வேதம் - வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்ன? -3


இந்த லோகத்திலேயே மோட்சத்தை ஸம்பாதித்துக் கொடுப்பதுதான் வேதங்களின் உத்தேசம். அதுதான் அதன் பெருமையும். இதர மதங்களில் இருப்பதுபோல், செத்துப்போனபின் பரலோகம் போய்தான் மோட்சம் என்றால், அந்த மோட்சம் எப்படியிருக்கும் என்று இங்கே நாம் தெரிந்து கொள்ள முடியாது. அதை அடைந்தவர்களும் திரும்பிவந்து தங்கள் அநுபவத்தை நமக்குச் சொல்ல மாட்டார்கள்.

அதனால் அப்படி ஒன்று உண்டா என்று ஸந்தேஹமும் அவநம்பிக்கையும் ஏற்படலாம். ஆனால் இந்த லோகத்திலேயே, ஆசைகளுக்கெல்லாம் ராஜிநாமா கொடுத்துவிட்டு, ஆத்ம விசாரம் பண்ணினால் மோட்சம் இப்போதே ஸ்வயம் ஸித்தமாக இருக்கிறது என்று வேதம் சொல்வதால், அது ஸந்தேஹத்துக்கு இடமில்லாத ஸத்தியத்தையே சொல்கிறது என்று ஏற்படுகிறது.மற்ற மார்க்கங்கள் மலேரியாவுக்குக் கொய்னா கொடுத்து அப்போதைக்கு ஜ்வரத்தை இறக்குகிற மாதிரி தற்கால சாந்தி கொடுக்கின்றன.

மறுபடி ஒரு போதும் அந்த ஜ்வரம் வராதபடி செய்யவேண்டுமானால், வியாதியின் மூல காரணத்தையே கண்டுபிடித்து அதை அழிக்க வேண்டும். இப்படியே ஜீவனின் மூலம் என்ன என்கிற இடத்துக்கே போய், பரமாத்மாவிலிருந்து இப்படி அது பிரிகிற மூலத்தையே அடைந்து, பேதத்தை அழிப்பது வேத மதம்தான். அதுதான் தற்கால சாந்தியாக இல்லாமல் சாச்வத மோட்சமாக இருப்பது.

வேதத்தின் கர்மகாண்டத்தில் சொல்லியிருப்பதெல்லாமும் தற்கால சாந்திதான். ஆனாலும் எப்போதும் ஒரே அசாந்தியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறவனை, எடுத்த எடுப்பில் ஆத்மாராமனாக, பிரசாந்தனாக ஆக்கிவிட முடியாது. அதனால், தற்கால சாந்தியைத் தருகிற கர்மாக்களைக் கொடுத்திருக்கிறது. இவற்றால் சாச்வத சாந்திக்கு வேண்டிய qualification - ஆன (யோக்யதாம்சமான) சித்த சுத்தியும் ஏற்படுகிறது. யக்ஞம், விரதம், பூர்த்தம் என்கிற பொதுத்தொண்டு போன்றவற்றையும் வேதம் விவரமாக விதித்தாலும், இது ஒவ்வொன்றையுமே முடிந்த முடிவாகக் கொள்ளவில்லை.

இவற்றில் சரீரத்தைக் கிருசம் பண்ணுவதும் (மெலிவிப்பதும்) , இவற்றிலேயே மனஸைச் செலுத்துவதால் மனம் ஒருமுகப்படுவதும் நம் சித்த மலத்தை நீக்க வழியாகிறது என்பதற்காகவே இவை விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆக வேதங்களில் அநேக ஸமாசாரங்கள் நீள நெடுகச் சொல்லப்பட்டிருந்தாலும், அவை எல்லாமும் முடிவான வேதாந்தத்தில் சொல்லப்பட்ட ஞான விசாரத்தில் கொண்டு விடுவதற்காக ஏற்பட்டவைதான்.


முடிவில் சொல்வதுதான் தீர்மானம். ஒரு பத்திரிக்கையில் வந்திருக்கும் ஒருவருடைய பிரசங்கம் அல்லது கட்டுரையைப் படித்து அவர் என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். அவர் நிறையப் பேசியிருக்கிறார். அல்லது எழுதியிருக்கிறார். எல்லாவற்றையும் படிக்க நேரம் இல்லை. அதனால் ஆரம்பத்தை படித்து விட்டு சட்டென்று அதனுடைய கடைசிப் பாராவைப் பார்க்கிறோம். முதலில் கொஞ்சம் பார்த்து விட்டு, அப்புறம் கடைசியில் இருப்பதைப் படித்துவிட்டால் போதும். அவர் எந்த கட்டுரையில், அல்லது பிரசங்கத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்பது ஒரு விதமாகத் தெரிந்துவிடும். ஆரம்பத்தையும் முடிவையும் படித்துவிட்டே அதில் என்ன விஷயம் இருக்கும் என்று தீர்மானம் பண்ணிவிடலாம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇந்த மாதிரி "வேத ஆதௌ" விலும் (வேத ஆரம்பத்திலும்) "வேதாந்தே ச"விலும் (வேத முடிவிலும்) ஒரே பரமாத்மாவான ஈச்வர தத்வத்தையே சொல்லியிருப்பதால் அதுவே வேதத்தின் ஸப்ஜெக்ட் ஆகிறது.

சர்க்காரில் அநேக சட்டம் பண்ணுகிறார்கள். ஆனால் அந்தச் சட்டங்களின் அபிப்ராயங்களைப் பற்றியே சில சமயங்களில் சிக்கல்கள் வந்து விடுகின்றன. அப்போது சட்டத்துக்கு வியாக்கியானம் இப்படித்தான் என்று இன்னொரு சட்டம் வகுத்து, அதன் மூலம் நிர்ணயம் செய்கிறார்கள். இதை Law of interpretation என்கிறார்கள். இப்படியே ஈச்வரனின் நிரந்தரச் சட்டமான (Eternal Law - ஆன) வேதங்களின் தாத்பர்யத்தை நிர்ணயம் செய்ய, மீமாம்ஸை என்ற சாஸ்திரம் வியாக்கியான சட்டமாக ( Law of Interpretation -ஆக) இருக்கிறது. பதினான்கு வித்யாஸ்தானங்களில் ஒன்றான மீமாம்ஸையைப் பற்றி மற்ற விஷயங்கள் பின்னால் சொல்லுகிறேன். இப்போது ஒரு ஸமாசாரத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.

வேத வாக்கியம் ஒன்றுக்கு இன்னதுதான் அர்த்தம் என்று நிர்ணயம் பண்ணுவதற்கு, மீமாம்ஸா சாஸ்திரத்தில் ஆறு வழிகள் சொல்லியிருக்கின்றன. அந்த ஆறு, உபக்ரம-

உபஸம்ஹாரௌ அப்யாஸ: அபூர்வதா பலம்|
அர்த்தவாத உபபத்தீ ச லிங்கம் தாத்பர்ய நிர்ணயே||

என்று சொல்லியிருக்கிறது.

உபக்ரம - உபஸம்ஹாரம், அப்யாஸம், அபூர்வதா, பலம், அர்த்தவாதம், உபபத்தி என்பனவே இந்த ஆறு. வேதம் மட்டுமின்றி, எந்த ஒரு கட்டுரை அல்லது பிரவசனத்துக்கும் உத்தேசம் என்ன என்று கண்டுபிடிக்க இந்த ஆறும் உதவி செய்கின்றன.

உபக்ரமம் என்றால் ஆரம்பம். உபஸம்ஹாரம் என்றால் முடிவு. ஆரம்பத்தையும் முடிவையும் சேர்த்து ஒன்றாகப் பார்ப்பது உபக்ரம-உபஸம்ஹாரம் என்ற முதல் வழி. இரண்டும் ஒன்றையே சொல்வதாக இருந்தால், அதுவே தாத்பர்யம் என்று நிர்ணயம் பண்ணி விடலாம். அப்யாஸம் என்றால் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவது. திரும்பத் திரும்பத் தண்டால் போடுவதால் அதை தேகாப்யாஸம் என்கிறோம். ஒரு பிரஸங்கத்தில் அல்லது வியாஸத்தில் ஒரு விஷயம் பலமுறை திருப்பிச் சொல்லப்பட்டால் அதுதான் அதற்கு விஷயம் என்று தெரிகிறது.

அபூர்வதா என்றால், பூர்வத்த்தில் சொல்லாமல் புதிதாகச் சொல்வது. ஏற்கெனவே சொன்னதை அல்லது எழுதினதைக் காட்டிலும், புதிதாக ஒரு விஷயத்தைக் கொடுத்தால், இதுவே தாத்பர்யம் என்று தெரிகிறது. இப்படிச் செய்தால் இந்தப் பலன் கிடைக்கும் என்று சொன்னால், இப்படிச் செய்து இந்தப் பலனை அடை என்று சொல்வதாகவே ஆகும். அதாவது இந்தப் பலனை அடைவிப்பதுதான் உத்தேசம் என்று தெரிகிறது.

பலம் என்பது இதுவே. அநேக ஸமாசாரங்களைச் சொல்லி, அவற்றைத் தழுவியதாக ஒரு கதை சொல்லி, அதன் மூலம் ஒரு விஷயத்தை பெருமைப்படுத்தினால், பெருமைப்படுத்தப் படுகிற விஷயமே நமக்கு தாத்பரியம் என்று தெரிகிறது. இதுதான் 'அர்த்தவாதம்' என்பது. ஒன்றைச் சொல்லி அதற்குக் காரண நிரூபணம், பொருத்தம் முதலியன விளக்கப்பட்டிருந்தால், அந்த விஷயந்தான் முக்யமான கருத்து என்று ஏற்படுகிறது. இந்த முறைக்கு 'உபபத்தி' என்று பெயர்.

Source:subadra