வேதம் - வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்ன ? Part 1

வேதங்களில் அநேக விஷயங்களைப் பற்றிச் சொல்லியிருக்கும்போது, வேதாந்தமான உபநிஷத்தில் சொன்ன ஆத்ம ஸாக்ஷத்காரம்தான் வேதங்களுக்கு எல்லாம் முக்கியமான தாத்பர்யம் என்றால், எப்படி ஒப்புக்கொள்வது?

அக்னி ஹோத்ரம், ஸோம யாகங்கள், ஸத்ர யாகங்கள், இஷ்டிகள் என்கிற பல வேள்விகள், பல விதமான கர்மாக்கள், ஹோமங்கள் எல்லாம் வேதத்தில் இருக்கின்றன. இவைதான் வேதத்தின் லக்ஷியம் என்று ஏன் சொல்லக் கூடாது? கல்யாணத்தில் என்ன செய்ய வேண்டும்?சாவில் என்ன செய்ய வேண்டும்? எப்படி ராஜ்ய பரிபாலனம் பண்ணினால் நல்லது?ஸதஸில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?என்கிற மாதிரிப் பல விஷயங்களும்தான் வேதத்தில் வருகின்றன. இதில் எதை அதன் மையமான லக்ஷயம் என்பது?

யாகம், யக்ஞம் இவற்றையெல்லாம் தவிர, அநேக உபாஸனா மார்க்கங்கள் வேதத்தில் சொல்லப்படுகின்றன. தனித்தனியாகத் தியானம் சொல்லியிருக்கிறது. 'இந்த சரீரத்துக்குள் ஆத்மா எப்படிப் போகிறது, கடைசியில் சரீரம் என்னவாகப் போகிறது, திரும்பியும் மநுஷ்ய சரீரத்தில் எப்படியெல்லாம் பிரவேசிக்கிறது?'என்பன போன்ற விஷயங்களும் அதில் காணப்படுகின்றன.

இன்னும், சரீர ஆரோக்கியத்திற்கு வேண்டிய வைத்திய சிகித்ஸைகள், சத்ருக்களினால் ஹிம்ஸை வந்தால் அதை நிவருத்தி பண்ணுவதற்கான சாந்திகள், இப்படி வேறே பல சமாசாரங்களும் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது நமக்கு ஒரு கேள்வி உண்டாகிறது. அதாவது, "வேதத்தின் முக்யமான உத்தேசம் என்ன?எதற்காக வேதம் ஏற்பட்டுள்ளது?"

'எல்லா வேதங்களும் சேர்ந்து ஒரு பொருளைத்தான் சொல்லுகின்றன' என்று உபநிஷத் சொல்கிறது (கடோபநிஷத் II.15) . அந்த ஒரு பொருள் என்ன? 'ஒங்கார அர்த்தமாக இருக்கும்படியான ஒரு பரம்பொருளைத்தான் எல்லா வேதங்களும் சேர்ந்து சொல்கின்றன என்பது அந்த உபநிஷத்து வாக்கியம்.

வேதம் வெவ்வேறு விஷயங்களைச் சொல்கிறதே!வெவ்வேறு தேவதைகளைப் பற்றியும் சொல்லுகிறதே என்று நமக்குச் சந்தேகம் வருகிறது. ஜட்ஜ் ஸதாசிவ ஐயர் என்று ஒருவர் இருந்தார். மைசூர் ராஜ்யத்தில் இருந்த பரமசிவ ஐயர் அவர் சகோதரர். வேதங்கள் என்றால் பௌதிக சாஸ்திரந்தான். வேதம், ஜியாலஜியைப் பற்றியே (நில இயல்) சொல்கிறது என்று இந்த பரமசிவ ஐயர் எழுதியிருக்கிறார். இன்னும் பலபேர் பல பிரகாரமாகச் சொல்கிறார்கள். அந்தக்காலத்தில் இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஸர்யனையும், சந்திரனையும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அதிகமாக விஞ்ஞானம் விருத்தி அடையாத காலம் அது.அதனால் அவரவர்களுக்குத் தகுந்தாற்போல், அவரவர்கள் இயற்கைத் தோற்றங்களைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அதிகமாக விஞ்ஞானம் விருத்தி அடையாத காலம் அது. அதனால் அவரவர்களுக்குத் தகுந்தாற்போல், அவரவர்கள் இயற்கைத் தோற்றங்களைப் பார்த்துப் பல விஷயங்களைச் சொன்னார்கள். அதைப் பாட்டாகப் பாடும்படியான சக்தி எல்லாருக்கும் இல்லை;சில பேருக்குத்தான் இருந்தது. இவர்கள் பாடிய பாட்டுக்களையே மந்திரங்கள் என்று தொகுத்து வேதமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சில வெள்ளைக்காரர்கள் அபிப்ராயப் படுகிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்த்தால், எல்லா வேதமும் ஒரு பொருளைத்தான் சொல்கிறது என்று உபநிஷத்துக்கள் சொன்னாலும், வெவ்வேறு பதார்த்தத்தைத்தான் அது சொல்வதாகத் தெரிகிறதே தவிர, ஒரு பொருளைச் சொல்வதாக நமக்குத் தோன்றவில்லை.

ராமாயணத்தைப் பற்றி ஒரு ச்லோகம் இருக்கிறது;

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே|
வேத:ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷத் ராமாயணாத்மநா||

"வேதவேத்யே"- வேதத்தினால் அறிய்பபட வேண்டிய ஒருவன். அவன் யார்?" பரே பும்ஸி"- பரம புருஷன். வேதத்தினாலே அறியப்பட வேண்டிய பரம புருஷன். வேதத்தினாலே அறியப்பட வேண்டிய பரம புருஷன் ராமனாக உலகில் அவதாரம் செய்தான். அவன் தசரதனுடைய குழந்தையாக வந்தவுடன்,வேதம், ராமாயணமாக அவதாரம் பண்ணுவோம் என்று வால்மீகியின் குழந்தையாக வந்தது!இதுதான் மேலே சொன்ன சுலோகத்தின் அர்த்தம். இங்கேயும் பரம்பொருள், அல்லது பரம புருஷன், அல்லது ஒங்காரம் என்கிற ஒரே ஸத்ய தத்வம்தான் எல்லா வேதங்களுக்கும் பொதுவான லக்ஷியம் என்று தெரிகிறது. கடோபநிஷத்தில் "ஸர்வே வேதா:" என்று சொன்னாற் போலவே, கீதையிலும் பகவான் "வேதைச்ச ஸர்வை:அஹம் ஏவ வேத்ய:" - எல்லா வேதங்களாலும் நானே அறியப்படுகிறேன்" என்கிறார்.

Contd2
Source:subadra


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends