வேதம் தசோபநிஷத்துக்கள் _ Part 8

இப்படி அவர் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளப் புறப்படுமுன் ஜனகராஜனின் சபையில் பரமாத்ம தத்வம் பற்றிக்கஹோளர், உத்தாலக ஆருணி, கார்கி ஆகியவர்களிடம் நடத்தின வாதங்களும், அப்புறம் ஜனகருக்குப் பண்ணின உபதேசங்களும் முணிகாண்டத்தில் சொல்லப்படுகின்றன. விசிஷ்டாத்வைதத்தில் விசேஷமாகச் சொல்லப்படும் அந்தர்யாமிக் கொள்கைக்கு ஆதாரம், உத்தாலக ஆருணிக்கு யாக்ஞவல்கியர் சொன்ன பதிலில் இருக்கிறது.

லோகம் முழுக்கவே மாயை என்று அத்வைதத்திலுள்ளபடி சொல்லாமல், லோகம் சரீரம் என்றால், அதற்கு உயிராக உள்ளே பரமாத்மா இருக்கிறார் என்பதுதான் அந்தர்யாமிக் கொள்கையின் முக்யமான கருத்து. இதை ஒரு குறிப்பிட்ட நிலையில் யாக்ஞவல்கியர் ஒப்புக்கொண்டு பேசினாலும், மற்ற சமயங்களில் பூர்ணமாக அத்வைதந்தான் சொல்கிறார். மைத்ரேயிக்கு உபதேசித்து முடிக்கும்போது பரம அத்வைதமாக, "கொஞ்சம் தனித்து த்வைதமாக இருந்தாலும், இன்னொன்றைப் பார்ப்பது, முகர்வது, ருசிப்பது, தொடுவது, கேட்பது, நினைப்பது என்றெல்லாம் ஏற்பட்டு விடும்.

ஆனால் ஆத்மாவை அநுபவத்தில் தெரிந்து கொள்கிற போது இந்த எதுவுமே இல்லை. எதனால்தான் பார்வை, கேள்வி, ருசி, வாஸனை, எண்ணம் எல்லாமே ஏற்படுகின்றனவோ அதை எப்படி, எதைக் கொண்டு பார்க்கவும் கேட்கவும், ருசிக்கவும், முகரவும், நினைக்கவும் முடியும்?"என்பதாக, அகண்ட ஏக உணர்வைத்தான் சொல்கிறார். ஜலத்தோடு கலந்து ஜலம் மாதிரிப் பரமாத்மாவுடன் அத்வைதமாக (ஒன்றாகி) விடுகிறான் என்றே ஜனகருக்கும் அத்வைதமாக உபதேசிக்கிறார். எல்லா ஆசைகளிலிருந்தும் விடுபட்டவ் சரீரத்தில் இருக்கிற போதே பிரம்மாக இருந்து கொண்டு, சரீரம் விழுந்த பிற்பாடு பிரம்மத்தோடு ஐக்கியமாகி விடுகிறான் என்றும் சொல்கிறார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இந்த உபநிஷத்தின் கடைசியில் வருகிற இரண்டு அத்தியாயங்களும் சிதறிக் கிடக்கிற பல ஸமாசாரங்களைச் சேர்த்துக் கொடுப்பதால் 'கில காண்டம்'என்று வழங்குகின்றன. ஒரு வஸ்து சிதைந்து போனால் அது கிலமாகிவிட்டது என்று சொல்கிறோமல்லவா?கொஞ்சங்கூட சிதையாமல் பூர்ணமாக இருப்பதுதான் அகிலம்.

ஸாதகர்களின் தராதரத்தைப் பொறுத்து, ஒரே உபதேசத்துக்கு மூன்று விதமான அர்த்தம் உண்டாவதைக் கில காண்டத்தில் உள்ள ஒரு கதை விளக்குகிறது. தேவஜாதி,மநுஷ்ய ஜாதி, அசுர ஜாதி ஆகிய மூவரும் பிரஜாபதியிடம் உபதேசம் வேண்டுகிறார்கள். அவர் "த"என்ற ஒரு எழுத்தை மட்டும் உபதேசமாகச் சொல்கிறார்.

புலனடக்கம் போதாத தேவர்கள் 'த'என்றால் 'தத்த'ஸ்வபாவமாகக் கொண்ட மநுஷ்யர்கள் 'த'என்றால் 'தாம்யத' (அடக்குங்கள்) என்று அர்த்தம் செய்து கொள்கிறார்கள். தனக்கென்று சேர்த்துக் கொள்வதையே ஸ்வபாவமாகக் கொண்ட மநுஷ்யர்கள் 'த'என்றால் 'தத்த' (கொடு, தானம் பண்ணு) என்று பொருள் கொள்கிறார்கள். குரூர குணம் படைத்த அஸுரர்கள் 'த'என்பதற்கு 'தயத்வம்' (தயையோடு இருங்கள்) என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள். பிருஹதாரண்யக உபநிஷத்தின் கடைசிப் பாகத்தில் வருகிற ஒரு மந்திரம் எனக்கு ரொம்பவும் ரஸமாக, ஆறுதலாகத் தோன்றுவதுண்டு. இந்த மந்திரம் என்ன சொல்கிறது?

"வியாதிக்காரன் ஒருத்தன் ஜ்வரதாபத்தில் கஷ்டப்படுகிறான் என்றால் அது பெரிய தபஸ். இப்படி நோய் நொடியைத் தபஸ் என்று ஒருத்தன் தெரிந்து கொண்டு விட்டானானால், அவனுக்கு உயர்ந்த பரலோகம் (மோக்ஷம்) கிடைத்துவிடுகிறது"என்று மந்திரத்தில் சொல்லியிருக்கிறது.

இப்படிச் சொன்னால் ஒன்றும் புரியவில்லையே!இதில் என்ன ரஸம், என்ன ஆறுதல் இருக்கிறது?என்று கேட்கலாம். சொல்கிறேன். விரதம், தபஸ் முதலியவற்றால் உடம்பை வருத்திக் கொள்வதால் சரீராபிமானம் விலகுவதோடுகூட, நம்முடைய பூர்வ பாபங்களும் தேய்கின்றன. பூர்வ கர்ம பாபம் போவதற்கு ஒரு பிராயச்சித்தமாகத் தபஸ் இருக்கிறது. முன்னே உடம்பால் நாம் பாபம் பண்ணினதால், அதே உடம்பால் சிரமப்பட்டு தபஸ் செய்தால் பாபம் போகிறது.

இதனால்தான் மஹான்களும் தபஸ் பண்ணியதாகப் புராணங்களில் வருகிறது. ஸாக்ஷத் ஜகன்மாதாவான அம்பிகையே பரமேச்வரன் வார்த்தையை eP தக்ஷனின் யக்ஞத்துக்கு வந்து அவமானப்பட்டு, அப்போதே பிராணத்தியாகம் செய்தபின், மறுஜன்மாவில் ஹிமவானுக்குப் புத்திரியாக அவதாரம் செய்தபோது, பூர்வத்தில் பதியின் உத்தரவை உல்லங்கனம் பண்ணியதற்கு (மீறியதற்கு) பிராயச்சித்தமாகத் தபஸ் பண்ணினால்தான் மறுபடி இந்த ஜன்மாவில் அவரை அடைய முடியும் என்பதால் ரொம்பவும் உக்ரமான தபஸுகளைப் பண்ணியிருக்கிறார்கள்.

(காளிதாஸனின்) குமார ஸம்பவத்தில் ரொம்ப அழகாக, மனஸை உருக்கும்படியாக இதை வர்ணித்திருக்கும். குளிர் காலத்தில் ஹிமயமலையில் எத்தனை குளிராக இருக்கும்?அந்த சமயத்தில் பனிப் பாறைகளின் மேல் உட்கார்ந்து கொண்டோ, பனியாக உறைந்து கொண்டிருக்கும் தடாகங்களுக்குள் நின்று கொண்டோ தபஸ் பண்ணுவாள். நல்ல கோடை வெயில் கொளுத்துகிறபோது, தன்னைச் சுற்றி நாலு பக்கமும் நெருப்பை மூட்டிக் கொண்டு தபஸ் பண்ணுவாள். நாலு பக்கம் நெருப்பும், மேலே ஐந்தாவது நெருப்பாக ஸரியனும் இருப்பதால், இதற்கு பஞ்சாக்னி தபஸ் என்று பேர்.

இம்மாதிரியான கடுமையான தபஸ்களை அநேக மஹான்கள் பண்ணியிருக்கிறார்கள். இப்போது நம் விஷயம் என்ன?அவர்கள் ஏதோ ஒரு தப்பு இரண்டு தப்பு பண்ணினார்களென்றால், நாம் பண்ணுகிற தப்புகளுக்கோ கணக்கு வழக்கே இல்லை. ஆனால், அவர்கள் செய்த தபஸில் கோடியில் ஒரு பங்குகூடப் பண்ண நமக்கு மனஸும் இல்லை, சக்தியும் இல்லை. இப்படியிருந்தால் நம் பாபம் போகிறது எப்படி?

Contd9
Source:subadra