Announcement

Collapse
No announcement yet.

வேதம் - வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேதம் - வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்

    வேதம் - வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்ன? -2

    இவற்றையெல்லாம் பார்க்கிறபோது, "வேதத்தில் அநேக சமாசாரங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் வேதங்கள் எல்லாம் சேர்ந்து பொது லக்ஷ்யமாக எல்லாம் சேர்ந்து பொது லக்ஷ்யமாகச் சொல்வது ஒரு பொருளைத்தான்"என்று ஆகிறது.

    "அப்படியானால், ஒரு பொருளைச் சொல்வதற்கு அநேகம் பொருளை வேதம் எதற்காகச் சொல்கிறது?"என்று நமக்குத் தோன்றும். அநேகம் பொருள்கள் மூலமாகத்தான் அந்த ஒரு பொருளை அறிய முடியும். யோகம், தியானம், தபஸ், யக்ஞம், கர்மாநுஷ்டானம், கல்யாணம் முதலான சடங்குகள், ராஜ்ய நிர்வாகம், சமூக வாழ்க்கை, கவிதை ஆகிய இவை எல்லாம் முடிந்த முடிவில் சுட்டிக்காட்டுகிற ஒரு பொருள் எதுவோ அந்த ஒரு பொருள்தான் வேதத்தின் உண்மையான தத்துவமாக இருக்கிறது.

    அந்த உண்மையான பொருள் ஒன்றைத் தவிரப் பாக்கி எல்லாம் மாறி மாறிப் போகும்படியான பொருள்கள்; பின்னால் அந்தக் கதையும் மறைந்து போகிறது. ஒன்று தெரியாமல் பலவான லோகம்தான் நமக்குத் தெரிகிறது?அதனால், நமக்குத் தெரிகிற ஒவ்வொன்றையும் காட்டி, அதன் மூலமே ஒன்றுக்கு அழைத்துக் கொண்டு போவதற்காகத்தான் வேதம் பல பல விஷயங்களையும் சொல்கிறது.

    வேதத்தினால் சுட்டிக் காட்டப்படுகிற மெய்யான ஒரு பொருளை அறிந்து கொள்ள வேண்டுமானால், அந்த ஒன்றைப் பற்றிய நினைவு நமக்கு வருவதற்குச் சித்தத்திற்குச் சில பழக்கங்கள் ( disciplines) வரவேண்டும். யாகங்கள் பண்ணுவது, தபஸ் பண்ணுவது, தானதர்மங்களை செய்வது, கோபுரம் கட்டுவது, குளம் வெட்டுவது, சமூக கார்யங்கள், கலியாணம் முதலான ஸம்ஸ்காரங்கள் ஆகிய எல்லாம் சித்தத்தைச் சுத்திசெய்து, சித்த விருத்தி நிரோதம் (ஒடிக் கொண்டே இருக்கும் மனஸை அடக்கல்) செய்வதற்காகத்தான். பல்வேறு கர்மாக்களின் நோக்கம் ஒரே பரமாத்மாவை அடைவதற்குத் துணைபுரிவதுதான்.

    "வேத" என்றால் அறிவது. 'எந்த ஒன்றை அறிந்து கொண்டால், அனைத்தையும் அறிந்து கொண்டதாகுமோ அதுதான் ஆத்மா;ஆஸாமியை அடையாளம் காட்டுகிற அடிச்சுவடு மாதிரிதான் மற்ற எல்லாமும் அந்த ஒன்றுக்கு அடிச்சுவடுகள் என்று உபநிஷத்து சொல்கிறது.

    அப்படிப்பட்ட ஆத்மாவைப்பற்றி அறிவிப்பதுதான் வேதத்தின் லட்சியம். வேத ஆரம்பத்தில் வருகிற கர்மாவாகட்டும், முடிவில் வருகிற ஞானமாகட்டும், இரண்டுக்குமே - விஷயமாக இருப்பது ஈச்வரன், பிரம்மம், ஆத்மா என்றெல்லாம் சொல்லப்படுகிற ஒன்றுதான். ஸ்வாமிக்கு புஷ்பம் போடும்போது கூறும் மந்திர புஷ்பத்தின் போதும், ஒரு மஹானை வரவேற்கும் போதும், நாம் "யோ வேத (ஆ) தௌ ஸ்வர:ப்ரோக்தோ வேதாந்தே ச ப்ரதிஷ்டித:"என்கிறோமே, இது மேலே சொன்னதற்கு proof தான். வேதத்தின் ஆதியிலும் (ஆரம்பத்திலும்) , அந்தத்திலும் (முடிவிலும்) பிரதிஷ்டையானது ஒரே மஹா தத்வமான ஈச்வர தத்வம்தான் என்று இந்த மந்திரம் சொல்கிறது. ஆரம்பத்தில் வரும் கர்மா முடிவில் வருகிற ஞானம் இரண்டுக்கும் லட்சியத்தில் கொஞ்சம்கூட வித்யாஸமில்லை என்று இங்கே ஸ்பஷ்டமாகத் தெரிகிறது.

    அநேக ஆயிரம் தினுசாகப் பிரிந்திருக்கும் கர்மா, ஒன்றே ஒன்றாயிருக்கிற ஞானம் இரண்டுக்கும் பொதுவாக - அதாவது வேதம் முழுவதற்கும் subject -ஆக- இருப்பது ஒன்றுதான். ஆத்மாவைப் பார்த்துக் கொள்ள முடியாமல் வெளிப்பார்வை உள்ளதாகவே, வெளி வஸ்துக்களை நோக்கி ஒடுவதாகவே இந்திரியங்கள் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன. இதைக் கடோபநிஷத்தும் (iv.1) சொல்கிறது. விஷயத்தைக் கவனிக்காமல், வேறு எதையாவது பார்ப்பதை பராக்குப் பார்ப்பது என்கிறோமல்லவா?ஆத்மா ஒன்று தான் விஷயம். அதைவிட்டு வெளியிலே பார்ப்பதைத்தான் பரா (ங்) முகம் என்பது. அதுதான் பராக்குப் பார்ப்பது. இதைத் தான் கடோபநிஷத் சொல்கிறது.

    அப்படிப் பராக்குப் பார்க்காதே என்றால் மனஸ் அடங்காது. அதனால் வெளிக்காரியங்களைப் பண்ணிப் பண்ணித்தான் உள்ளே பார்த்துக் கொள்ளும்படியாந பக்குவத்தை அடைய வேண்டும்.

    இந்திரியங்களும், மனஸும் இழுக்கிற இழுப்புக்கெல்லாம் ஒடாமல் வைதிக கர்மாக்களை நிறையச் செய்யச் செய்யத்தான், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே பார்த்துக் கொள்கிற பக்குவம் உண்டாகும். மற்ற விஷயங்களையெல்லாம் அறிந்து, சோதித்து, சீர்தூக்கிப் பார்த்த பின்தான், எல்லாவற்றையும் அறிகிற அறிவை, எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ, அதைப் பிடிக்க முடியும். இதற்காகத்தான் அநேக வித்தைகளை, உபாஸனைகளை, கர்மாக்களை, கலைகளை, Social duty -களை வேதத்தில் சொல்லியிருக்கிறது. சரீரத்தால் கர்மா பண்ணிப் பண்ணியே சரீராபிமானத்தைக் கரைக்க வேண்டும்.

    பல வித்தைகளைச் சிந்தனைப் பண்ணியும் தத்வங்களை ஆராய்ச்சி பண்ணியும், உபாஸனைகள் பண்ணியுமே மனஸ், புத்தி இவற்றைக் கரைக்க வேண்டும். கெட்ட காரியம் செய்வதில் சரீராபிமானம் ஜாஸ்தியாகும். துர்விஷயங்களை ஆராய்வதால் மனஸின் தடிப்பு ஜாஸ்தியே ஆகும். மாறாக, மந்திர பூர்வமான, லோக க்ஷேமமான வைதிக கர்மாக்கள், வைதிக உபாஸனைகள் இவற்றை அநுஷ்டிக்கிறபோது, சரீரம் சித்தம் இவற்றின் ஆக்ரஹம் தளர்ந்து கொடுக்கிறது.

    முடிவிலே உள்ளே பார்த்துக் கொள்வதற்கான முதிர்ச்சி, பரிபக்குவம் உண்டாகிறது. அப்படிப் பார்த்துக் கொண்டபின், இங்கேயே ('இஹைவ') மோட்ச ஆனந்தத்தைப் பெறுகிறான். மோட்சம் என்றால், 'விடுபட்ட நிலை', 'விடுதலை'என்று அர்த்தம். எதிலிருந்து என்றால் ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை. சரீரமும் மனஸும் 'தான்'இல்லை என்று அவற்றிலிருந்து உபநிஷத்து சொன்னபடி விடுவித்துக் கொண்டுவிட்டால், ஸம்ஸாரத்திலிருந்தும் விடுதலையாகி விடுகிறது.

    Contd…3

    Source: subadra
Working...
X