ப்ரியமானதாகி விடும் என்று உபதேசம் செய்கிறார்.

Contd8
Source: subadra