Announcement

Collapse
No announcement yet.

பரிபூரண ஞானி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பரிபூரண ஞானி

    மனம் மகிழ்வோடு இருத்தலும், சாந்தமான போக்கும், மவுனமும், மனதை அடக்கி ஆளுதலும், உள்ளத்தூய்மையும் என்ற இவையெல்லாம் மனதால் செய்யும் தவத்தில் அடங்கும். மனம் தன் சஞ்சலத்தை காட்டும் போதெல்லாம் உடனுக்குடன் அடக்கி ஆன்ம வயப்படுத்திக் கொள்ள முற்பட வேண்டும். விரும்பியதை அடைந்து வரம்பின்றி மகிழ்தலும் ஆகாது.

    துன்பம் வந்தபோது மனம் சிதையவும் கூடாது. மன உறுதியுடன் மயக்கத்திற்கு இடம் கொடாமல் மெய்ப்பொருளை உணர்ந்து பிரம்ம நிலையில் நிற்க வேண்டும். மனதை ஒருமுகப்படுத்த முடியாதவனுக்கு அறிவும் ஆழ்ந்த சிந்தனையும் கிடையாது. ஆழ்ந்த சிந்தனையற்றவன் சாந்தியும் இன்பமும் பெறமுடியாது. மனதை அடக்கி இருந்தாலும் சில சமயங்களில் ஐம்பொறிகள் வழியாக ஆசை புயல்கள் எழுந்து மனிதனுடைய அடக்க சக்தியை வேரோடு பறிக்க முயல்வதுண்டு. அவன் தன்னுடைய மனத்திடத்தை அந்த புயலுக்கு பறிகொடுத்துவிடாமல் என்னை உறுதியாக பற்றிக்கொள்வானாக. பட்டினி கிடக்கும் மனிதனிடம் பலவித இச்சைகளும் அடங்கிப்போகின்றன.

    ஆனால் அவற்றை அடையவேண்டும் என்ற ஆசை மட்டும் அடங்குவதில்லை. கடவுளை நேரில் தரிசித்தாலன்றி அவற்றில் உள்ள ஆசை நீங்குவதில்லை. கோபத்தால் நினைவு தடுமாற்றம் ஏற்படுகிறது. நினைவு தடுமாறுகையில் மதிக்குழப்பம் உண்டாகிறது. மதிக்குழப்பத்தால் புத்தி அழிந்துவிடுகிறது. புத்தி அழிந்தவன் செத்தவனுக்கு சமமாகிறான். நுகரும் பொருட்களைப் பற்றி சிந்தித்தால் அவற்றின் மீது பற்று உண்டாகிறது. பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது.

    ஆசையிலிருந்து அடங்கா மோகம் உண்டாகிறது. மோகத்தால் சிந்தை கெடுகிறது; நினைவு அழிகிறது. நினைவு கெடவே, உயரிய லட்சியம் மறைந்து போகிறது. அப்போது மனிதன் அழிந்து விடுகிறான். புகையால் நெருப்பும், புழுதியால் முகப்பார்வையும் மூடப்பட்டு போகிறது. அதுபோலவே காமம் என்ற பகைவனால் மெய்யறிவும் மூடப்பட்டு விடுகிறது. தானம் அளித்தல் தன் கடமை என்னும் உணர்வோடு இடம், தகுதி, காலம் ஆகியவற்றையும் கவனித்து திரும்பத்தர இயலாதவனுக்கு அளிக்கும் தானம் சாத்வீக தானம் எனப்படும்.

    எதனால் மனதிற்கு வருத்தம் உண்டாகிறதோ, எதில் பிரதிபலன் எதிர்பார்க்கப்படுகிறதோ, எந்த தானம், விளைவில் கருத்துடன் அளிக்கப்படுகிறதோ அது ராஜஸ தானமாகும். மரியாதை இல்லாமலும், அலட்சிய புத்தியுடனும், தகாத இடத்திலும், தானம் பெறுவதற்கு தகுதியில்லாதவனுக்கும் தரப்படுவது தாமஸ தானம் ஆகும். மிகைப்பட உண்பவனுக்கு யோகம் இல்லை.

    உணவற்றவனுக்கு ஏகாந்த நிலை எய்தாது. மிகுதியாக உறங்குபவனுக்கும் அது கிடைக்காது. மிகுதியாக விழித்திருப்பவனுக்கும் அது இல்லை. இவற்றில் எல்லாம் அளவோடு இருப்பதே ஒருவகை யோகம். பசுவிடம் உள்ள பால், உண்மையில் அதன் சரீரம் முழுவதும் ரத்தத்தில் சத்தோடு சாரமாக கலந்து பரவி உள்ளது. என்றாலும் பால் மடியிலேயே சுரக்கிறது. அதுபோல் ஈஸ்வரன் உலகில் எங்கும் விரவியிருக்கிறான். எனினும் இதயத்தில் தியானத்தால் எழுந்தருளுகிறான்.

    பேசாமல் மவுனமாக இருப்பதே, நல்ல காரியம் செய்வதற்கு சாதகமான சந்தர்ப்பங்களை உண்டு பண்ணக்கூடியது. மரணமும் பிறப்பும் பெரியதொரு விஷயங்கள் எனக்கருதி குழம்பிப் போகவேண்டாம். மரணம் என்பது, உயிரானது வேறு ஒரு தேகத்தை சென்றடையும் நிகழ்வுதான். உயிருக்கு சாவு என்பது இல்லை. தினந்தோறும் கடலுக்குள் ஆறுகள் வந்து பாய்கின்றன. ஆனாலும் கடல்நீர் அதிகரிப்பதும் இல்லை. குறைவதும் இல்லை.

    அவ்வாறு இருப்பவனே பரிபூரண ஞானி. ஐம்பொறிகள் வழியாக அவனுடைய ஆன்மாவுக்குள் ஆசை வெள்ளங்கள் வந்து பாய்ந்தவண்ணமே இருக்கும். என்றாலும் அவனுடைய ஆன்மாவோ, வந்துசேரும் அந்த காணிக்கைகளை பெற்றுக் கொண்ட போதிலும், எப்போதும் ஒன்றுபோல அமைதியாகவே இருக்கும்.
    - கீதையில் கண்ணன்

    Source:KSR
Working...
X